‘அனலி’ – அனைவரையும் கவர்கிறதா?!

சிந்தியா லூர்டே தயாரித்து, ஹீரோவாகவும் ஹீரோயினாகவும் நடிக்க, இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்தி வில்லனாக நடிக்க, குமாரவேல் இனியா, கபீர் துஹான் சிங், ஜென்சன் திவாகர் நடிக்க, தினேஷ் தீனா என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் ‘அனலி’.

லால் சேட்டன் என்ற மலையாள தாதா (சக்தி), ரெட்டி என்ற தெலுங்கு தாதா (அபிஷேக் வினோத்), ஒரு இந்தி தாதா (கபீர் துஹான் சிங்) மூவரும் நானாவித பரிமள புஷ்ப கடத்தல்களையும் ஆல் இன் ஆல் அயோக்கியத்தனங்களையும் செய்பவர்கள். இதில் டாப் லெவல் ஆள் சேட்டன்தான்.

அரசியல், அதிகார சிபாரிசுகளை மீறி இவர்களை கைது செய்ய போராடுகிறார் ஒரு போலீஸ் அதிகாரி (மேத்யூ வர்கீஸ்).

சென்னை கோயம்பேட்டில் மகளுடன் (ஷிமாலி) வந்து இறங்குகிறார் ஒரு தாய் (சிந்தியா லூர்டே),

தன் தோழி வீட்டுக்குப் போக ஆட்டோ தேட, ஆட்டோவில் ஏற்றிக் கொள்கிறார் ஒரு டிரைவர் (ஜென்சன் திவாகர்).

மனைவிக்கு பிரியாணி வாங்கிக் கொண்டு போக ஆசைப்படும் ஆட்டோ டிரைவர் வழியில் கடை ஏதும் இல்லாத நிலையில் (?), தனது ரவுடி நண்பன் ஒருவன், பிரியாணி பார்ட்டி நடத்தும் இடத்துக்குப் போகிறான்.

தாயையும் மகளையும் உட்கார வைத்துவிட்டு, பிரியாணி வாங்கி வர அவன் போக, அந்த விருந்தில் சேட்டன், நாயுடு, இந்தி தாதா ஆகியோரும் இருக்க,

அங்கே நடந்த ஒரு பிரச்சனையில் ஆட்டோ டிரைவரை தாதாக்கள் அடிக்க, அம்மாவும் மகளும் அவனைக் காப்பாற்றப் போகிறார்கள். தாதாக்களின் கோபம் இவர்கள் மேல் திரும்புகிறது.

அந்த அம்மா கேரக்டரில் நடிக்கும் சிந்தியாதானே படத்தின் தயாரிப்பளார் மற்றும் ஹீரோயின்? எனவே அவர் பாய்ந்து பாய்ந்து சண்டை போடுகிறார்.

அங்கிருந்து வரும்போது ஒரு நல்ல போலீஸ்காரரை (குமாரவேல்) சந்திக்கிறார். ஆனால் அதே நேரம், தனது முக்கியமான பொருள் ஒன்றை சண்டை போட்ட இடத்தில் விட்டு விட்டு வந்து விட்டதை உணர்கிறார்.

எனவே மீண்டும் அங்கு போகிறார். கவர்ச்சிகரமான போலீஸ் கமிஷனர் ஒருவர் (இனியா) தாதாக்களுக்கு உதவுகிறார்.

நாயகியின் மகள் காணாமல் போகிறார். மகள் கிடைத்தாளா? நாயகி தேடிப்போன முக்கியமான பொருள் எது? தாதாக்கள் என்ன ஆனார்கள் என்பதே அனலி.

அனலி என்ற நல்ல தமிழ்ப் பெயருக்கு வாழ்த்துகள். அனலி என்றால் நெருப்புப் பெண் என்று பொருள்.

