பாடலாசிரியராகச் சுமார் முப்பதாண்டுகளாகத் தமிழ் திரையுலகில் இயங்கி வருபவர் பா.விஜய். இயக்குனர் கே.பாக்யராஜிடம் சினிமா கற்றவர். பாடல்கள் எழுதுவதோடு நாயகனாக, கதாசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குனராகக் களம் கண்டவர். தன்னைத் திரையில் முன்னிறுத்துவதற்காக வெவ்வேறு களங்களில் கால் பதித்த பா.விஜய், இம்முறை அர்ஜுனையும் ஜீவாவையும் நாயகர்களாக்கி ‘அகத்தியா’ தந்திருக்கிறார்.
தற்போது இப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் ராஷி கன்னா, ஆர்ஜே ஷரா, ரெடின் கிங்ஸ்லி, ரோகிணி, சார்லி, மெட்டில்டா, எட்வர்ட் சோனன்ப்ளிக், செந்தில், ராதாரவி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
’அகத்தியா’ ட்ரெய்லரை பார்த்தவுடன் ‘இது ஹாரரா, த்ரில்லரா, பேண்டஸியா, அட்வெஞ்சரா, ட்ராமா, ஹிஸ்டரியா, ரொமான்ஸா, ஆக்ஷனா, என்ன வகைமையில் இப்படம் அமைந்திருக்கிறது’ என்ற கேள்வி எழும். படம் பார்த்து முடிந்ததும், அதற்கு நமக்கு விடை கிடைக்கிறதா?
பா.விஜய் தந்திருக்கும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?
‘அகத்தியா’ கதை!
திரையுலகில் கலை இயக்குனராக அறிமுகமாகும் மகிழ்ச்சியில் திளைக்கிறார் அகத்தியா (ஜீவா). அதற்காக, தயாரிப்பாளரின் ஒப்புதலைப் பெறாமலேயே பாண்டிச்சேரியில் ஒரு பங்களாவில் ‘செட்’ அமைக்க ஏற்பாடு செய்கிறார்.
ஆனால், படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கிறார் தயாரிப்பாளர். அதனைக் கேட்டதும் திக்கித் திணறுகிறார் அகத்தியா. ஏனென்றால், கடன் வாங்கிச் சுமார் 30 லட்சம் ரூபாய்க்கும் மேல் செட் அமைக்கச் செலவிட்டிருக்கிறார்.
‘என்ன செய்வது’ என்று தெரியாமல் அகத்தியா விழி பிதுங்கி நிற்க, ‘அந்த பங்களாவையே ‘ஸ்கேரி ஹவுஸ்’ ஆக மாத்திடுவோம்’ என்கிறார் அவரது கேர்ள்பிரெண்ட் வீணா (ராஷி கன்னா).
அந்த யோசனை நல்லதாகப் படுகிறது. உடனே அந்த வேலைகளில் இறங்குகிறார் அகத்தியா.
’ஸ்கேரி ஹவுஸ்’ திறப்பு விழா அன்றே, அந்த பங்களாவில் உண்மையிலேயே பேய் நடமாடுவது (நமக்கு) தெரிய வருகிறது. அது தெரியாமல் அகத்தியாவும் வீணாவும் அங்கு வரும் மக்களைப் பயமுறுத்தி ‘எண்டர்டெயின்மெண்ட்’ செய்கின்றனர்.
இந்த நிலையில், அங்கு வரும் ஒரு இளைஞன் காணாமல் போகிறார். அவர் எங்கே என்று தேடும் முயற்சியில் இறங்குகிறார் அகத்தியா.
அப்போது, அந்த பங்களாவில் ஒரு பிரெஞ்ச் பெண்மணியின் பேய் இருப்பதை அறிகிறார். அவரது பெயர் ஜேக்குலின் பூவிழி (மெட்டில்டா). 1940 காலகட்டத்தில் அங்கு வாழ்ந்தவர்.
ஜேக்குலின் என்னவானார் என்று அறிய முற்படும்போது சித்தார்த்தன் (அர்ஜுன்) பற்றித் தெரிய வருகிறது. அதன் தொடர்ச்சியாக எட்வின் பற்றித் தெரிகிறது.
