தெற்கிலிருந்து செல்லும் திரைக் கலைஞர்கள் ஒதுக்கப்படுவது ஏன்?

– மணா

“பல மொழிகளில் நான் பாடியிருந்தாலும், இந்தி மொழியிலும் நான் பாடியிருக்கிறேன், இருந்தும் அங்கு என்னால் தொடர்ந்து பாட வாய்ப்புக் கிடைக்கவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை’’

– இப்படிப் பல ஆண்டுகளுக்கு முன்பு பேட்டிக்காகச் சென்றபோது, சொன்னவர் ஒரு பிரபலமான பாடகி.

இது அவரைப் போன்ற இசைக் கலைஞர்களுக்கு மட்டுமான அனுபவம் அல்ல. இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று பலருக்கும் நேர்ந்திருக்கிறது.

சில விதிவிலக்குகளைத் தவிர, மொழி தெரிந்தும் இந்திப் படவுலகில் பலர் தொடர முடியாத நிலை இருந்து வந்திருக்கிறது.

தயாரிப்பாளராக தெற்கிலிருந்து ‘சந்திரலேகா’வை வடக்கே கொண்டு சென்று வெற்றி பெற்றிருக்கிறார் ஜெமினி வாசன்.

ஏ.வி.எம். சில படங்களைக் கொண்டு சென்றிருக்கிறது. சாண்டோ சின்னப்பத் தேவர் ராஜேஷ்கன்னாவை வைத்து ‘ஹாத்தி மேரே சாத்தி’ போன்ற ஹிட்களைக் கொடுத்திருக்கிறார்.

1980 வாக்கில் ‘ஏக் துஜே கேலியே’ மூலம் வெற்றிப்படத்தைக் கொடுத்துக் கவனிக்க வைத்தார் இயக்குநர் பாலசந்தர்.

பாரதிராஜா, பாக்கியராஜூம் அடுத்துச் சென்றார்கள். இளையராஜா தென்னிந்திய மொழிகளில் சாதனைகளைச் செய்த அனுபவத்துடன் பல படங்களில் இசையமைத்தாலும், நீடிக்க முடியாத நிலை.

ஜேசுதாஸைப் போன்ற கர்நாடக இசைப் பின்னணி கொண்ட பாடகர்கள் இந்திப் படவுலகில் சென்று பல முக்கியமான பாடல்களைப் பாடியும் கூடத் தொடர்ந்து அங்கு அங்கீகாரம் பெற முடியவில்லை.

‘ரோஜா’வை இந்திக்குக் கொண்டு சென்று பெரு வெற்றியைப் பெற்றார் இயக்குநர் மணிரத்னம். அப்போது இசையால் கவனம் பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

தொடர்ச்சியாகப் பல ஹிட்களைக் கொடுத்தும், தற்போது இடைவெளியை உணர்கிற நிலையில் இருக்கிறார் ரஹ்மான்.

இத்தனைக்கும் ஆராதனா துவங்கி யாதோங்கி பாரத், ஷோலே, பாபி, ஹூரோ போன்ற பல இந்திப் படங்களுக்குத் தமிழகத்தில் தனி மவுசே இருந்தது.

லதா மங்கேஷ்கர், கிஷோர் குமார், லஷ்மிகாந்த் பியாரிலால். ஆர்.டி.பர்மன் போன்றவர்கள் இங்கு சிறப்பாக வரவேற்கப்பட்டார்கள்.

ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, அமிதாப், ரிஷிகபூர், சத்ருகன் சின்ஹா, ஜீனத் அமன் என்று பலருக்கு ரசிகர் கூட்டமே இருந்தது. ஜாக்கி ஷெராப் கதாநாயகனாக நடித்த ‘ஹீரோ’ இந்திப் படம் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ஓராண்டு வரை ஓடியது.

‘பாபி’ காலர் என்று சட்டையில் வளைந்த காலர்களை வடிவமைக்கிற பாணி தமிழகத்திலும் இருந்தது. ராஜ்கபூரின் படங்களுக்குத் தனி வரவேற்பிருந்தது.

இந்தித் திணிப்பை எதிர்த்த இயல்பு கொண்ட தமிழர்கள் இந்திப் படங்களின் மீது பாராமுகமாக இருக்கவில்லை. அதை ரசிக்கவே செய்தார்கள். வரவேற்பும் கொடுத்தார்கள்.

இளையராஜாவின் வருகைக்குப் பிறகு இந்திப்பட இசை ஆதிக்கம் தணிந்தது என்று சொல்லலாம்.

இன்றும் சில இந்திப்படங்கள் சில வாரங்கள் ஓடுகிற அளவுக்கு இருக்கின்றன. இளம் இந்தி நடிகர்களும், நடிகைகளும் கவனிக்கப்படுகிறார்கள்.

இந்தச் சமயத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒருவர் திரையிசைக் கலைஞரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

‘ஏக் துஜே கேலியே’ படம் வெளிவந்தபோது, ‘தேரே மேரே பீச் மே’ என்று துவங்கும் எஸ்.பி.பி.யின் பாடல் செமை ஹிட். வட இந்திய இளைஞர்கள் கொண்டாடினார்கள் அவருடைய குரலை. தொடர்ந்து பல படங்களில் பாடினார்.

