இரு மரணங்கள் – சமூகத்தின் இருவித நிலைப்பாடுகள்!

நடிகரும், கலை உலக மேதாவியுமான சத்யேந்திராவின் மறைவு. பிரபல நடிகர் அஜித்தின் தயார் மோகினியின் மறைவு.

இவை இரண்டையும் இந்தச் சமூகம் எப்படி அணுகியது என்பது பல பட்டவர்த்தனமான உண்மைகளை நமக்கு முகத்தில் அறைந்தார் போலப் படம் பிடித்துக் காட்டுகிறது;

யேங்கப்பா! எத்தனையெத்தனை வித உருக்கமான பதிவுகள் மறைந்த கலைஞன் சத்யேந்திரா குறித்து!

உலக சினிமாக்களை கரைத்துக் குடித்தவர், சினிமா அறிவு நிரம்பப் பெற்றவர்.

பன் மொழிப் புலமையாளர், பாசாங்குத்தனமற்ற நிஜமான மனிதன், சினிமாவையே உயிர்மூச்சாகக் கருதி வாழ்ந்த ஒரு ஏழைக் கலைஞன் என்பது தான் அவர் குறித்து பலரும் வெளியிட்ட பதிவுகளின் சாராம்சம்.

ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் 1988 தொடங்கி நானும் இவரை ஓரளவு அறிவேன்.

ரஷ்யன் கல்சுரல் செண்டர், மாக்ஸ்முல்லர் பவன், தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை திரையரங்கு, அமெரிக்க தூதரக நூலகம் ஆகிய இடங்களில் இவர் எனக்கு ஓரளவு பரிச்சயமானார்.

எல்லோரும் எழுதிக் குவித்து என்ன பயன்?

முக நூல்கள் முழுவதும் நிரம்பி வழிகின்ற அளவுக்கு பல பதிவுகள் வந்ததையடுத்து மெயின்ஸ்டீரீம் ஊடகங்களும் சத்யேந்திராவை பற்றி எழுதி தள்ளிவிட்டன.

ஆனால், 40 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத் துறையில் இயங்கிய ஒரு அறிவார்ந்த கலைஞனின் உடலை அடக்கம் செய்ய அந்தத் துறை சார்ந்த அமைப்புகளோ, தனி நபர்களோ யாரும் முன்வரவில்லை என்ற யதார்த்தம், சமூகத்தின் முகத்தில் பேயறைந்தார் போல பேரதிர்ச்சி தருகிறது.

பணம் இல்லாதவன் இறந்தால், அவன் பிணத்திற்கு என்ன மரியாதை? என்பது சத்யேந்திரா மரணத்தில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுவிட்டது.

நடிகர் சங்கத்தில் உறுப்பினர் இல்லையாம்!

நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சுமார் ஒன்றே கால் லட்சம் கட்ட வேண்டும். அவரிடம் ஏது பணம் என்றார், சினிமா பத்திரிகையாளர் சரவணன்.

நடிகர் சங்கத்தில் உறுப்பினர் இல்லையென்றாலும், சத்யேந்திரா ஒரு நடிகர் என்பதும் சுமார் 150 படங்கள் வரை நடித்தவர் என்பதும் பொய்யாகிவிடுமா? என்ன?

ஆனால், சத்யேந்திராவை அறிவு ஜீவித்தனமான நடிகர்கள் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இன்றைக்கு பிரபல்மாக இருக்கும் சுமார் ஒரு டஜன் நடிகர்கள் சத்யேந்திராவிடம் மணிக் கணக்கில் உலக சினிமா குறித்து உரையாடி தகவல்கள் பெற்றுள்ளனர்.

அவ்வளவு ஏன்? நடிகர் சங்கத் தலைவர் நாசர், சத்யேந்திராவை மிக நன்றாக அறிவார்.

நாசருக்கு சத்யேந்திராவுடன் பல வருட பழக்கம் உள்ளது என்பது திரையுலகில் பலருக்கும் தெரியும். ஆனாலும் நாசர் ஒரு இரங்கல் அறிக்கை கூட தந்ததாகத் தெரியவில்லை.

