பாம் – ‘குசும்பு’ நையாண்டிக் கதை…!

தமிழில் பேச்சு வழக்கில் அல்லது எழுத்து வழக்கில் சொல்லத் தகாதவற்றை ‘இடக்கரடக்கல்’ என்று சொல்வது வழக்கம். பொதுவெளியில் சொல்லத் தகாதவற்றை ‘இலை மறை காயாக’க் கூறுதல் என்றும் சொல்லலாம்.

Farting எனப்படும் விஷயமும் அப்படியொன்றாகவே கருதப்படுகிறது.

பேச்சு வழக்கில் ‘குசு’ என்று சொல்லப்படுவதை ‘வாய்வு’ அல்லது ‘காற்று பிரிதல்’ என்று மருத்துவ உலகம் சொல்கிறது.

உணவு செரிமானச் செயல்பாட்டில் காற்று சேர்ந்து மலக்குடல் வழியாக வெளியேறுவதையே இது குறிக்கிறது.

இதனைக் ‘குசும்பாக’ப் பயன்படுத்தும் வழக்கம் தமிழ்த் திரையுலகில் குறைவு. அதேநேரத்தில் ஆங்கிலம் உள்ளிட்ட இதர மொழிகளில் சில படங்களில் அது பிரதானமாகவும் பயன்படுத்தப்பட்டிருப்பதைச் சிலர் கண்டிருப்பார்கள்.

அதே போன்றதொரு அனுபவத்தைத் தமிழ் ரசிகர்களுக்குத் தந்திருக்கிறது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ தந்த இயக்குநர் விஷால் வெங்கட்டின் ‘பாம்’. இப்போது, இந்த டைட்டிலுக்கான அர்த்தம் விளங்கும்.

அர்ஜுன் தாஸ், காளி வெங்கட், சிவாத்மிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

சரி, ‘பாம்’ படத்தில் மேற்சொன்ன விஷயம் தவிர வேறென்ன இருக்கிறது?

‘பாம்’ கதை!

காள கம்மாய்பட்டி எனும் சிற்றூர். அங்குள்ள மக்கள் ஒற்றுமையாகவும் வளமாகவும் வாழ்கின்றனர். அதனை முன்னுரைக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளில் அருகிலுள்ள மலை மீதிருந்து ஒரு மயில் அகவுகிறது.

ஒருநாள் மலை மீதிருந்து உருண்டோடி வந்த ஒரு பாறை அந்த ஊருக்கு மத்தியில் விழுகிறது; இரண்டாக உடைபடுகிறது.

பெரிய பாறையைச் சிலர் தெய்வமாக வணங்க, மீதமுள்ளவர்கள் சிறிய பாறையை வணங்கத் தொடங்குகின்றனர்.

அன்று முதல் இரண்டு தரப்பினருக்கும் மோதல்கள் முளைக்கின்றன. மெல்ல அது பெரும்பகையாக மாறுகிறது.

அன்று முதல் மயில் காட்சி தருவதும் நின்று போகிறது. இரண்டு கிராமங்களும் காளப்பட்டி, கம்மாய்பட்டி என்று பிரிகின்றன. ஒரு தரப்பினர் மேல் சாதியினர் ஆகவும், இன்னொரு தரப்பினர் கீழ் சாதியினர் ஆகவும் பிரிக்கப்படுகின்றனர்.

இரண்டு கிராமங்களையும் சேர்ந்த இரண்டு நபர்கள் நண்பர்களாக இருக்கின்றனர்.

அதிலொருவர், ஊரின் நன்மைக்காக அரசு அலுவலகங்களைச் சுற்றி வருபவர். ஊர் மக்களிடம் ஒற்றுமையை வலியுறுத்துபவர்.

அவரது நண்பர், ஒடுக்குதலுக்கு உள்ளாகும் இன்னொரு பகுதியைச் சேர்ந்தவர். சிறு வயதில் தனது குடும்பத்தினரை இழந்த அவர், நண்பனையும் அவரது தங்கையையும் தன்னவர்களாக நினைக்கிறார்.

ஆனால், இது மேற்சொன்னவர் வாழும் பகுதியினருக்கு எரிச்சலைத் தருகிறது.