இடைவெளிக்குப் பிறகு ‘மைனே பியார் கியா’ இந்திப் படத்தில் அவர் பாடிய பாடல்கள் பிரபலமாகி, அவருக்கு தொண்ணூறுகளில் பெரும் பெயரை வாங்கிக் கொடுத்து, ஃபிலிம்பேர் விருதை வாங்கிக் கொடுத்தன.

அந்தப் படப் பாடல்கள் 50 லட்சம் கேஸட்கள் வரை விற்பனையாகின.

‘சாந்தினி’ படத்தில் அவர் பாடிய பாடல்கள் அடங்கிய கேஸட்கள் 35 லட்சம் விற்று பல சாதனைகள் படைத்தன.

இவ்வளவுக்கும் பிரபல இந்தி இசையமைப்பாளரான நௌஷாத் இசையில் “தேரே பாயல், மேரே கீத்” என்ற படத்தில் பாடியபோது அவருடைய மதிப்பு கூடியது.

‘ஹம் பஞ்ச்’ என்ற இந்திப் படத்திற்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார் எஸ்.பி.பி.

இந்திப் படவுலகில் ஒரு பாடலுக்கு அதிக ஊதியம் பெறுகிறவராக இருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டது ஏன்? தெலுங்கு, தமிழ் என்று பல மொழிகளில் பாடக் கூடியவராக இருந்தும், இந்தித் திரையிசையில் அறியப்பட்ட பாடகராக இருந்த அவருக்கு ஏனிந்தச் சரிவு?

இதைப் போல எட்டு மொழிகளை அறிந்த பாடகரான பி.பி.ஸ்ரீனிவாஸ் போன்றவர்கள் இந்திப் படவுலகில் உரிய இடம் பெற முடியவில்லை.

குரல் உச்சிக்குப் போய்ப் பாடுகிறவரான வாணி ஜெயராமுக்கும் இந்தி இசையுலகில் உரிய கவனம் கிடைக்கவில்லை.

ஆனால் இன்றுவரை ஸ்ரேயா கோஷல் போன்றவர்களுக்குத் தமிழ்த் திரைப்படங்களில் தொடர்ந்து பாடும் வாய்ப்பைத் தந்து கொண்டிருக்கிறார்கள் ரஹ்மானும், இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்களும்.

அப்படிப் பார்த்தால், தென்னக மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் படவுலகில் நடிப்பு, இயக்கம், இசை சார்ந்த கலைஞர்களிடம் இருந்து வருகிற ஒத்திசைவு வடக்கே போதுமான அளவுக்கு இல்லை.

திருப்பதிக் கோவில் கருவறையில் அதிகாலைப் பொழுதில் மாநில எல்லை கடந்து எம்.எஸ்.ஸின் குரல் கேட்கிறது. சபரிமலை சன்னிதானத்தில் மதம் கடந்து ஜேசுதாஸின் மென்குரல் ஒலிக்கிறது.

தற்போது ஒளிப்பதிவு போன்ற தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் மட்டுமே தென்னிந்தியாவிலிருந்து சென்றவர்கள் நீடிக்கிற நிலை இருக்கிறது.

நடிப்பு, இயக்கம், இசை, ஒளிப்பதிவு என்று தமிழ்ப்படவுலகில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தவர்களுக்கு உயரிய விருது கொடுப்பதும் அபூர்வமாகவே நடக்கிறது.

சிவாஜி போன்ற நடிப்புச் சாதனையாளருக்குத் தேசிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. பால்கே விருது கூட அவருக்குக் கால தாமதமாகவே கிடைத்தது. நாகேஷ் போன்ற சாதனையாளருக்குத் துணை நடிகர் என்கிற அங்கீகாரம் மட்டுமே தேசிய அளவில் கிடைத்தது.

விருதுகளுக்குச் தமிழகச் சாதனையாளர்களின் உயரம் தெரியவில்லை. தமிழர்கள் அன்றும் வட இந்தியக் கலைஞர்களையும் வரவேற்று வாழ வைத்திருக்கிறார்கள், இன்று வட இந்தியத் தொழிலாளர்களையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரபல இந்திப் படவுலக இசையமைப்பாளர்களான “நௌஷாத், எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன் இசையெல்லாம் என்னோட ஃபேவரைட்’’ என்று பேட்டி அளித்து, தானும் நௌஷாத்தும் இருக்கிற புகைப்படத்தை தன்னுடைய வரவேற்பறையில் மாட்டி வைத்திருந்த ரஹ்மானிடம் இருந்தது மொழி கடந்த தேசியம்.

அது தான் ‘வந்தே மாதரம்’ ஆல்பத்தை ஏராளமான இளைஞர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தது. இந்திய எல்லைத் தாண்டி ஆஸ்கர் உயரத்திற்குப் போனாலும், தன்னடக்கத்துடன் அவரை இருக்க வைத்தது.

கலைஞர்கள் மீது புறக்கணிப்பைக் காட்டுவது, அந்தக் கலைஞர்களுக்கு மட்டுமான இழப்பல்ல என்பதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்.

அரசியலில் வடக்கு, தெற்கு என்கிற எல்லைகளும், மொழிப் பாகுபாடுகளும் தவிர்க்க முடியாதபடி கலந்து, செயல்பாடுகளிலும், திட்டங்களிலும் பிரதிபலிக்கின்றன.

ஆனால் கலைகளிலும் மொழி, இனப் பாகுபாடுகள் நீடிக்க வேண்டுமா என்பது தான் தேசியத்தின் அர்த்தம் பொதிந்த கேள்வி.

– மணா

Comments (0)
Add Comment