பிரேமலதா ஒருவர் தான் சத்யேந்திரா மறைவுக்கு அஞ்சலி அறிக்கை தந்த ஒரே பிரலபமாகும்.

ஒரு அற்புதமான அனாதைக் கலைஞனை எடுத்து நடிகர் சங்கம் அடக்கம் செய்திருக்கக் கூடாதா..? என்ற ஆதங்கம் மனதை வாட்டுகிறது.

சத்யேந்திராவை அனாதைகளை அடக்கம் செய்யும் உதவும் கரங்கள் எடுத்து செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலை உருவானதை எப்படி புரிந்து கொள்வது?

இதோ நடிகர் அஜித்தின் தாயர் மறைவுக்கு போட்டி போட்டுக் கொண்டு திரையுலக அமைப்புகளும், பிரபலங்களும் வரத் தயார் ஆகிறார்கள் என்பதை அறிந்து அஜித் தன் மானேஜர் மூலம் யாரும் வர வேண்டாம் போனில் தொடர்பு கொண்ட அனைவருக்கும் ஸ்டிரிக்டாக சொல்லச் சொல்லி உள்ளார்.

தன் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே வந்தால் போதுமானது என்பது அவர் நிலைபாடாக இருந்த போதிலும் திரையுலகில் நாசர் உள்ளிட்ட பலரும், சில அரசியல்வாதிகளும் வலிந்து சென்று அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

எல்லா கட்சித் தலைவர்களும் இரங்கல் அறிக்கை தந்துள்ளனர். இந்த இரங்கலின் நோக்கம் ஒரு பிரபல நடிகரின் இறப்பில் தாங்களும் வெளிச்சம் அடைய வேண்டும் என்பது மாத்திரமல்ல, அவரது லட்சோப லட்ச ரசிகர்களின் நன் மதிப்பையும், ஆதரவையும் பெறுவது தான்.

ஊடகங்களை அஜித் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்றாலும் வாசலில் நின்று கொண்டு போவோர், வருவோரைக் காட்டி நேரலை செய்கின்றன, தொலிஅகாட்சி ஊடகங்கள்!

இந்த சினிமா உலகத்தின் போலித்தனமான அனுதாபங்கள் தனக்கு தேவையில்லை என உறுதியாக இப்படி ஒரு நிலைபாடு எடுக்கும் துணிச்சல் அஜித்தை தவிர யாருக்கும் வராது..என்று தான் தோன்றுகிறது.

அஜித்தின் தாயார் மோகினி தன் குடும்பத்திற்காக, தன் கணவர், தன் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து மறைந்த எல்லா அம்மாக்களையும் போன்ற ஒரு சாதாரணக் குடும்பத் தலைவி. இது தவிர அவரை குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது.

ஒரு பிரபல கதையில் ஒரு செல்வக்கான அதிகாரி வளர்க்கும் அவரது செல்ல நாய் இறந்து போனதற்கு அந்த ஊரே திரண்டு சென்று சென்று வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தியதாம்.

அந்த அதிகாரி ஓய்வு பெற்ற அடுத்த நாளே இறந்து போனாராம். அப்போது எந்த ஒரு நாயும் கூட அந்த ஊரில் அவருக்கு அஞ்சலி செலுத்த போகவில்லையாம்.

இது தான் இன்றைய உலகின் யதார்த்தம் மாத்திரமல்ல, என்றைக்கும் மாறாத யதார்த்தம்.

அங்கீகாரமின்றி வாழ்ந்து மறைந்தாலும், தன்னைக் குறித்து பலரும் சிந்தித்து, வருந்தி நினைக்கத்தக்க ஒரு வாழ்க்கையை சத்தியேந்திரா வாழ்ந்துள்ளார் என்பது நிஜம்.

சாவித்திரி கண்ணன்

நன்றி: அறம் இணைய இதழ்

Comments (0)
Add Comment