‘விடாமுயற்சி‘யைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘விடாமுயற்சி’.

அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ், எடிட்டராக ஸ்ரீகாந்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பிரேக்டவுன் என்ற ஹாலிவுட் படத்தைத் தழுவி இதன் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்.

‘விடாமுயற்சி’. பல்வேறு சிக்கல்களைக் கடந்து இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது.

முதல் காட்சியாக இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு அமெரிக்காவில் திரையிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் விடாமுயற்சி திரையிடப்பட்டது. தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு ஆரம்பமானது.

கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளியானது. அதன் பின்னர் சுமார் 2 ஆண்டுகளாக அஜித்தின் படங்கள் வெளியாகாததால், அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர்.

இந்த ஆண்டுப் பொங்கலுக்கு ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ள அஜித் திரைப்பட ரிலீஸை அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

நேற்று இரவு முதலே தமிழ்நாட்டின் பல்வேறு திரையரங்குகளில் இசை நிகழ்ச்சிகள், கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அஜித் ரசிகர்கள் அமர்க்களப்படுத்தினர்.

சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு போக்குவரத்து போலீசார் அதிர்ச்சி அளித்தனர்.

வெற்றி தியேட்டர் முன்பு, சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு போலீசார் ரூ.1,000 அபராதம் விதித்தனர்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment