கால நேரம் தெரிஞ்சுதான் எழுதணும்!

திரைக்கலைஞர் சிவகுமார்

”தமிழ் சினிமா வரலாற்றின் உச்சம் ‘பராசக்தி’ திரைப்படம் அழியா வரம் பெற்ற படைப்பாக அதை உருவாக்கியது கலைஞரின் வசனங்கள். திரைப்படத்துறையில் நுழைய விரும்பும் ஒரு நடிகனுக்கு முதல் தகுதியாக ‘பராசக்தி’ வசனங்கள் இருந்த காலத்தை மறுக்க முடியாது.

இரண்டரை மணி நேரப் படத்தை, கடைசி ஐந்து நிமிடத்தில் சாரமாகக் கொடுத்ததை, அதன் பின்னர் யாராலும் செய்ய முடியவில்லை.

அந்த வசனங்களை எனது பத்து வயதில் மனப்பாடம் செய்யும்போது கலைஞரை அறிந்தேன். பின்னாட்களில் அவரைச் சந்திப்பேன், அவருடன் பழகுவேன் என்றெல்லாம் நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. எனது திரைத்துறை நுழைவுக்கு அந்த வசனங்கள் நுழைவுச் சீட்டாக இருந்தன என்று கூறலாம்.

இரண்டு வரி வசனங்கள்

அவரது கதை வசனத்தில் ‘பாசப் பறவைகள்’, ‘பாடாத தேனீக்கள் என இரண்டு படங்களில் நடித்துள்ளேன். அப்போது எங்களுக்கான வசனங்கள் நறுக்குத் தெறித்தாற்போல சின்னச் சின்னதாக எழுதி இருப்பார்.

“அண்ணே சிவாஜிக்கு மட்டும்தான் பக்கம் பக்கமா வசனமெல்லாம் தருவீங்க, எங்களுக்கு எல்லாம் திருக்குறள் மாதிரி இரண்டு வரிகள்தானா?” எனக் கேட்போம்.

“இந்தக் காலத்தில் அப்படியான வசனமெல்லாம் கேட்கமாட்டாங்கய்யா, கால நேரம் தெரிஞ்சுதானே எழுதணும்” என்பார்.

அப்படி காலமாற்றத்தைப் புரிந்து கொண்டவராகவும் கலைஞர் இருந்தார். அந்த இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

அந்தப் படங்களில் நடிக்கும்போதுதான் ‘சங்கத் தமிழ்’, ‘குறளோவியம் ‘நெஞ்சுக்கு நீதி’ முதல் இரண்டு பாகங்கள் ஆகிய நூல்களை அன்பாக அளித்தார்.

அந்த நூல்களை உடனேயே படித்தும் விட்டேன்.

ஒருமுறை நியூ உட்லேண்ட்ஸ் ஓட்டலில் அவரது குடும்ப உறவினர் ஒருவரின் திருமணத்தின்போது, அந்த நூல்களைப் படித்துத் தயாரித்துக் கொண்டு, மேற்கோள்களை எடுத்துப் பேசியதும் அவர் மகிழ்ச்சி அடைந்தார்.

அவரது வாழ்த்துரையின்போது, “அந்தப் புத்தகங்களை எல்லாம் கழகத் தொண்டர்கள் படித்து, அது குறித்துப் பேச வேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால், சிவகுமார் அதைப் படித்து, பேசி, என் நெஞ்சில் பால் வார்க்கிறார்” எனப் பாராட்டினார்.

கலைஞரை வரைந்தேன்!

1989-ஆம் ஆண்டு, எனது ஓவியங்களைப் பார்க்க வர வேண்டும் என அழைப்பு விடுத்தேன். திடீரென ஒருநாள், வீட்டுக்கு கலைஞர் வர உள்ளதாகத் தொலைபேசி அழைப்பு வருகிறது. அவரை வரவேற்பதற்காக வீட்டு வாசலில் மாலையுடன் காத்திருந்தேன்.

நட்பு அடிப்படையில் வருகிறார், அவருக்கு மாலை போடுவதா, வேண்டாமா என்கிற தயக்கம் எனக்கு இருந்தது.

அவர் வந்ததுமே அதைத்தான் கேட்டார். “எதுக்குய்யா மாலையெல்லாம்” என்றார்.

நானும் தயங்காமல், “அண்ணே இதுதான் சரியாக இருக்கும்” எனக் கூறி வரவேற்றேன்.

எனது வீட்டில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் இருந்தார். எப்போதும் தொண்டர்கள் சூழ, பரபரப்பாக இருக்கும் கலைஞர். ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் எதுவும் பேசாமல் என் ஓவியங்களைப் பார்த்து ரசித்தார்.

நான் வரைந்த பெரியார் படத்தைக் காட்டியதும், பார்த்து மகிழ்ந்தவர். ‘என் படத்தை எப்போ வரையப் போறீங்க?’ எனக் கேட்டார்.

