நடிகர் ஏ.வி.எம்.ராஜனின் மனைவியும், பழம்பெரும் நடிகையுமான புஷ்பலதா காலமானார். அவருக்கு வயது 86.
புஷ்பலதாவின் சொந்த ஊர் மேட்டுப்பாளையம். 1961 ஆம் ஆண்டு வெளிவந்த, ‛கொங்கு நாட்டு தங்கம்’ திரைப்படம் மூலம், நடிகையாக அறிமுகமானவர் புஷ்பலதா.
தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்தார்.
எம்.ஜி.ஆருடன் நடித்த படங்களில் எங்கள் தங்கம், உரிமைக்குரல், நீதிக்கத் தலை வணங்கு ஆகிய படங்களும், சிவாஜியுடன் நடித்த சினிமாக்களில் பார் மகளே பார், ஆலயமணி, பச்சை விளக்கு ஆகிய படங்களும் குறிப்பிடத்தக்கவை.
ரஜினியின் ‘நான் அடிமை இல்லை’, கமல்ஹாசனின் ‘கல்யாணராமன்’, ‘சகலகலா வல்லவன்’ உள்ளிட்ட படங்களிலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
1964ஆம் ஆண்டில் லக்ஸ் சோப் விளம்பரத்தில் மாடலாக நடித்தார். ‘நானும் ஒரு பெண்’ படத்தில் ஏ.வி.எம்.ராஜனுடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு மகாலட்சுமி, அபிராமி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். மகாலட்சுமி சில சினிமாக்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஆனால் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
70-களில் இருந்து ஏராளமான துணைக் கதபாத்திரங்களில் நடித்த அவர் 1999ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான ‘பூவாசம்’ என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
ஏவிஎம் ராஜனும், புஷ்பலதாவும் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி, கிறிஸ்தவ மதத்தில் இணைந்து பிரச்சாரம் செய்து வந்தனர்.
சென்னை தியாகராயநகர் திருமலைப்பிள்ளை சாலையில் வசித்து வந்த புஷ்பலதா, வயது மூப்பு காரணமாக, தனது 86வது வயதில், நேற்று மரணம் அடைந்தார்.
புஷ்பலதாவின் மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
– பாப்பாங்குளம் பாரதி.