அஜித்தைத் தேடி வந்த உயரிய ‘அங்கீகாரம்’!

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு பத்ம விருதுகளை வழங்கி ஒன்றிய அரசு கவுரவித்து வருகிறது. அதன்படி 2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி 25ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதில் 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்மஸ்ரீ என 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், முதற்கட்டமாக 71 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

இதில், கலைத்துறையில் சிறந்த பங்களிப்பிற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதினைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.

இதே போல், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஷ்வின், சிற்பக் கலைஞர் ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், தொழிலதிபர் ஆர்.ஜி.சந்திரமோகன், பிரபல சமையல்கலை நிபுணர் தாமு, பத்திரிகையாளர் லட்சுமிபதி உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

சுசுகி மோட்டார்ஸ் முன்னாள் தலைவர் மறைந்த ஒசாமு சுசுகி, மலையாள எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான மறைந்த வாசுதேவன் நாயர், வயலின் கலைஞர் லட்சுமிநாராயணா சுப்ரமணியம் உள்ளிட்ட 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, பீகார் முன்னாள் துணை முதல்வர் மறைந்த சுஷில் குமார் மோடி, ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ் உள்ளிட்ட 10 பேருக்கு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது.

பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, தொழிலதிபர் பவன் குமார் கோயங்கா உள்ளிட்ட 57 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மீதமுள்ளவர்களுக்கு வேறொரு நாளில் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளன.

Comments (0)
Add Comment