இளம் வயதிலேயே அவரது கனவு – சினிமா. வீட்டில் இருந்த சிரமங்கள் அவரை போர்ட்டராக இருந்து கண்டக்டராக ஆக்கியது,
ஆனாலும் தனது சினிமா கனவை, அவர் நிறைவேற்றிக்கொண்டார்.
இதற்கு, அவரது நண்பர் ராஜ் பகதூர் உறுதுணையாக இருந்ததார். தனது சினிமாப் பயணத்தின் தொடக்கம் முதல் இன்று வரை அவர் சந்தித்து வரும் பிரச்சினைகள் ஏராளம்.
1989 ஆம் ஆண்டு வாக்கில், தனது நண்பர் ஒருவர் ஆரம்பித்திருந்த குளிர்பான தொழிற்சாலையை திறக்க ரஜினிகாந்த் மதுரை வந்திருந்தார். அந்த நண்பர், திருச்சி முன்னாள் மக்களவை உறுப்பினர் அடைக்கலராஜ்.
அப்போது ரஜினி, தளபதி படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜீவி, நடிகர் ஜெய்சங்கர் ஆகியோரும் ரஜினியுடன் வந்திருந்தார்கள்.
ரஜினி செய்தியாளர்களைச் சந்தித்தபோது உடனிருந்த ஜீவி, ‘இனி ரஜினி படம் இல்லாமல் தீபாவளி இல்லை.. இனி ரஜினி படம் இல்லாமல் பொங்கல் இல்லை, புத்தாண்டு இல்லை’என உணர்ச்சி வசப்பட்டார்.
தளபதி படத்தின் பாடல் கேசட் மட்டுமல்லாமல், பின்னணி இசையையும் தனி கேசட்டாக வெளியிடும் உத்தேசம் இருப்பதாகவும் அவர் சொன்னார்.
தொடக்கவிழா நிகழ்ச்சி மாடவீதிகள் சந்திப்பில் நடைபெற்றது. நான்கு மாட வீதிகளிலும் ஜனத்திரள்.
இப்படி ஒரு விழா நடக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் கிடையாது.
பத்திரிகை விளம்பரமோ, சுவரொட்டி விளம்பரமோ கூட இல்லை. மதியம் வாக்கில் பரவிய வாய்மொழி தகவல், மாலையில் லட்சம் பேரை திரட்டி இருந்தது.
ரஜினி மனசுக்குள், அரசியல் ஆசை இந்த இடத்தில் தான் துளிர் விட்டிருக்க வேண்டும்.
அதனை உள்ளேயே அடக்கி வைத்து, 1996 ஆம் ஆண்டு, ஒரு ‘டிரைலர்’ போல் வெளியிட்டு ஆழம் பார்த்திருந்தார்.
திமுக – தமாகா கூட்டணிக்கு ஆதரவாக ‘வாய்ஸ்’ கொடுத்தார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்தது.
உச்சத்தில் இருந்த நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட பெரும் சறுக்கல், ‘பாபா’ படத்தின் தோல்வி.
அது – ஒரு அரசியல்.
‘ரஜினியின் சேப்டர் முடிந்து விட்டது’ என அப்போது சிலர் குதூகலித்தார்கள். ஸ்வீட் எடுத்துக் கொண்டாடினார்கள்.
மவுனமாக இருந்த ரஜினி, புயலின் வீச்சாக கொடுத்த வெற்றிதான், ‘சந்திரமுகி’. படத்தின் தரம், ரசிகர்கள் ஒரு புறம் இருந்தாலும், இந்த மாபெரும் வெற்றிக்கு பின்னால் நின்றவர்கள், தமிழக மக்கள்.
‘ரஜினியின் சேப்டர் குளோஸ்’ என்ற வார்த்தையை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால்தான் கூட்டம் கூட்டமாக தியேட்டர்களை நோக்கிப் படையெடுத்து வந்து ஒரு ஆண்டு தாண்டியும் படத்தை ஓட வைத்தனர்.
அடுத்த வெற்றி – ‘ஜெயிலர்’.
‘அண்ணாத்த’ படம் எதிர்பார்த்த வெற்றி அடையாததால் ரஜினியின் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தையே கபளீகரம் செய்ய ஒரு கூட்டம் காய் நகர்த்த ஆரம்பித்தது.
கோடம்பாக்கத்தில் உயர்ந்த நாற்காலிகளில் இருந்தவர்களே பகிரங்கமாக இந்தக் காரியங்களில் ஈடுபட ஆரம்பித்தனர். ஜெயிலர் படம் தோற்க வேண்டும் என இந்த கூட்டம் கோயில்களில் மண் சோறு சாப்பிட்டதாக கூட தகவல் உண்டு.
ஆனாலும், சந்திரமுகியை ஓட வைத்த அதே ஜனங்கள் ஜெயிலரையும் வெற்றிப் பெறச்செய்தனர்.
‘ஒரே சூரியன் – ஒரே சந்திரன் – ஒரே சூப்பர் ஸ்டார்’ என்பதே அவர்கள், மனதுக்குள் பொறித்து வைத்துள்ள ‘கல்வெட்டு’.
அவ்வப்போது ரஜினி படத்தை விட, அவருக்கு அடுத்த படியில் உள்ள நடிகர்கள் படம் ஓடினால், ‘முதலிடத்துக்கு முன்னேறுகிறார்’ என செய்திகள் வரும்.
ஆனால் அந்த நடிகரின் அடுத்தடுத்த படங்கள் ‘பிளாப்’ ஆகும். ரஜினி முதலிடத்திலேயே இருப்பார். ஏனென்றால் அவர் மக்கள் மனதில் பதிந்திருக்கிறார்.
‘ஜெயிலர்’ வெற்றியைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இது அவரது 170-வது படம்.
அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிக்கப்படும் என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்துடன் ரஜினி பிறந்தநாள் டீசர் வீடியோவும் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். மக்கள் கலைஞனாக இருப்பதால், ரஜினியின் வெற்றிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
-பாப்பாங்குளம் பாரதி.