பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகுமார், நடிகர் சங்க கடனை அடைத்து மீட்டெடுத்த மிகப்பெரிய ஆளுமை கேப்டன் விஜயகாந்தின் பெயரை புதிய நடிகர் சங்க கட்டிடத்திற்கு சூட்ட வேண்டும் என்று இயக்குநர் சசிக்குமார் கோரிக்கை விடுத்தார்.
விஜயகாந்தின் நினைவிடத்தில் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் நடிகர் அருண் விஜய் கையில் கட்டுடன் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சண்டை பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தால் சிகிச்சையில் இருந்தேன். இதனால் விஜயகாந்த் சாரின் இறுதி ஊர்வலத்திற்கு வர முடியவில்லை. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒன்றரை மாசத்துக்கு அப்பறம் இப்பதான் வெளியில் வர்றேன்.
முதலில் அவருக்கு வந்து மரியாதை செய்ய வேண்டும் என நினைத்து இங்கு வந்தேன். எனக்கு விஜயகாந்த் சார் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவரது சண்டை காட்சியில் ஒரு தனித்துவம் இருக்கும்.
எல்லாரும் சினிமாவிற்கு வரும் போது ரஜினி சார், கமல் சார் போன்று வர ஆசைப்படுவார்கள். ஆனால், எனக்கு விஜயகாந்த் சார் மாதிரி சண்டை காட்சியில் தனித்துவம் காட்டி, மக்கள் மனதில் இடம்பெற வேண்டும் என ஆசைப்பட்டேன். அந்த எண்ணத்தில் தான் சினிமாவிற்கு வந்தேன்.
எவ்வளவோ நல்ல விஷயங்களை திரையுலகிற்காக பண்ணியுள்ளார். இப்படி ஒரு சிறந்த மனிதரை தமிழ் திரையுலகமும், தமிழ் நாட்டு மக்களும் இழந்து விட்டோம். விஜயகாந்த் சார் தான் செய்த நல்ல விஷயங்களை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என நினைப்பார்.
அதனால், இனி வரும் காலங்களில் என்னுடைய படங்களின் படப்பிடிப்பு தளங்களில் அனைவருக்கும் ஒரே விதமான உணவு வழங்கப்படும் என்பதை அவரது நினைவிடத்தில் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நடிகர் சங்க வளாகத்தை திருப்பி மீட்டு கொடுத்த அவருடைய பெயரை நடிகர் சங்க கட்டிடத்துக்கு வைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கோரிக்கையும். அதனை நிர்வாகிகள் நிச்சயமாக முன்னின்று செய்வார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
தனது படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்கப்படும் என அருண் விஜய் தெரிவித்துள்ளது பலரிடமும் பாராட்டுக்களை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யாவும் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் பேட்டிக் கொடுத்த சூர்யா, “அண்ணனைப் போல யாரும் இல்லை, இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாதது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு தான்.
எப்போதும் அவரின் நினைவு இருக்கும். அதேபோல் நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்டுவதற்கு எனக்கு சம்மதமே, நடிகர் சங்கத்தை மீட்டெடுத்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு” என தெரிவித்துள்ளார்.