‘அஃகேனம்’ உருவாவதற்கு அம்மா தான் காரணம்!

இயக்குநர் உதய்.கே

அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அஃகேனம்’ திரைப்படத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சீதா, ஷிவ் பிங்க், ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விக்னேஷ் கோவிந்தராஜன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார்.

தேவத்யன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, ராஜா கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

அதிரடித் திரில்லராக உருவாகி இருக்கும் இந்தப் படம் இன்று (ஜூலை – 4) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது பாடலாசிரியர் கார்த்திக் நேதா பேசுகையில், ”அஃகேனம் என்ற தமிழ் தலைப்பிற்காக மிக்க மகிழ்ச்சி. இந்தப் படம் அமைதியான மற்றும் ஆழமான உணர்வை பேசக்கூடியது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களும் வெவ்வேறு வகைமைக்குள்ளான பாடல்களாக இருக்கிறது.

மேற்கத்திய இசை – ராக் இசை – இந்திய நாட்டார் இசை – இந்திய செவ்வியல் இசை – என வெவ்வேறு வகைமையியான இசை வடிவம் இந்தப் படத்தில் பாடல்களாக இடம் பிடித்திருக்கிறது. இசையமைப்பாளர் பரத் வீரராகவன் மிகுந்த திறமைசாலி.

இந்த ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் என்ற ஆனந்த விகடன் வழங்கும் விருதினை பெற்றிருக்கும் சக பாடலாசிரியர் மோகன் ராஜனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், ”நானும் பாடலாசிரியர் கார்த்திக் நேதாவும் ஒரே மேடையில் இருப்பது இதுதான் முதல் முறை. எனக்கு மிகவும் பிடித்த கவிஞன், பாடலாசிரியர்.

பாடலுக்குள் நவீன கவிதைகளை உள்ளே வைப்பதில் சாமர்த்தியசாலி. அவர் எழுதி அண்மையில் ஹிட்டான ‘அஞ்சு வண்ணப் பூவே..’ பாடலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். 

‘ஊமை விழிகள்’ படத்தை வெளியிடுவதற்கு முன் நடைபெற்ற சம்பவங்களை நீங்கள் என்னிடம் சொல்லி இருக்கிறீர்கள். அதையே நீங்கள் ஒரு கதையாக உருவாக்கலாம். அவ்வளவு அழகும், திரில்லும் அதில் இருக்கிறது.” என்றார்.

இயக்குநர் உதய்.கே: ”இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பெண் கதாபாத்திரமாகட்டும் அல்லது இனி என்‌ இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களிலாகட்டும் பெண் கதாபாத்திரம் வலிமையாக இருக்கும். இதற்கு என் அம்மா தான் காரணம்.

நான் குறும்படத்தை இயக்கிவிட்டு நேரடியாகப் படத்தை இயக்க வந்தவன். பெரிய அனுபவம் எதுவும் இல்லை. அந்த தருணத்தில் 45 வருட கால அனுபவமுள்ள ஒருவருடன் இணைந்து பயணித்ததை எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக நினைக்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர், அவருடைய குடும்பத்தார்களைவிட எங்களுடன் செலவழித்த நேரம் தான் அதிகம்.  

கீர்த்தியிடம் இருந்துதான் இந்தப் படத்தின் பணிகள் தொடங்கியது. அவர்களிடம் இந்த கதையை குறும்படமாகத்தான் விவரித்தேன். அதில் இந்திரா என்ற கதாபாத்திரம் தான் முக்கியமானது.

நான் எதை மனதில் வைத்துக் கொண்டு கீர்த்தியிடம் இந்திரா கதாபாத்திரத்தை விவரித்தேனோ, அந்த இந்திராவாகத்தான் இந்தப் படத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார்.

படம் பார்த்தவர்கள் அனைவருக்கும் அந்த இந்திரா கதாபாத்திரம் மனதில் நிற்கும்.

அஃகேனம் என்ற டைட்டிலுக்கான காரணம் இதுதான். ஃ என்பது ஆயுத எழுத்தின் வார்த்தை வடிவம். அஃகேனம் என்றால் மூன்று புள்ளி.

அந்த மூன்று புள்ளி என்பது இப்படத்தில் இடம்பெறும் மூன்று கதாபாத்திரத்தினை பிரதிபலிக்கிறது.

அந்த மூன்று முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் கதை என்பதால் இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம்.” என்றார்.

Comments (0)
Add Comment