நார்மலா, அப்-நார்மலா ‘BP 180’?

தான்யா ரவிச்சந்திரன், மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி, கே.பாக்யராஜ், அருள் தாஸ், தமிழ் ஆகியோர் நடிப்பில், ஜேபி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘BP 180’.

ரேடியன்ட் இண்டர்னேஷன் பிலிம்ஸ், அதுல் இந்தியா மூவிஸ், உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில், பிரதிக் D சத்பார், அதுல் எம் போசாமியா, ராஜேஷ் தாகூர், ப்ரெஷ் ஜகத்தை, கிரண் படேல் ஆகியோர் தயாரித்துள்ளார்கள்.

லிங்கா என்ற பிரமுகரின் (கே. பாக்யராஜ்) ஏவல் தாதா ஒருவன் (டேனியல் பாலாஜி), போலீஸ், அரசியல்வாதிகள், அதிகாரிகள் எல்லாம் தாதா சொன்னதைச் செய்வார்கள். தாதாவுக்கு நெருங்கிய நண்பன் ஒருவன் (அருள்தாஸ்).

லிங்காவின் மகள் இருசக்கர வாகனத்தில் போகும்போது விபத்தில் சிக்கி இறந்து விடுகிறாள்.

அவளது உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துவிட, தனது மகள் உடலை அறுக்காமல் (போஸ்ட்மார்ட்டம் செய்யாமல்) செய்யச் சொல்கிறார் லிங்கா.

நேர்மையான, தைரியமான டாக்டர் தங்கம் (தான்யா ரவிச்சந்திரன்) போஸ்ட் மார்ட்டம் செய்தால்தான் மரணத்தின் உண்மைக் காரணம் தெரியும் என்று மறுக்கிறார்.

தாதாவும் அவனது நண்பனும் காவல் துறை உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் மூலம் முயன்றும் டாக்டர் தங்கம் சம்மதிக்க மறுக்கிறார்.

தாதா டாக்டரை கேவலமாகப் பேச, பதிலுக்கு டாக்டரும் அவனிடம் சவால் விடுகிறார். போஸ்ட்மார்ட்டம் செய்து விடுகிறார்.

தாதா தனது தனிப்பட்ட அவமானமாகக் கருதி டாக்டரை பழிவாங்க நினைக்கிறான்.

டாக்டரின் புகாரை எடுத்துக் கொள்ளும் கமிஷனரைக் கொல்கிறான்.

டாக்டரின் தங்கையான ஒரு காவலரை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்துகிறான்.

இதைத் தொடர்ந்து டாக்டர் என்ன செய்தார். என்ன ஆனது என்பதே படம்.

சிறப்பான கதை. மறைந்த டேனியல் பாலாஜி நிஜ தாதாவை கண்முன் கொண்டு வருகிறார். தான்யா ரவிச்சந்திரன் பெண் சிங்கம் என ஜொலிக்கிறார்.

அவருக்கு தங்கையாக வருவபவர், மருத்துவமனை சீனியர் பெண் டாக்டர், சக டாக்டராக நடித்திருக்கும் பெண், அருள்தாஸ் எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர்.

ஜிப்ரானின் பின்னணி இசை சபாஷ். ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும் சராசரிக்கு மேல்.

சீரியஸ் கேரக்டரில் பாக்கியராஜ் நடிப்பு ஆரம்பத்தில் படு சொதப்பல். அவர் அதிரும் போதும் திடுக்கிடும் போதும் கூட அவரது பாடி லாங்வேஜ் காமெடியாக இருக்கிறது.

ஆரம்பத்தில் அரைமணி நேரம் ஒன்றுமே புரியாத அளவுக்கு அவ்வளவு குழப்புகிறார்கள்.

இயக்குநர், மிஷ்கின் உதவியாளராக சில மாதங்கள் போஸ்ட் புரடக்ஷனில் வேலை பார்த்தவராம். அதற்காக கதாபாத்திரங்களின் கால்களை மட்டும் காட்டி நடப்பதும் திரும்பவதுமாக ஆரம்பிக்க காட்சி போய்க் கொண்டே இருக்கு.

கமிஷனர், தாதா வரச் சொன்னதற்காக தனியே பீச்சுக்குப் போய், அவன் கொடுக்கும் காஃபியையும் குடுத்துவிட்டு சாவது அர்த்தமில்லாத காட்சி எனினும் அந்த பலூன் ஐடியா நேர்த்தி. (ஆனா அதுக்கு எதுக்கு பீச்சுக்கு தாதா வரச் சொல்லணும்?)

தாதாவின் கத்தியை விட, டாக்டர்கள் பிடிக்கும் கத்தி என்பது பெரியது என்று சொல்ல வரும் விஷயம் அபாரம். ஆனால், அதைக் காட்ட இயக்குநர் கிளைமாக்சில் தேர்ந்தெடுத்த உத்தி குழந்தைத்தனம்.

விளைவு?

ஆபரேஷன் சக்ஸஸ். பேஷன்ட் அவுட்.

– சு.செந்தில் குமரன்

Comments (0)
Add Comment