பன் பட்டர் ஜாம் – டேஸ்டா இருக்குதா?

‘அமெரிக்கன் பை’ பட வரிசையைப் பார்த்தவர்களுக்கு ‘கம்மிங் ஆஃப் ஏஜ்’ படங்கள் எப்படியிருக்கும் என்ற விவரம் தெரிந்திருக்கும்.

தமிழில் ‘அழியாத கோலங்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ஓ மஞ்சு’, ‘துள்ளுவதோ இளமை’ என மிகச்சில படங்கள் அதனைப் பேசியிருக்கின்றன.

பதின்ம வயதில் அல்லது இளம் பருவத்தில் இருக்கும் ஆண், பெண் பாத்திரங்கள் ‘நான் யார்’ என்ற கேள்விக்குப் பதில் அறியும் விதமாகவும், பாலியல் சார்ந்த சந்தேகங்களுக்குத் தீர்வு அறியும் விதமாகவும் அப்படங்கள் இருக்கும்.

‘ரொமான்ஸ்’ படங்கள் என்பது வெறுமனே ‘காதல் என்றால் என்ன’ என்று பாடம் எடுக்கும். அதற்கான உதாரணங்களை சினிமா ரசிகர்கள் நிறையவே அறிவார்கள்.

‘பிக்பாஸ்’ மூலமாகப் புகழ் பெற்ற ராஜு, ஆதியா பிரசாத், பாவ்யா த்ரிஹா, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு, தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன், சார்லி உள்ளிட்ட பலர் நடிப்பில், ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள ‘பன் பட்டர் ஜாம்’ திரைப்படம் மேற்சொன்னதில் எந்த வகைமையில் அடங்கி நிற்கிறது?

‘ப.ப.ஜா.’ கதை!

சந்துரு (ராஜு ஜெயமோகன்), சரவணன் (மைக்கேல் தங்கதுரை) இருவரும் எல்.கே.ஜி முதல் ப்ளஸ் 2 வரை ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தவர்கள். உயிர் நண்பர்கள்.

ஒரே பொறியியல் கல்லூரியில் இருவரும் சேர்கின்றனர். ஆனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை சந்துரு தேர்ந்தெடுக்க, சரவணனோ எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் சேர்கிறார்.

டிக்டாக்கில் நந்தினி (பாவ்யா த்ரிஹா) என்ற பெண்ணை ‘பாலோ’ செய்யும் சரவணன், அவரை ஒருதலையாகக் காதலிக்கிறார். அது சந்துருவுக்குத் தெரியாது.

இந்த நிலையில், தன்னுடைய வகுப்பில் சேரும் நந்தினியைப் பார்த்தவுடன் ‘ஈர்ப்பு’ கொள்கிறார் சந்துரு.

மிகச்சில நாட்களிலேயே இருவரும் இறுக்கமாகப் பழகத் தொடங்குகின்றனர். அந்த விஷயம் அறிந்ததும் அதிர்கிறார் சரவணன்.

அதன்பின் என்ன நடந்தது என்பதே ‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் மீதி.

இப்படிக் கதை சொல்லும்போது, இது ஒரு ‘ரொமான்ஸ் மூவி’ என்றே தோன்றும்.

ஆனால், பதின்ம வயதில் இருக்கும் சந்துரு முழுக்க ‘பாய்ஸ் ஸ்கூலில்’ படித்து வளர்ந்தவர். தாய் லலிதா (சரண்யா பொன்வண்ணன்), அவரை எந்தப் பெண்ணிடமும் பேச அனுமதிக்க மாட்டார்.

அப்படிப்பட்டவர் தனது மகன் சரவணனுடன் நெருக்கமாகப் பழகுவதைக் கண்டு ‘ஓரின ஈர்ப்பு’ ஆக இருக்குமோ என்று சந்தேகப்படுவதாகக் கதை நகர்கிறது.

இதற்கிடையே, சந்துருவின் பக்கத்து வீட்டில் மதுமிதா (ஆதியா) என்ற பெண்ணின் குடும்பம் குடி வருகிறது. அந்த பெண் ஒருவரைக் காதலிக்கிறார்.

அது மட்டுமல்ல, மதுமிதா வெளியுலகில் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பது கூட அவரது தாய் உமாவுக்குத் (தேவதர்ஷினி) தெரியாது.