ஒருநாள் ஊருக்காகப் பாடுபடும் அந்த நபர் மது போதையில் மயங்கி விழுகிறார். மருத்துவச்சி வந்து பார்த்துவிட்டு, ‘உயிர் போய்விட்டது’ என்கிறார். ஆனால், வழக்கம் போல அவரது உடலில் இருந்து ‘காற்று’ பிரிகிறது.

அதனைக் கண்டதும், அந்த நண்பர் அலறித் துடிக்கிறார். ‘இவனுக்கு உயிர் இருக்கு, சாகலை’ என்கிறார்.

ஊர்காரர்களுக்கு இது மேலும் எரிச்சலைத் தருகிறது. ‘ஈமச்சடங்குகளை கவனிப்போம்’ என்கின்றனர். ஆனால், அவர்களால் அந்த சடலத்தை அசைக்கக் கூட முடியவில்லை.

ஆனால், ‘கீழ் சாதியினர்’ என்று அவர்கள் ஒதுக்கும் பகுதியைச் சேர்ந்த இன்னொரு நபர் தனது நண்பனின் உடலை முதுகில் ஏற்றி எளிதாகச் சுமந்து செல்கிறார்.

ஒரு நாற்காலியில் அமர வைக்கிறார். அப்போதும், அந்த உடலில் இருந்து காற்று பிரிகிறது.

அதனைக் காணும் கோயில் பூசாரி, ‘பொணம் உடம்புக்குள்ள சாமி இருக்குது’ என்கிறார்.

அதன் தொடர்ச்சியாக நிகழும் சில விஷயங்கள், அந்த ஊரில் எதிரும்புதிருமாகத் திரியும் இரு தரப்பினரையும் ஒரு புள்ளிக்குக் கொண்டு வருகிறது.

உண்மையில் அந்த நபர் உயிரோடு இருக்கிறாரா? இறந்துவிட்டார் என்றால் எப்படி அவரது உடலில் இருந்து வாய்வு வெளியேறுகிறது?

நண்பன் உயிரோடு இருப்பதாக நினைக்கிற அந்த இன்னொரு நபர் என்ன செய்தார்?

அந்த ஊர் மக்கள் இடையிலான பிரிவினை தீர்ந்ததா அல்லது இந்த விவகாரத்தினால் அது மேலும் அதிகமானதா?

இந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘பாம்’ படத்தின் மீதி.

‘பூடகமான’ கதை சொல்லல்!

‘ஆதியில் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழன், எப்போது சாதிரீதியாகப் பிரிந்தான் தெரியுமா’ என்று பக்கம் பக்கமாகக் கட்டுரைகள் எழுதுவதற்கு, மேடையில் பேசுவதற்குப் பதிலாக, அந்த உள்ளடக்கத்தினைப் ‘பூடகமாக’ப் பேசுகிற கதையை ஆக்கியிருக்கிறது இயக்குனர் விஷால் வெங்கட் குழு.

மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரிசன் உடன் இணைந்து இக்கதைக்கு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர்.

மகிழ்நன் பி.எம். இதற்கு வசனம் எழுதியிருக்கிறார்.

எழுத்தில் இந்த உள்ளடக்கத்தை அடக்குவது மிகக்கடினம். கொஞ்சம் பிசகினாலும், பிரசாரத் தொனியே மேலோங்கி நிற்கும்.

அந்த சவாலை ‘அனாயாசமாக’ எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் விஷால் வெங்கட். கிட்டத்தட்ட மதில் மேல் நடப்பது போன்றதற்கு ஒப்பானது இது. அது மட்டுமல்ல, எந்த பக்கத்தில் கீழே விழுந்தாலும் அதல பாதாளம் என்பது போன்ற கதைக்களம் இது.

விஎஃப்எக்ஸ் பயன்பாடு இப்படத்தின் காட்சியாக்கத்தில் அதிகம் உள்ளது. அதையும் மீறி கலை இயக்குநர் மனோஜ் குமார், ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் பி.எம்., ஆடை வடிவமைப்பாளர்கள் பிரியா ஹரி, பிரியா கரண்,

ஒலி வடிவமைப்பாளர் மனோஜ் உள்ளிட்டோரின் பணி, கதை நிகழும் கற்பனைக் களத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல உதவியிருக்கிறது.

படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே. ரசிகர்கள் இந்த கதையில் எங்கும் அயர்ச்சியை உணர்ந்திடக் கூடாது என மெனக்கெட்டிருக்கிறார்.

அவரது ‘ஷார்ப்’ படத்தொகுப்பு கனகச்சிதமாக இருந்தாலும், நாயக பாத்திரத்தின் பிளாஷ்பேக்கை சொல்லும் சில ஷாட்கள் அங்கங்கு வந்து போவதற்கும், கிளைமேக்ஸ் தீர்வுக்கும் உரிய விளக்கம் அளிக்கப்படாமல் போயிருப்பது ஒரு குறையாகவே தெரிகிறது.

இந்த படத்தில் இதர தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பும் அருமையாக உள்ளது.

குறிப்பாக, டி.இமானின் இசையில் பாடல்கள் வழக்கம் போல நம்மைக் கேட்ட முதல் நொடியே ஈர்க்கின்றன.

அதனைப் பின்னுக்குத் தள்ளும்விதமாக, நக்கலும் நையாண்டியும் நிறைந்த சூழல்களையும் வேறுபாடுகள் உடையாதா என்கிற பெரும் ஏக்கத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டும்விதமாக உள்ளது இமானின் பின்னணி இசை.

காளி வெங்கட் இந்தக் கதையின் பிரதானமாக இருக்கிறார். பிணமாக நடித்து, இந்த கதை முழுக்க வியாபித்திருக்கிறார்.

அர்ஜுன் தாஸ் இப்படத்தின் நாயகன். தனக்கிருக்கும் ‘ஆக்‌ஷன்’ இமேஜ் தாண்டி வந்து இப்படியொரு கதையோடு தன்னை அவர் பொருத்திக்க்கொள்வதே அவரது சிறப்பம்சம். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

நாயகி சிவாத்மிகா அளவாக, அபாரமாக நடித்திருக்கிறார்.

சீனியர் கலைஞர்களான நாசர், அபிராமி ஆகியோர் தங்களது பங்களிப்பை ‘ஜஸ்ட் லைக் தட்’ செய்து முடித்திருக்கின்றனர்.

சிங்கம்புலி, டிஎஸ்கே, ‘விலங்கு’ ரவி, கொளப்புல்லி லீலா எனப் பலர் இதில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் பிரதானப் பாத்திரங்களில் நடித்த சிலர் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.

லீலாவின் மகனாக நடித்தவர், பூசாரி வேடத்தில் நடித்தவர் உட்படச் சிலரை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

பால சரவணன், பிரியா வெங்கட் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன.

அது மட்டுமல்லாமல் சமூகத்தில் இருக்கும் சாதி சார்ந்த கருத்தாக்கங்களை எளிய உதாரணங்கள் மூலம் சொல்கிற இடங்கள் சிரிப்பை உருவாக்குகின்றன.

போலவே, மனம் நெகிழும்படியான இடங்களும் பின்பாதியில் வந்து போகின்றன.

ரொம்ப ‘சீரியசான’ ஒரு விஷயத்தை மிக எளிமையாக விளக்க முற்படுவது ஒரு சவால்.

நையாண்டித்தனம் மிக்க திரைக்கதை ட்ரீட்மெண்ட் கைவசம் இருக்கும் தைரியத்தில், மிகக்கடினமாக கருத்து விளக்கங்கள் பேசுகிற காட்சிகளையும் எளிதாகக் கையாண்டிருக்கிறார் விஷால் வெங்கட்.

இந்த கதை சொல்லலும் அதில் இருக்கிற தெளிவுமே ‘பாம்’ படத்தின் பலம்.

தேடிப் பார்த்தால் இதில் நிச்சயம் குறைகள் தேறும். அவற்றைப் புறந்தள்ளிவிட்டு, இது போன்ற படங்களுக்கு ஆதரவளிப்பது தான் சமூக மாற்றம் நோக்கிய முன்னெடுப்பில் மேலும் பல சிறந்த படைப்புகள் வெளிவர ஊக்கமளிக்கும்.

அந்த வகையில், இந்த ஆண்டின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது ‘பாம்’.

– உதயசங்கரன் பாடகலிங்கம்

பாம் விமர்சனம்
Comments (0)
Add Comment