இந்திய சினிமாவில் வரலாறு படைக்கவிருக்கும் ‘டாக்ஸிக்’!

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் கீது மோகன்தாஸ். தமிழில் சத்யராஜ் நடித்த ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் சிறுமியாக நடித்திருந்தார்.

அடுத்து, மாதவன் நடித்த ‘நள தமயந்தி’ படத்தில் நாயகியாக நடித்தார். இது தவிர மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்தியில் நவாசுதீன் சித்திக் நடித்த ‘லயர்ஸ் டைஸ்’ படத்தை இயக்கியிருந்தார்.

இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. கடைசியாக நிவின் பாலி நடிப்பில் ‘மூத்தோன்’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இந்த நிலையில், ‘கேஜிஎப்’ யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த ஆண்டு இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் தயாராவதால் படப்பிடிப்புக்கு அதிக நாளும், அதிக பட்ஜெட்டும் தேவைப்படுகிறது என்கிறார் கீது மோகன்தாஸ்.

இது தொடர்பாகப் பேசிய கீது மோகன்தாஸ், ”டாக்ஸிக் படத்திற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வை இந்தியாவிலும், உலக அளவில் உள்ள பார்வையாளர்களுடன் உண்மையாகவே எதிரொலிக்கும் ஒரு கதையை உருவாக்குவதாகும்.

கதையின் நுணுக்கங்களை கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பிரத்யேகமாக படமாக்க நாங்கள் உழைத்துள்ளோம்.

இது பல்வேறு மொழி மற்றும் கலாச்சாரப் பின்னணியில் உள்ள பார்வையாளர்களுக்கு ஒரு நிஜமான அனுபவத்தை உறுதி செய்யும்” என்கிறார் நம்பிக்கையுடன்.

Comments (0)
Add Comment