யாருக்கு வரும் அந்த மனசு?

- மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றி சோ சொன்ன தகவல்

‘‘ஜெய்ப்பூரில் ‘அடிமைப்பெண்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மொத்த யூனிட்டும் 15 நாட்கள் அங்கே தங்கி இருந்தோம். நடிகர்களில் தொடங்கி டெக்னீஷியன்கள் வரை அப்போது ஒவ்வொருத்தர் மீதும் எம்.ஜி.ஆர். தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்ட அக்கறையைப் போல இதுவரை வேறெந்த தயாரிப்பாளரும் செய்து நான் கண்டதில்லை.

தங்கும் இடம், சாப்பாடு எல்லாம் திருப்திகரமாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது அவரே நேரில் வந்து பார்த்து கவனித்துக் கொள்வார்.

படப்பிடிப்பின் போது ஒரு சில நாட்கள் கடும் வயிற்று வலியால் நான் அவதிப்பட்டேன். அந்த நேரத்தில் அவர் என்னிடம் காட்டிய பரிவை நான் எப்போதும் மறக்க முடியாது. ஷூட்டிங் தடைப்படுவதைப் பற்றி ஒரு தயாரிப்பாளராக அவர் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை.

அதே சமயத்தில் சென்னையில் ஒரு வழக்கை நடத்துவதற்காக நான் அவசரமாக ஆஜராக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. என் சம்மந்தப்பட்டக் காட்சிகளை அவசரமாக முடித்துவிட்டு உரிய நேரத்தில் என்னை சென்னை அனுப்பி வைக்க அவர் எடுத்துக் கொண்ட சிரமம் கொஞ்சம் நஞ்சமல்ல.

எனக்கு வயிற்று வலி குணமாகி நாளை முதல் நான் படப்பிடிப்புக்கு வருகிறேன் என்று சொன்னபோதும் கூட, என் நண்பர்களை அழைத்து, “அவருக்கு உண்மையிலேயே வயிற்று வலி குணமாகி விட்டதா? இல்லை படப்பிடிப்பு தடைபடக் கூடாது என்பதற்காக பொய் சொல்கிறாரா” என்று விசாரித்திருக்கிறார்.

அவருடைய பர்சனல் டாக்டரை அனுப்பி என்னை பூரணமாக சோதித்துப் பார்த்து, அவர் ஒ.கே. என்று சர்டிஃபிகேட் தந்த பிறகே என்னை படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுமதித்தார். அப்படி ஒரு மனசு யாருக்கு வரும்?”

– 1980-ல் ஒரு வார இதழுக்காக மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றி சோ சொன்ன தகவல்.

Comments (0)
Add Comment