இந்த நிலையில், லலிதாவும் உமாவும் தங்களது குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது சரியாக இருக்கும் என்று முடிவு செய்கின்றனர்.

சில பல ஆண்டுகள் கழித்து அது நிகழ்ந்ததா, இல்லையா? சந்துரு, சரவணன், மதுமிதாவின் காதல்கள் என்னவானது என்று சொன்ன வகையில் ‘கம்மிங் ஆஃப் ஏஜ் மூவி’யாக இருக்கிறது ‘பன் பட்டர் ஜாம்’.

என்ன, இப்படி ‘ஸ்பாய்லர்’களை கொட்டி வைக்கிறீர்களே என்று எண்ண வேண்டாம். இதனை முழுதாகப் படித்தபிறகும் இப்படத்தைப் பார்க்கலாம். பெரும்பாலான காட்சிகளில் விழுந்து விழுந்து சிரிக்கலாம். அதுவே ‘பன் பட்டர் ஜாம்’மின் பலம்.

‘ஜென்ஸீ’க்கான படமா?

சுரேஷ் சுப்பிரமணியன் இப்படத்தின் கதையை எழுதித் தயாரித்திருக்கிறார். ராகவ் மிர்தாத் இதற்குத் திரைக்கதை வசனம் அமைத்து இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் முன்பாதியில் இருக்கிற ‘அடல்ட்ஸ் ஒன்லி’ விஷயங்கள் பதினாறு வயதுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு நிச்சயம் ஏற்றதல்ல.

அதனால், ‘குழந்தை குட்டிகளை அழைச்சுகிட்டு வந்தா இப்படிப் படம் எடுத்து வச்சிருக்கானுங்க’ என்று புலம்புவதைத் தவிர்க்கும் வகையில் இப்படத்தைக் காணத் திட்டமிட வேண்டும்.

பீட்சா சாப்பிட ஈசிஆர் செல்வது, காதலியின் வீட்டிற்குச் சென்ற காதலன், அவரது குடும்பத்தினரிடம் ‘ஹீட்டர் ரிப்பேர்’ செய்ய வந்ததாகச் சொல்வது என்று இப்படத்தில் ‘ஹைலைட்’டான காட்சிகள் சில இருக்கின்றன.

அவை நம் வயிற்றைப் பதம் பார்க்கும் அளவுக்குச் சிரிப்பைத் தரும்.

இது போகச் சில தேவையற்ற ஸ்டண்ட்கள், அழுகையைக் கொப்பளிக்க வைக்கும் செண்டிமெண்ட் காட்சிகளும் இப்படத்தில் உண்டு.

அந்த வகையில், இதனை அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாகத் தர முயற்சித்திருக்கிறார் ராகவ் மிர்தாத். பல காட்சிகளில் காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து, கதையின் அடிநாதத்தில் இருந்து விலகிச் சென்றிருக்கிறார். அது மட்டுமே குறை.

என்னதான் ‘ஜென்ஸீ’ தலைமுறைக்கான படம் இது என்று இயக்குனர் சொன்னாலும், இது அதற்கு முந்தைய தலைமுறையும் ரசிக்கும்படியாகவே உள்ளது. இதனை ‘க்ரிஞ்ச்’ என்று ஜென்ஸீக்கள் சொல்லவும் வாய்ப்புள்ளது.

பிரதான பாத்திரங்கள் ஒவ்வொன்றின் பார்வையிலும் சில காட்சிகளைப் புகுத்தியிருப்பது சிலருக்கு ‘ஒவ்வாமை’யைத் தரலாம்.

‘என்ன இது கலாசாரச் சீரழிவு’ என்றும் பொங்க வைக்கலாம். அந்தக் குறைகளைப் புறந்தள்ளிவிட்டால் இது ‘ஜாலி கேலி ரைடு’ ஆக இருக்கும்.

ஒரு ‘கலர்ஃபுல் ஃபன் பிலிம்’ தர வேண்டுமென்ற இயக்குநரின் முடிவுக்கு மதிப்பளித்து ஒளிப்பதிவாளர் பாபு குமார், படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாம், கலை இயக்குநர் ஸ்ரீ சசிகுமார், விஎஃப்எக்ஸ் தயாரிப்பாளர் ஸ்டாலின் சரவணன் எனப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் உழைத்திருக்கின்றனர்.