“அண்ணே, நீங்க கண்ணாடி போடாத படம் இருந்தா அதை வரைந்து தருகிறேன்” என 1969-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது, கருப்புக் கண்ணாடி இல்லாத படத்தைக் கேட்டு வாங்கி வரைந்து அனுப்பினேன்.

ஒளிவு மறைவில்லாத பேட்டி

அவர் பரபரப்பாக இருந்த மற்றொரு நேரத்திலும், எனக்காக நேரம் ஒதுக்கிப் பல விஷயங்களைப் பேசி இருக்கிறார். 1988-ஆம் ஆண்டு ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழுக்காக கலைஞரை சிறப்புப் பேட்டி கண்டேன்.

“அண்ணா நான் கேட்கும் எல்லா கேள்விக்கும் பதில் சொல்லணும். அது உங்க கொள்கையைக் கேள்வி கேட்பதாக இருந்தாலும் மறுக்கக்கூடாது” என்றேன். அந்தப் பேட்டி மிகச் சிறப்பாக வந்தது.

கலைஞரிடம் அதுவரை அப்படி ஒரு நேர்காணலை யாரும் செய்திருக்க முடியாது. எனது முதல் கேள்வியே “நீங்கள் சாமி கும்பிட்ட அனுபவம் உண்டா?” என்பதுதான்.

அந்தப் பேட்டியின்போது என்னிடம் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். பள்ளிக்காலம், அரசியல், திரை வாழ்க்கை என கலைஞர் குறித்து அந்தப் பேட்டியில் பகிர்ந்து கொண்டவை காலத்துக்கும் நிற்பவையாகும்.

பவள விழா கண்ணீர்

1998-ஆம் ஆண்டு, கலைஞர் பவள விழாக் கொண்டாட்ட மேடையில் பேசுகிறேன். அவரது ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ஐந்து நிமிட வசனத்தை வாசிக்கிறேன். அப்போது அரங்கில் இருந்த கலைஞர், சிவாஜி கணேசன் இருவரது கண்களில் இருந்தும் கண்ணீர்.

பிறகு நான் பேசியதைக் குறிப்பிட்டுப் பேசிய சிவாஜி, கலைஞரும் தானும் தஞ்சை பெரிய கோயிலுக்குக் காற்று வாங்கப் போன நினைவுகள் போல் பலவற்றைப் பகிர்ந்துகொண்டார்.

இப்படி கலைஞரின் ஒவ்வொரு காலத்துக்கும், வசனத்துக்குப் பின்னால் ஒரு வரலாறு இருப்பதை அறியலாம்.

மகன்களை வாழ்த்தினார்!

1997 ஆம் ஆண்டு என் மகன் சூர்யா நடித்து வெளியான ‘நேருக்கு நேர்’ திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்க்க கலைஞரை அழைத்தேன். என் அழைப்பின் பேரில், வருகை தந்து படம் பார்த்து சூர்யாவை நெஞ்சார வாழ்த்தினார்.

அதேபோல 2007-ஆம் ஆண்டு கார்த்தி நடித்த ‘பருத்தி வீரன்’ படம் வந்தது. படம் பார்த்தவர், ஆச்சரியப்பட்டார்.

”ஒரு சீன்கூட எதிர்பார்த்த மாதிரி இல்லப்பா, புதுசா இருக்கு’ என வியந்தார்.

அடுத்த நாள், “படத்தின் இறுதிக் காட்சியைப் பார்த்து என்னால் தூங்க முடியவில்லை, அவ்வளவு வருத்தமாக இருந்தது” எனக் கூறினார்.

திரைத்துறைக்குப் புதிய அலை இயக்குநர்களின் வருகை, அவரை அந்த அளவுக்கு உற்சாகப்படுத்தி இருந்தது.

படிப்பை நிறுத்திய கொள்கைவெறி!

நான் எடுத்த நேர்காணலின்போது அவரது கல்வித் தகுதியைக் கேள்வி கேட்டேன். “படித்துப் பட்டம் பெற்று ஆட்சிப் பணிவரை சென்றிருந்தால், இன்னும் சிறப்பான நிலை அடைந்திருக்கலாம் அல்லவா?” எனக் கேட்டேன்.

தான் திறமை குறைவு காரணமாகப் படிப்பதை நிறுத்தவில்லை. கொள்கை வெறி காரணமாகப் படிக்கச் செல்லவில்லை என்றும், தேர்வு நாட்களில் பெரியாருடன் சுற்றுப்பயணத்தில் இருந்ததாகவும் கூறினார்.

அந்த கலைஞரின் திறமையையும் கொள்கையையும்தான் பின்னாட்களில் தமிழ்நாடு கண்டது.

கலை, இலக்கியம், அரசியலில் நமது காலத்தில் யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத உயரமும் ஆழமும் கொண்டவர் கலைஞர். அந்த இடம் என்றும் அப்படியே இருக்கும்!.

******

நீரை மகேந்திரன் தொகுத்து, முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘கலைஞரும் நானும்’ நூலிலிருந்து ஒரு பகுதி.

நன்றி: நீரை மகேந்திரன்.

Comments (0)
Add Comment