‘கேப்டன் மில்லர்’ படம் சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாராகி வருகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். இப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 12 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் படத்திற்கான புரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், கேப்டன் மில்லர், தமிழ் சினிமாவும் இந்திய சினிமாவும் பெருமைப்படும் படைப்பாக இருக்கும் என்றார்.
தனுஷ் சாருடன் பொல்லாதவனில் ஆரம்பித்த பயணம். ஒவ்வொரு தடவையும் இதற்கு அவார்ட் கிடைக்கும் என்று சொல்வேன், அதெல்லாம் தரமாட்டார்கள் என என்னைக் கிண்டல் செய்வார்.
ஆனால் ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன் எல்லாம் செய்தவுடன், நிறைய விருதுகள் வாங்கி, கலக்கி விட்டார். இப்படத்தில் ரொம்ப புதுசாக ஒன்றைச் செய்துள்ளார். எல்லோருக்கும் பிடிக்கும். படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்றார்.
நடிகர் தனுஷ் பேசும்போது, சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். அதுபோல 2002-லிருந்து சேர்த்த துளிகள், ரசிக பெருவெள்ளமாக வந்துள்ளது. உங்களால் தான் நான்.
இந்தப்படம் பற்றி யோசித்தால் மனதில் வருவது உழைப்பு. அசுரத்தனமான உழைப்பை, அனைவரும் தந்து உருவாக்கிய படம். வேர்வை சிந்தி, இரத்தம் சிந்தி, உருவாக்கிய படம்.
உண்மையில் அருண் மாதேஸ்வரன் தான் இந்தப் படத்தின் டெவில். அவரும் அவர் டீமும் கொடுத்த உழைப்பைப் பார்த்த பிறகு, நான் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றுமே இல்லை.
நான் நிறைய புது இயக்குநரோடு வேலை பார்த்திருக்கிறேன். அருண் மாதேஸ்வரனை பார்க்கும் போது, எனக்கு வெற்றிமாறன் ஞாபகம் தான் வருகிறது.
அருண் முதன் முதலில் பார்க்கும் போது, காதில் கம்மல் எல்லாம் போட்டுக்கொண்டு ஆடிடியூட்டோடு இருந்தார். என்ன இவர் இப்படி இருக்கிறார்? என்று தோன்றியது. கதை சொன்னார், இது எல்லாம் பண்ண முடியுமா? என சந்தேகம் வந்தது.
அவரிடமே பண்ண முடியுமா எனக்கேட்டேன். ம்ம்… பண்ணலாம் சார் என்றார். இப்போது படம் பார்க்கும் போது தான் அதன் அர்த்தம் புரிகிறது. படத்தில் மிரட்டியிருக்கிறார்.
பொல்லாதவன் படத்தில் தான் எனக்கு ஜீவி அறிமுகம், அங்கு ஆரம்பித்த பயணம். எனக்காக சூப்பர் ஹிட் சாங்ஸ் நிறைய பண்ணிவிட்டார். எப்போது போன் செய்தாலும், சொல்லு மச்சான் என ஓடி வருவார். ஜீவி ஐ லவ் யூ.
சிவராஜ்குமார் சார் என்னோட ஃபேன் எனச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். அவரது பண்புக்கு, பணிவுக்கு நான் அடி பணிகிறேன். அப்பா பெயரைக் காப்பாற்றுவது எப்படி என்று, உங்களைப் பார்த்துத் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
கேப்டன் மில்லர் என்பதன் டேக் லைன், மரியாதைதான் சுதந்திரம் என்பதாகும். ஆனால் இங்கே எதற்கு மரியாதை இருக்கிறது?, எதற்குச் சுதந்திரம் இருக்கிறது?. எது சொன்னாலும், எது செய்தாலும், இங்குக் குறை சொல்ல கூட்டம் சுற்றிக்கொண்டே இருக்கிறது. ஏன் என்றே புரியவில்லை.
ஒரு சின்ன கூட்டம், இதை செய்துகொண்டே இருக்கிறது. அதைப்பற்றி கவலைப்படாமல் நம் வேலையைச் செய்வோம். கேப்டன் மில்லர் ஒரு உலகப்படமாக இருக்கும். ரொம்ப புதிதான படமாக, உங்களுக்குப் பிடிக்கும் படமாக இருக்கும் என்றார் நெகிழ்ச்சியாக.