குற்றவாளிக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்குமான வித்தியாசம் நிறையவே உண்டு. ஆனால், சமூகத்தின் பார்வை இருவர் மீதும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். விசாரணை என்ற ஒன்றே அவர்களை வேறுபடுத்திக் காட்டும். அதுவும் முறையாக நடவாதபோது என்னவாகும்?
இந்த கேள்விக்கான பதிலாகச் சில பதில்கள் ஏற்கனவே தமிழில் வெளியாகின்றன. அவற்றில் இருந்து வேறுபட்டு நிற்க முயற்சித்திருக்கிறது ‘அக்யூஸ்ட்’. உதயா, அஜ்மல் அமீர், யோகிபாபு, ஜான்விகா நடித்திருக்கிற இப்படத்தை பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கியிருக்கிறார்.
‘அக்யூஸ்ட்’ தரும் திரையனுபவம் எத்தகையது?
‘அக்யூஸ்ட்’ கதை!
கனகசுப்புரத்தினம் (உதயா) என்ற கணக்கு மீது சில பல வழக்குகள் காவல் துறையில் பதிவாகியிருக்கின்றன. தற்போது, ஒரு அரசியல் பிரமுகர் கொலை வழக்கில் கைதாகிப் புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார். நீதிமன்ற விசாரணைக்காக அவரைச் சேலத்திற்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
விசாரணைக்காக அழைத்துச் செல்லும் கைதியை ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு ஒரு இன்ஸ்பெக்டரும் இரண்டு கான்ஸ்டபிள்களும் செல்கின்றனர்.
வழியில் ஓரிடத்தில் கைதி கணக்கை ஏற்றிச் செல்லும் வாகனம் பழுதாகி நின்றுவிடுகிறது. அதையடுத்து, அவரை அரசுப் பேருந்தில் ஏற்றிச் செல்கின்றனர் போலீசார்.
அந்த பேருந்தைச் சிலர் பின்தொடர்கின்றனர். அந்த கும்பலைச் சேர்ந்த சிலர் ஒரு நிறுத்தத்தில் மொத்தமாகப் பேருந்தில் ஏறுகின்றனர்.
பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், திடீரென்று அவர்கள் கணக்கைத் தாக்க முற்படுகின்றனர். வேந்தன் அவர்களைத் தடுக்கிறார். அந்த களேபரத்தில் பேருந்து விபத்துக்குள்ளாகிக் கவிழ்கிறது.
தாக்குதலில் காயமடைந்த கணக்கை அழைத்துக்கொண்டு ஒரு அரசு மருத்துவமனைக்குச் செல்கிறார் வேந்தன். ஆனால், அங்கும் வந்துவிடுகிறது அந்தக் கும்பல். அங்கிருந்து அவர்கள் கணக்கைக் கடத்திச் செல்கின்றனர். அதனைக் கண்டு பதற்றமடையும் வேந்தனால் அவர்களைத் தடுக்க முடிவதில்லை.
மயக்கத்தில் இருக்கும் கணக்கு கண் விழித்தவுடன் அவரைக் கொல்ல வேண்டும் என்பது அந்தக் கூலிப்படைக்கு பணம் தந்தவரின் எண்ணம்.
அது நிகழ்ந்ததா அல்லது அதற்குள் வேந்தன் அவர்கள் இருக்குமிடத்தைக் கண்டறிந்தாரா?
அதன்பின் என்ன நடந்தது? அடுத்த நாள் காலையில் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட கணக்கு ஆஜர்படுத்தப்பட்டாரா என்கிறது ‘அக்யூஸ்ட்’வின் மீதி.
பழைய படங்களின் வாசனை!
குற்றம்சாட்டப்பட்ட நபரை அழைத்துக்கொண்டு காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் பயணம் மேற்கொள்கிற கதைகள் திரையுலகுக்குப் புதிதல்ல. பிரபு சாலமனின் ‘மைனா’ கூட இத்தகையதே. அதனை நினைவூட்டும் வகையில் இப்படத்தில் அவரே ஒரு பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்.
அந்தப் படத்தில் இருந்து வித்தியாசப்படுகிற வகையில் சில விஷயங்களைச் சேர்த்தாக வேண்டும். அப்படி இந்தப் படத்தில் ‘கமர்ஷியல் இலக்கணங்களுக்குள்’ அடங்கும் வகையில் காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன் அம்சங்கள் கலக்கப்பட்டிருக்கின்றன. அவை பல ‘பழைய’ படங்களை நினைவூட்டுகின்றன.
அவ்வாறில்லாமல் கிடைத்திருக்கும் நல்லதொரு கதைக்கருவை முதன்மைப்படுத்துகிற மாதிரியான திரைக்கதை ட்ரீட்மெண்டை கைக்கொண்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ‘அக்யூஸ்டு’ தவறவிட்டிருப்பது அதைத்தான்.
முன்பாதி முழுக்க நாயக பாத்திரம் சம்பந்தப்பட்ட காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ் போன்ற விஷயங்களே திரையில் தெரிகின்றன. கதையின் மையச்சரடு என்ன என்பதே அதன்பின் தான் தெரிய வருகிறது.
போலவே, திருப்பங்கள் என்ற பெயரில் சில காட்சிகள் ‘நீளமாக’ வார்க்கப்பட்டிருக்கின்றன. அவை இப்படத்தின் பலவீனங்கள்.