அந்த பங்களாவில் வசித்தவர், அப்பகுதியை ஆட்சி புரிந்த பிரான்ஸ் நாட்டு பிரபு எட்வின் டூப்ளெக்ஸ் (எட்வர்ட் சோனன்ப்ளிக்). இனவெறி கொண்ட அவர், பாண்டிச்சேரியில் வாழ்ந்த தமிழர்களுக்குக் கொடுமைகளை மட்டுமே பரிசளிக்கிறார். அவரது தங்கைதான் ஜேக்குலின்.
பதின்ம வயதில் ஏற்பட்ட விபத்தினால் கை, கால்கள் செயல்பாடாமல் இருக்கிறார் ஜேக்குலின். பிரான்ஸ் ராணியின் பரிந்துரையின் பெயரில், அவருக்குச் சிகிச்சை அளிப்பதோடு தன்னுடைய சித்த மருத்துவ ஆய்வையும் தொடர முடிவு செய்கிறார் சித்தார்த்தன்.
ஜேக்குலினுக்கு சித்த மருத்துவச் சிகிச்சைகள் தொடரத் தொடர, சித்தார்த்தன் மீதான அவரது அன்பும் அதிகரிக்கிறது. இது எட்வினுக்கு எரிச்சலைத் தருகிறது.
ஒருநாள் அவர் சித்தார்த்தனைக் கொல்ல முடிவெடுக்கிறார். அதன்பிறகு என்ன ஆனது என்று அகத்தியாவுக்குத் தெரியவில்லை. அதனை அறியும் முயற்சிகளில் இறங்குகிறார்.
ஜேக்குலின் பேயாக இருக்கிறார் என்றால், சித்தார்த்தன் என்ன ஆனார்? இந்த கேள்விக்குப் பதில் தேடுகிறபோது, அந்த பங்களாவே எட்வின் பிடியில் இருப்பது அகத்தியாவுக்குத் தெரிய வருகிறது.
அப்போது, தான் அந்த பங்களாவுக்கு வந்ததன் பின்னணியில் ஒரு காரணம் இருப்பதை அறிகிறார். சித்தார்த்தன் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் தனக்கிருப்பதையும் உணர்கிறார்.
அதன்பிறகு என்ன ஆனது? சித்தார்த்தனுக்கு நேர்ந்தது என்ன என்று அகத்தியா அறிந்தாரா? இந்த கேள்விகளுக்கு நீட்டி முழக்கிப் பதில் சொல்கிறது ‘அகத்தியா’வின் மீதி.
உண்மையைச் சொன்னால், இது ‘ஹாரர் அட்வெஞ்சர்’ படத்திற்கான நல்லதொரு கதை. ஆனால், இதில் ஆன்மிகத்தைக் கலக்கிறேன் பேர்வழி என்று இறங்கியதோடு ஆக்ஷன், த்ரில்லர், ட்ராமா, ரொமான்ஸ் என்று பல வகைமைகளைத் திரைக்கதையில் திணித்திருக்கிறார் இயக்குனர் பா.விஜய். அதனால், எந்தச் சுவையை மேலோங்க வைப்பது என்று புரியாமல் குழம்பித் திணறியிருக்கிறது திரைக்கதை.
தவறிப்போன ’தெளிவு’!
இப்படத்தின் கதையில் ஜீவா நிகழ்காலத்திற்கான நாயகன் என்றால், அர்ஜுன் கடந்த காலக் காட்சிகளில் நாயகன். அதனைத் தெளிவாக முடிவு செய்து திரைக்கதையை ‘ஓகே’ செய்திருக்கிறார் இயக்குனர் பா.விஜய்.
அதில் தெளிவு கொண்டவர், இந்தக் கதையை எந்த திசையில் திருப்புவது என்பதில் ரொம்பவே குழம்பியிருக்கிறார். அதனால், திரைக்கதையில் வரும் சில திருப்பங்களை எப்படி, எப்போது, என்ன காரணத்திற்காக வெளிப்படுத்துவது என்பதில் சுணக்கம் காட்டியிருக்கிறார்.
ஜீவா, அர்ஜுன் நடிப்பு ‘ஓகே’ என்றளவில் இருக்கிறது. படப்பிடிப்பு நிகழ்ந்த காலம் நீண்டது என்பது இருவரது தோற்றத்திலும் பெரிதாக வெளிப்படவில்லை.
