திரைக்கதையில் கோட்டைவிட்ட ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’!

கவுசிக், பிரதிபா, அருள் சங்கர், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு நடிப்பில், அலெக்ஸ் பாண்டியன் என்பவர் இயக்கி இருக்கும் படம். ஸ்ரீ லக்ஷ்மி ட்ரீம் ஃபேக்டரி சார்பில் பிரபாகர் ஸ்தபதி தயாரித்து இருக்கிறார்.

கதிர்வேலன் என்ற இளைஞன் (கௌஷிக்) கிறிஸ்டினா (பிரதிபா) என்ற பெண்ணை ஒரு கோவில் திருவிழாவில் பார்த்து, அவள் மேல் காதல் கொள்கிறான். அவளும் அவனை கவனிக்கிறாள்.

வெளிநாட்டுக்கு வேலைக்குப் போவதற்கான ஏற்பாடுகளில் இருக்கும் கதிர்வேலன், கிறிஸ்டினா ஒரு கல்லூரியில் படிப்பதை அறிந்து, வெளிநாடு போகும் எண்ணத்தைக் கைவிட்டு, அவளது கல்லூரியில் சேர்ந்து அவளது வகுப்புக்கே போகிறான்.

அவளும் அவனிடம் பேசுகிறாள். அவன் காதலிப்பதும் அவளுக்குத் தெரிகிறது. அவள் மறுக்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை.

இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் வேறு ஒரு மாணவனும் மாணவியும் காதலிக்க, சாதி வேறுபாடு காரணமாக அவர்களது பெற்றோர்கள் கல்யாணத்துக்கு மறுக்க, அவர்கள் குடும்பங்களுக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள்.

சாட்சிக் கையெழுத்து போடுவதற்காக கதிர்வேலனும் கிறிஸ்டினாவும் தங்களது ஆதார் கார்டு  மற்றும் ரேஷன் கார்டைத் தருகிறார்கள்.

கிறிஸ்டினாவுக்கு குடும்பத்தார் பார்த்தபடி ஒரு கிறிஸ்தவ மணமகனோடு சர்ச்சில் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதனால் கதிர்வேலன் மனம் நொறுங்கிப் போகிறான்.

கிறிஸ்டினாவின் உறவினரான சர்ச் ஃபாதர் ஒருவருக்கு கதிர்வேலனுக்கும் கிறிஸ்டினாவுக்கும் பதிவுத் திருமணம் நடந்து விட்டதற்கான சான்றிதழ் கிடைக்கிறது.

அது கிறிஸ்டினாவுக்கு தெரிவிக்கப்பட, அவள் சாட்சிக் கையெழுத்துப் போட தனது அடையாள அட்டைகளைக் கொடுத்ததைச் சொல்கிறாள்.

கதிர்வேலனின் அப்பா இறந்து போக, அந்த சமயத்தில் அங்கு வந்த – கிறிஸ்டினாவின் உறவினரான – ஒரு போலீஸ் அதிகாரி கதிர்வேலனை நையப் புடைக்கிறார். கிறிஸ்டினாவின் மனம் இளகுகிறது.

கல்யாணம் செய்து கொள்ளும் ஆட்கள் கூட நேரில் வராமலேயே பணம் வாங்கிக் கொண்டு திருமணப் பதிவு செய்யும் ஊழியர்கள், அந்த வகையில் சாட்சியாகப் போன கதிர்வேலனையும் கிரிஸ்டினாவையும் கல்யாண ஜோடியாக்கி சான்றிதழ் கொடுத்ததுதான் பிரச்சனைக்குக் காரணம்.

அதை ரத்து செய்ய, கிறிஸ்டினா அடிக்கடி வீட்டுக்குத் தெரியாமல் பதிவுத் திருமண அலுவலகம் வர வேண்டி உள்ளது.

கிறிஸ்டினாவுக்கு நிச்சயம் செய்யப்பட மாப்பிள்ளை வீட்டார் சந்தேகப்படுகிறார்கள்.

கதிர்வேலனுக்கு கிரிஸ்டினாவைத் திருமணம் செய்து வைக்க, கிறிஸ்டினா வீட்டாருக்கு விருப்பம் இல்லை.

கிறிஸ்டினாவின் அக்கா வேற்று மத நபரை மணந்து கணவனால் கொடுமைகளுக்கு ஆளாகி, ரயில்வே டிராக் அருகில் செத்துக் கிடந்தததுதான் அதற்குக் காரணம்.

கிறிஸ்டினா திருமணம் அந்த மணமகனுடனேயே நடந்ததா? இல்லை கதிர்வேலன் கிறிஸ்டினா காதல் நிறைவேறியதா? இல்லையா? அதற்குள் எத்தனை சாவுகள் என்பதே படம்.

தன்னால் எந்த முடிவும் எடுக்க முடியாத, அதே நேரம் உணர்வுகளைப் புறக்கணிக்கவும் முடியாத கிறிஸ்டினா கேரக்டரில் ஒரு மடந்தை போல சிறப்பாக நடித்திருக்கிறார் பிரதிபா.

கௌஷிக்கும் உணர்ந்து நடித்துள்ளார்.

படத்தில் பிரதிபாவை விட சிறந்த விஷயம் என்றால் அது என் ஆர் ரகுநந்தனின் பின்னணி இசைதான். பிரஹத் முனியசாமியின் ஒளிப்பதிவு இரவுக் காட்சிகளில் மர்மம் கூட்டுகிறது.

சரியான இணைப்பும் தொடர்பும் இல்லாமல் துண்டு துண்டாகப் போகிறது திரைக்கதை. திருமணப் பதிவில் மோசடி செய்த வக்கீலாக ஒரு உப்புமா கேரக்டரில் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியனே நடித்துள்ளார்.

திருமணப் பதிவு என்பது ஒருவரின் வாழ்க்கையில் குறிப்பாக திருமண பந்தம் பற்றிய உறுதிக்காக பெண்களுக்கு மிக முக்கியமான ஒன்று.

அப்படிப் பெண்கள் தங்கள் திருமணம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று சொல்லும்போது, ஏமாற்றும் ஆண்கள் திருமணப் பதிவு போல ஒரு போலி சான்றிதழைக் காட்ட, அதை நம்பி ஏமாந்த பெண்கள் பின்னர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் கதைகளும் உண்டு.

ஆனால், சம்மந்தப்பட்ட மணமக்கள் பதிவு அலுவலகத்துக்குப் போகாமலே பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு திருமணச் சான்றிதழ் வழங்கும் பகீர்க் கொடுமையைச் சொல்லும் படம் இது.

அதில் சாட்சிக் கையெழுத்துப் போடப் போனவர்களுக்கு அலட்சியம் காரணமாக திருமணச் சான்றிதழ் கொடுக்கப்பட்டது என்ற திரைக்கதை முடிச்சும் (ஒருவேளை உண்மைச் சம்பவமோ என்னவோ?) சிறப்பானதுதான்.

அதற்கு பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் திரைக்கதையை அடித்து நொறுக்கி விரட்டி, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, வெட்டிக் கொன்று நெருப்பில் போட்டு எரித்து விட்டார்கள்.

உண்மையில் அருமையான கதை. திறமை வாய்ந்த ஒரு திரைக்கதையாளனிடம் கிடைத்து இருந்தால் இதுவும் வெற்றிப் படமே.

ஒரு கதை நன்றாகவே இருந்தாலும் திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படத்தைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

– சு. செந்தில் குமரன்

Comments (0)
Add Comment