நிவாஸ் கே. பிரசன்னா இசையில் பாடல்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. ஒருவேளை மீண்டும் மீண்டும் கேட்டால் அவை பிடித்துப் போகலாம்.

அதேநேரத்தில், ‘ஒரு காமெடி படம் பார்க்கிறோம்’ என்ற உணர்வை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது நிவாஸின் பின்னணி இசை. அந்த விஷயத்தில் அவர் நிகழ்த்தியிருப்பது ‘அதகளம்’.

‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தில் கவின், அருண்ராஜா காமராஜ் உடன் இன்னொரு நாயகனாக அறிமுகமானவர் ராஜு ஜெயமோகன். ஒரு இடைவெளிக்குப் பிறகு இதில் நாயகனாக நடித்திருக்கிறார்.

என்னதான் ‘விஜய்’யை ஆங்காங்கே ‘மிமிக்ரி’ செய்வது எரிச்சலூட்டினாலும், நகைச்சுவையில் தூள் கிளப்பியிருக்கிறார் ராஜு. சோகம், ஆத்திரம், மகிழ்ச்சி எனப் பல உணர்வுகளைத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார் ‘பாந்தமாக’.

பாவ்யா த்ரிஹா இதில் நாயகி. முக்கியமான காட்சி ஒன்றில் கண்களாலேயே அவர் நடித்து தள்ளியிருக்க வேண்டும். அந்த இடத்தை ‘மிஸ்’ செய்திருக்கிறார்.

இன்னொரு நாயகியாக ஆதியா பிரசாத் நல்லதொரு வரவு. இன்னும் கொஞ்சம் அவரைப் பயன்படுத்தியிருக்கலாம்.

மைக்கேல் தங்கதுரை இதில் இரண்டாவது நாயகனாக வருகிறார். என்னதான் ‘ட்ரிம்’ செய்யப்பட்ட மீசையுடன் வந்தாலும் அவரைப் பதின்ம வயது சிறுவனாகப் பார்க்கையில் மனம் பதறுகிறது. ஆனால், அவரது நடிப்பு அனைத்தையும் சரி செய்து விடுகிறது.

மைக்கேலை போலவே விஜே பப்புவும் இப்படத்தில் வந்து போயிருக்கிறார். காமெடியில் கலக்கியிருக்கிறார்.

இவர்களோடு சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, பப்புவின் தந்தையாக வருபவர் உட்படச் சிலர் நடித்துள்ளனர்.

விக்ராந்த் இதில் செல்வா எனும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த காட்சிகள் கதையில் ஆறாவது விரலாகத் தெரிந்தாலும், அவை படத்திற்கு அழகூட்டியிருக்கின்றன.

இந்த படத்தில் நடிப்பு, திரைக்கதை அமைப்பு, காட்சியாக்கம் என அனைத்திலும் ‘யதார்த்தம்’ குறைவு’; அதேநேரத்தில் ‘மிகை உணர்ச்சி’ அதிகம்.

அப்படியொரு பயணம் ஏதேனும் ஒரு இடத்தில் சட்டென்று திசை மாறிக் குறுகிய சந்துக்குள் மாட்டிக்கொள்ளவே அதிக வாய்ப்புண்டு. அதனை லாவகமாகத் தாண்டி திருப்தி தருகிறது இப்படம்.

என்ன, கொஞ்சம் லகானை இறுக்கப் பிடித்திருந்தால் இது தரும் அனுபவம் இன்னும் பன்மடங்கு சிறப்பானதாக அமைந்திருக்கும். அது தவறியிருக்கிறது.

‘பன் பட்டர் ஜாம்’மை ‘கம்மிங் ஆஃப் ஏஜ்’ படமாகத் தொடங்கி ஒரு ‘ரொமான்ஸ்’ படமாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் ராகவ் மிர்தாத். அந்த வகையில், இந்தப் படம் வெற்றி பெற்றிருக்கிறது. ‘டேஸ்டா இருக்கு’ என்று சொல்ல வைத்திருக்கிறது.

– உதயசங்கரன் பாடகலிங்கம்

விமர்சனம்
Comments (0)
Add Comment