கமலின் ‘விக்ரம்’ (2022), ‘நட்சத்திரம் நகர்கிறது’ படங்களில் அழுத்தமான முத்திரை நடிப்பை வழங்கினார் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ்.
சரியான கதைகளுக்காக ஒவ்வொரு முறையும் காத்திருந்து நடிக்கும் அவர் கதாநாயகனாக நடிக்க, தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளில் நேரடியாகத் தயாராகியிருக்கும் படம் ‘அவள் பெயர் ரஜ்னி’.
அதன் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் இயக்குநராக அறிமுகமாகும் வினில் ஸ்காரியா வர்கீஸ் “மலையாள சினிமாவுக்குரிய நேர்த்தியுடன் திரைக்கதையை எழுதினேன். கதையின் பெரும்பகுதி சென்னையில் தான் நடக்கிறது.
அப்படியிருக்கும்போது இதைத் தமிழ், மலையாளத்தில் உருவாக்குவதுதான் சரியாக இருக்கும் என்று தமிழ் ரசிகர்களுக்காகவும் கதையை சற்று மாற்றி அமைத்தேன்.
அதனால், இருமொழிக்கும் பரிச்சயமான காளிதாஸும் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் வருபவர்களும் நச்சென்று பொருந்தினார்கள்.
இது கதாநாயகனின் வாழ்க்கையில் மறைந்திருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய ரகசியத்தை வெளிக்கொண்டு வரும் த்ரில்லர் கதை. அப்பெண் எப்படிப்பட்டவள் என்பதுதான் படம்.
படத்தின் டிரைலரைப் பார்த்து நீங்கள் எப்படிப்பட்ட கதையை வேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
ஆனால், நீங்கள் எதிர்பாராத திரை அனுபவத்தை நான் கொடுத்திருக்கிறேன்” என்றார்.
காளிதாஸ் ஜெயராம் தவிர, நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான், சைஜு குருப், அஷ்வின் குமார், கருணாகரன், பூ ராமு, ஷான் ரோமி என நடிகர்களின் எண்ணிக்கையும் படத்தில் அதிகமாகவே உள்ளது.