அஃகேனம் – டைட்டிலுக்கு என்ன அர்த்தம்?

புதிதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வித்தியாசமான டைட்டிலை தேடி எடுக்கிறவர்களின் எண்ணிக்கை தமிழ் திரையுலகில் பெருகி வருகிறது.

அப்படியொன்றாக அமைந்திருக்கிறது அருண் பாண்டியன் தயாரித்து நடித்துள்ள ‘அஃகேனம்’ திரைப்படம்.

இதில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் முதன்மை பாத்திரம் ஏற்றிருக்கிறார். உதய் கே இதனை இயக்கியிருக்கிறார். பரத் வீரராகவன் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

சரி, இப்படம் தரும் காட்சியனுபவம் எத்தகையது?

‘அஃகேனம்’ கதை!

தனது சகோதரியின் மகள் மற்றும் தாய் (சீதா) ஆகியோரோடு வாழ்ந்து வருகிறார் இந்திரா (கீர்த்தி பாண்டியன்). அது அவரது சொந்தத் தாய் அல்ல.

டாக்ஸி ஓட்டி அக்குடும்பத்தைக் காப்பாற்றுகிறார் இந்திரா. இவரது காரில் தினமும் ராம் (பிரவீன் ராஜா) என்பவர் ஏறுகிறார். இருவருக்குள்ளும் மெல்ல நட்புறவு மலர்கிறது.

ராம் பற்றித் தன்னோடு வசிக்கும் அப்பெண்மணியிடம் சொல்ல முற்படுகிறார் இந்திரா. ஆனால், அவரது முயற்சி தடைபடுகிறது.

இன்னொரு புறம், சரா என்கிற சரபோஜியைத் (ஆதித்ய ஷிவ்பிங்) தேடி போலீசார் அலைகின்றனர். ஐடி நிறுவனம் நடத்துவதாகக் கூறி, பல பெண்களைக் கடத்தி விற்பனை செய்த குற்றத்திற்காக அவர் மீது பல வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.

இந்தியா முழுக்கத் தனது அடையாளத்தோடு மறைத்துக்கொண்ட திரிந்த சராவின் சுயரூபம் வெளியுலகுக்குத் தெரியக் காரணமாக விளங்குவது இந்திரா செய்த ஒரு சிறு செயல்.

இதற்கு நடுவே, சிறையில் இருந்து விடுதலையான கொலைக் குற்றவாளி பாண்டி (அருண் பாண்டியன்) சராவைத் தேடி சென்னைக்கு வருகிறார்.

அவருக்கு ஒரு பெரிய கேங்க்ஸ்டர் (ஆதித்ய மேனன்) உதவிகள் செய்கிறார். ஆனால், அவராலும் சராவின் இருப்பிடத்தைத் துல்லியமாக அறிய முடியவில்லை.

இந்தநிலையில், சென்னையில் இருந்து வேறொரு நகரத்திற்கு இடம்பெயர முடிவெடுக்கிறார் சரா. அதற்கேற்ப, தங்களது நெட்வொர்க்கை பெயர்த்தெடுக்கிற வேலையில் அவரது கும்பல் இறங்குகிறது.

அதற்கு முன்னதாக, தனது இயல்பைத் தொலைக்க வைத்த இந்திராவைக் கொல்ல வேண்டும் என்று அடியாட்களுக்கு உத்தரவிடுகிறார் சரா. அதேநேரத்தில், இந்திராவைத் தேடி அலைகிறார் பாண்டி.

ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இம்மூவரும் ஒரு புள்ளியில் சந்தித்தார்களா? அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது ‘அஃகேனம்’ படத்தின் மீதி.

‘அஃகேனம்’ என்பதற்குத் தமிழில் ‘ஃ’ என்றொரு அர்த்தமாம். அதாகப்பட்டது, ஆயுத எழுத்து என்று பொருள். அதனைச் சுட்டுவதற்கேற்ப, இப்படத்தின் டைட்டில் வடிவமைப்பில் ‘தோட்டா’ துளைத்த தோற்றத்தில் ‘ஃ’ எழுத்து இடம்பெற்றிருக்கிறது.

உள்ளடக்கம் எப்படி?

2022-ம் ஆண்டு இனியா நடிப்பில் ‘காபி’ என்றொரு படம் வெளியானது. ஐடி நிறுவனம் என்ற பெயரில் ஆண், பெண்களைக் கடத்துகிற ஒரு கும்பலே அக்கதையில் பிரதானமாக இடம்பெற்றிருந்தது. கிட்டத்தட்ட அதன் கதையை ஒட்டினாற் போலவே, ‘அஃகேனம்’ உள்ளடக்கமும் அமைந்துள்ளது.  

கதையின் மையமாக சரா, இந்திரா, பாண்டி ஆகிய மூன்று பாத்திரங்கள் வருகின்றன. இவர்களில் பாண்டி தவிர்த்து மற்ற இருவரது பின்னணியும் போதுமான அளவுக்குத் திரைக்கதையில் விவரிக்கப்படவில்லையோ என்ற எண்ணம் எழுகிறது.

அதுவே, டைட்டிலுக்கான அர்த்தத்தைத் திரை வடிவம் போதுமான அளவுக்குப் பிரதிபலிக்கவில்லையோ என்றெண்ண வைக்கிறது.

தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை, பரத் வீரராகவனின் பின்னணி இசை சட்டென்று நம்மை ஈர்க்கிறது. காட்சிகளில் இருக்கிற பரபரப்பைப் பன்மடங்காக்குவதில் அது முக்கியப் பங்காற்றியிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் விக்னேஷ் கோவிந்தராஜன், படத்தொகுப்பாளர் தேவாத்யன், கலை இயக்குனர் ராஜா மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒருங்கிணைப்பைச் சரியான முறையில் பெற்று, திரையனுபவத்தைச் செறிவானதாக மாற்ற முயன்றிருக்கிறார் இயக்குனர் உதய் கே.

மூன்று பாத்திரங்கள், அவற்றுக்கு இடையேயான முரண்கள், முட்டல்கள் என்று மைய இழை அமைந்திருந்தாலும், திரைக்கதையில் அது இன்னும் வலுப்பாக வெளிப்பட்டிருக்கலாமோ என்ற எண்ணம் மேலெழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

காவல் நிலையத்திற்குள் நுழைவதா, வேண்டாமா என்று கீர்த்தி பாண்டியன் தடுமாறுகிற காட்சி உள்படச் சில இடங்களில் ‘இண்டர்கட்’டில் அடுத்த காட்சியைக் காட்டி பரபரப்பை அதிகப்படுத்த இயக்குனர் முயன்றிருக்கிறார். ஆனால், அது அவர் எண்ணத்திற்கேற்ப நம்மை ஈர்ப்பதாக இல்லை.

இது போன்ற சில குறைகள், ‘அடுத்தது என்ன’ என்று விறுவிறுப்பாக நகர்கிற திரைக்கதையில் தடைக்கற்களாக நிற்கின்றன.

அவற்றைச் சரிப்படுத்தியிருந்தால், வழக்கமான ஆக்‌ஷன் த்ரில்லர் என்பதைக் கடந்து, செறிவான காட்சியனுபவத்தைத் தந்திருக்கும் ‘அஃகேனம்’.

நடிப்பைப் பொறுத்தவரை கீர்த்தி பாண்டியன், அருண் பாண்டியன், ஆதித்ய ஷிவ்பிங் மூவருமே பாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பைத் தந்திருக்கின்றனர்.

‘யதார்த்த’ பாணியில் குறிப்பிட்ட அளவில் சினிமாத்தனம் கலந்த திரைக்கதை ட்ரீட்மெண்டுக்கு அது போதுமானதாகவே உள்ளது.

அதேநேரத்தில், சில காட்சிகளில் அந்த அளவு கொஞ்சம் அதிகமாகவோ, குறைவாகவோ இருப்பதாகத் தோன்றுகிறது. அதனைச் சரி செய்திருக்கலாம்.

இந்தப் படத்தில் ஆதித்ய மேனன், பிரவீன் ராஜா, ரமேஷ் திலக், ஜி.எம்.சுந்தர், சீதா, ஆடுகளம் முருகதாஸ் உட்படப் பலர் வந்து போயிருக்கின்றனர். அவர்களது நடிப்பு, வழக்கமான தமிழ் படங்களை நினைவூட்டுகிறது.

அதில் இளம் நாயகி நம்ரிதா இடம்பெறுகிற காட்சிகளும் சேர்ந்து கொள்கிறது. என்ன, அவரது இருப்பு படத்தை ‘கலர்ஃபுல்’ ஆக்கி, இன்னும் கொஞ்சம் நேரம் இவரைத் திரையில் காட்டியிருக்கலாமே என்றெண்ண வைக்கிறது.

கீர்த்திக்கு ஆக்‌ஷனும் கைவரும் என்பதைக் காட்டுகிற வகையில் ‘அஃகேனம்’ அமைந்திருக்கிறது. அடுத்து, முழுநீள ஆக்‌ஷன் படத்தில் அவர் நடிக்கக்கூடும்.

அதற்கான முன்னோட்டம் என்ற வகையில், அவருக்கு இப்படம் திருப்தி தரலாம். ரசிகர்களுக்கு அதே அளவுக்குத் திருப்தி கிடைக்குமா என்பது சந்தேகமே.

அதேநேரத்தில், ‘டைம்பாஸ் ஆக ஒரு த்ரில்லர் படம் பார்க்கலாமே’ என்பவர்களுக்கு ‘அஃகேனம்’ ஏற்றதாக இருக்கும்..!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
Comments (0)
Add Comment