தாதாக்களை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரிகள் போடும் பிளான், குறுக்கே வரும் அரசியல் அதிகார தலைகள், போலீஸின் பிரச்னை என்று அந்த ஏரியா நன்றாகவே இருக்கிறது.

தாயும் மகளும் கோயம்பேட்டில் இறங்கி ஆட்டோவில் ஏறுவது எல்லாம் யதார்த்தம்.

தாதாக்களின் மொழி பற்றிய சமூக அரசியல் அடையாளங்களும் புத்திசாலித்தனம்.

சென்னையில் பிரியாணியை கிடைக்காது என்று தாதாக்கள் பார்ட்டி கொண்டாடும் இடத்துக்கு ஆட்டோ டிரைவர் போவதும், அங்கே நடக்கும் விஷயங்களும் யதார்த்தம் இல்லை என்றாலும் ஒரு சுவாரசியத்துக்கு ஓகேதான்.

ஆனால், திடீர் என்று சிந்தியா லூர்டே பாய்ந்து பாய்ந்து அடிக்கிறார் பாருங்கள். அங்கே இருந்தே படம் அடி வாங்க ஆரம்பித்து விட்டது.

கேரக்டருக்கு அவர் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறார் என்பது பற்றி நாம் கவலைப்படத் தேவை இல்லை. ஏனெனில் அவர் காசு, அவரே தயாரிப்பளார். அவரது கான்ஃபிடன்ஸ்!

சில பிளாக் காமெடி படங்களில் முகம் காட்டிய சில நடிகர்களை வைத்துக் கொண்டு காமெடி என்று மொக்கை போட்டுத் தள்ளுகிறார்கள். மானசீகமாகக் கதற வேண்டி இருக்கிறது.

பெண் கமிஷனர் என்று கண்றாவியாக இனியாவைக் காட்டுகிறார்கள். கன்டெம்ப்ட் ஆஃ ப் கமிஷனர் என்று சட்டம் எதுவும் இல்லையா ஞாயமாரே?

வில்லன் நடிப்பு என்ற பெயரில் எரிச்சலூட்டுகிறார் சக்தி வாசு.

தனது தந்தை இயக்குநர் பி.வாசுவின் குரல் போல இருக்கும் குரலை வைத்துக்கொண்டு செயற்கையாகவும் புரியாமலும் பேசுகிறார்.

ஒரு காட்சிக்கு இரண்டு முறையாவது சிரிக்க வைத்து விடுவார் ஜென்சன் திவாகர்.

இந்தப் படத்தில் பல காட்சிகளில் வந்தும், ஒரு காட்சியில் கூட சிரிக்க முடியாத அளவுக்கு சிரிப்பாய் சிரிக்கிறது படம்.

மீண்டும் மீண்டும் சிந்தியா லூர்டே பாய்ந்து பயந்து பறந்து அடிக்க ஆரம்பித்த உடன், படம் பார்ப்பவர்கள் வீடியோ கேம்ஸ் ஆடும் மூடுக்கு போய் விடுகிறார்கள்.

நோ சென்டிமென்ட்.. நோ எமோஷன்.

எதை எடுக்க மீண்டும் அவர் தாதாக்களின் கோட்டைக்கு போனார் என்பதை விமர்சிக்க முடியாது என்றாலும் காட்சியாக ஈர்க்கவில்லை.

பொதுவாக சினிமாவில் எல்லாத் துறைகளிலும் – தயாரிப்பாளராக – இயக்குனராக – எழுத்தாளராக பெண்கள் சாதிக்க வேண்டும்.

அவர்கள் உயரம் தொட வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே உண்டு.

ஆனால், இதுபோன்ற முயற்சிகள் அந்த நோக்கத்தை பலப்படுத்துவது இல்லை.

ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு, தீபன் சக்கரவர்த்தியின் இசை இவற்றில் பாராட்ட எதுவும், தேடினாலும் கிடைக்கவில்லை.

அனலி… பத்தாம் பசலி.

– சு. செந்தில் குமரன்

Comments (0)
Add Comment