எடுத்துக்கொண்ட கதைக்கருவை மட்டுமே ரசிகர்களிடத்தில் பூதாகரப்படுத்தும் வகையில் திரைக்கதை ட்ரீட்மெண்டை ஒரு திசை நோக்கி நகர்த்தி, குறிப்பிட்ட வண்ணங்களை மட்டுமே திரையில் காட்டுவது சமீபத்திய ட்ரெண்ட்.
அதற்கேற்ற அத்தனை அம்சங்களும் ‘அக்யூஸ்ட்’வில் இருக்கின்றன. அவற்றை நுணுக்கமாகக் கையாள்வதை விட்டுவிட்டு, தேவையில்லாமல் சந்துபொந்துகளில் பயணித்துவிட்டு மெயின்ரோட்டுக்கு வரும் ரேஸ் கார் போன்று அமைந்திருக்கிறது இதன் திரைக்கதை.
அதனைப் பொறுத்துக் கொண்டால், ‘ஒரு தடவை பார்க்கலாம்’ என்கிற வகையிலான திரையனுபவத்தை ‘அக்யூஸ்ட்’ தரும்.
ஆக்ஷன் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறது மருதநாயகத்தின் ஒளிப்பதிவு. ஆனந்த் மணியின் கலை வடிவமைப்பு முதல் பாதியில் ‘சினிமாத்தனத்தை’ வெளிப்படுத்துகிறது; பின்பாதியில் கதைக்கேற்ற யதார்த்தத்தைக் கடத்தியிருக்கிறது.
பிரவீன் கே.எல் இப்படத்தின் படத்தொகுப்பாளர் என்கின்றனர். ஆனால், சில இடங்களில் வரும் ‘ரேம்ப்’ஷாட்கள் கண்களை உறுத்துகின்றன. ’பிரவீன் இதில் பணியாற்றியிருக்கிறாரா’ என்ற கேள்வியை எழுப்புகின்றன.
அதேநேரத்தில், படத்தில் தேவையற்ற பல காட்சிகள் வெட்டப்பட்டிருப்பதும் மிகத்தெளிவாகத் திரையில் தெரிகிறது.
ஸ்டண்ட் சில்வாவின் பங்களிப்பில் பேருந்து விபத்துக்குள்ளாகிற சண்டைக்காட்சி ‘ஆவ்சம்’ ரகம்.
நரேன் பாலகுமார் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையில் ஆங்காங்கே நம்மை ஈர்க்கிறார்.
நடிப்பைப் பொறுத்தவரை, ‘ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சிருக்காருங்க’ என்று ரசிகர்களே சொல்லும் வகையில் நான்கைந்து காட்சிகளில் தோன்றியிருக்கிறார் உதயா. தொடக்கத்தில் வரும் நான்கைந்து காட்சிகளில் அவரது பாத்திரத்தை ஏற்றுக்கொண்டால், அதன்பின் வரும் பல காட்சிகளை எளிதாக ரசிக்கலாம். அதுவே அவரது நடிப்புக்கான பாராட்டு.
அஜ்மல் அமீர் இப்படத்தில் நேர்மையான இளம் கான்ஸ்டபிளாக வருகிறார். நேரில் பார்க்கிற ஒரு மனிதர் போன்று அப்பாத்திரத்தைத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதில் நாயகியாக வருகிற ஜான்விகா முன்பாதியில் கவர்ச்சியாகத் தோன்றியிருக்கிறார். பின்பாதியில் சோகமான காட்சிகளை எளிதாகக் கையாண்டிருக்கிறார்.
யோகிபாபு இதில் மிகச்சில நிமிடங்களே வருகிறார். ஆனால், அந்த இடங்களில் சிரிக்க வைக்கிறார். கூடவே, காட்சியின் தன்மையை மீறாமல் நடித்திருக்கிறார்.
இயக்குனர் பிரபு ஸ்ரீனிவாஸ் உட்படச் சுமார் ஒரு டஜனுக்கும் மேற்பட்டோர் இதில் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அவர்களது இருப்பு ‘ஓகே’ ரகத்தில் இருக்கிறது.
இந்தப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் பிரபு ஸ்ரீனிவாஸை ஒரு நடிகராகச் சில தமிழ் படங்களில் பார்த்திருக்கிறோம். கன்னடத்தில் இவர் சில படங்களை இயக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
‘அக்யூஸ்ட்’ நிறைவுறுகிறபோது, படத்தில் ‘கமர்ஷியல்’ அம்சங்களுக்காகச் சேர்க்கப்பட்ட விஷயங்களை நீக்கியிருக்கலாம் என்ற எண்ணம் விஸ்வரூபமெடுக்கிறது.
கூடவே அரசியல் பிரமுகர் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய பில்டப்புக்கு ஏற்பக் கூடுதலாகச் சில கனமான விஷயங்களை, திருப்பங்களைத் திரைக்கதையில் சேர்த்திருக்கலாம் என்றெண்ண வைக்கிறது.
அனைத்தையும் தாண்டி, அடுத்த நாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய ஒரு கைதியைக் கண்ணும் கருத்துமாக இன்னொரு சிறைக்கு காவல் துறையினரால் அழைத்துச் செல்ல முடிந்ததா என்பதில் மட்டும் தீவிரக் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு ‘கைதி’ போன்றோ, கன்னடப்படமான ‘மேக்ஸ்’ போன்றோ ‘அக்யூஸ்ட்’வும் சிறப்பானதொரு இடத்தைப் பிடித்திருக்கும்.. தற்போது ‘ஓகே’ எனும் நிலையை எட்டியிருக்கிறது..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்