எந்தப் படமானாலும் அழகாகத் தோற்றமளிக்கிற வழக்கம் கொண்ட ராஷி கன்னா, இதில் சுமாராகத் தெரிகிறார். என்ன காரணம் என்று தெரியவில்லை.
படத்தில் நகைச்சுவைக்கென்று ஆர்ஜே ஷரா, ரெடின் கிங்ஸ்லியை அழைத்து வந்திருக்கின்றனர். ஓரிரு காட்சிகள் அவர்கள் சிரிப்பை விதைக்க, ‘போதும்பா போதும்..’ என்று அவர்களை ‘டாட்டா’ காட்டி அனுப்பி வைத்திருக்கிறார் இயக்குனர். அதன்பிறகு மொத்த திரைக்கதையும் ‘சீரியசாக’ திரும்பிவிடுகிறது.
சார்லி, ரோகிணி, செந்தில், ராதாரவி, நிழல்கள் ரவி, யோகிபாபு, விடிவி கணேஷ், அபிராமி, பூர்ணிமா பாக்யராஜ், கின்னஸ் பக்ரூ என ஒவ்வொருவரும் ஆளுக்கொன்று அல்லது இரண்டு காட்சிகள் என முறை வைத்து முன்பாதியில் வந்து போயிருக்கின்றனர்.
’ஒவ்வொரு காட்சியும் ஒரு வகைமையில் உருவாக்க வேண்டும்’ என்று இயக்குனர் தன் மனதில் கொண்ட திரைக்கதை ட்ரீட்மெண்டுக்கு உருவம் தர ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி, படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், கலை இயக்குனர் சண்முகம் மற்றும் பின்னணி இசை தந்த யுவன்சங்கர் ராஜா அனைவரும் உழைத்திருக்கின்றனர்.
வழக்கம்போல, காட்சிகளில் இருக்கும் உணர்வினை அடிக்கோடிடும் பணியைச் செய்திருக்கிறார் யுவன்.
கிளைமேக்ஸில் வரும் விஎஃப்எக்ஸ் காட்சியானது ‘அனிமேஷன் படம்’ பார்த்தது போலிருக்கிறது. அதனை ‘ப்ளஸ்’ ஆக கருதி படக்குழு விளம்பரங்களில் பயன்படுத்தலாம்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் பா.விஜய், ‘அகத்தியா’வில் அனைத்து வகைமைகளும் நிறைந்திருக்குமாறு திரைக்கதை அமைத்ததில் தவறில்லை. ஆனால், ஒட்டுமொத்தமாக அது பெறும் உருவம் குறித்த தெளிவு அவரிடம் இருந்ததா எனத் தெரியவில்லை.
ஏனென்றால், ‘இது இல்லேன்னா அது’ என்று ஒவ்வொரு வகைமையும் கை பிடித்து இழுத்துச் சென்றாற் போலவே காட்சிகள் திரையில் நகர்கின்றன. அதுவே இப்படத்தின் பலவீனம்.
’விருந்து நடந்தபிறகு மீதமான உணவுகளை ஒரே பாத்திரத்தில் இட்டு, பழைய கறியாக்கினால் சுவையா இருக்குமே’ என்பவர்கள் ‘அகத்தியா’வைக் கண்டால் வேறுவிதமாக உணரக்கூடும்.
உண்மையைச் சொன்னால், பேண்டஸி கதையைப் படமாக்குகிறோம் என்றானபிறகு லாஜிக் மீறல்களை தூக்கிக் கடாசிவிட்டு கோதாவில் குதிப்பதுதான் சிறப்பானது.
’ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களோ இல்லையோ’ என்ற பயத்திலேயே அப்படியொரு முயற்சியை மேற்கொண்டதற்குப் பதிலாக, ‘ரிசல்டை பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று இறங்கி அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதனைச் செய்யாத காரணத்தால், இப்போது கலவையான விமர்சனங்களைப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறது ‘அகத்தியா’.
‘என்னதான் இருக்குன்னு பார்ப்போம்’ என்கிற பொறுமை உள்ளவர்கள் இப்படத்தைக் கண்டு ரசிக்கலாம்; ஓரளவுக்கு திருப்தியுடன் திரும்பலாம். அதேநேரத்தில், பாஸ்ட்புட் சாப்பிட விரும்புபவர்களுக்கு, இந்த பழைய கறி பிடித்துப் போவது சந்தேகம் தான்..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்