கிஷன்தாஸ், டாக்டர் ராஜசேகர் – ஜீவிதா நட்சத்திர ஜோடியின் மகளான ஷிவாத்மிகா, வி.டி.வி கணேஷ் ஆகியோர் நடிப்பில்,
சாரங் தியாகு, கிஷன் தாஸ், பிபின் தாஸ், கௌஷிக் சம்பத், ஆஷா, மீரா ஐயப்பன் ஆகியோரின் திரைக்கதையில், சாரங் தியாகு இயக்கி இருக்கும் படம் . மினி ஸ்டுடியோஸ் சார்பில் வினோத்குமார் தயாரித்து இருக்கிறார்
படத்துக்குப் பெயர்க் காரணம் தெரியாதவர்களுக்கு (வெளிய சொல்லிக்காதீங்க; பூமர்னு அங்கிள், ஆன்ட்டின்னு சொல்லிடுவாங்க) மட்டும் ஒரு விளக்கம்.
சிம்பு, த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வந்த ஒரு பாடலின் முதல் வார்த்தைதான் ‘ஆரோமலே’. இது ஒரு மலையாள வார்த்தை. இதற்கு ‘என் அன்புக்குரிய….’ என்று பொருள் .
அதுவே ஹைதராபாத்காரர்கள் என்றால் ‘ஆரோமலே எங்க ஊரில் இருக்கிற ஓர் கலைநயம் மிக்க காபி கஃபே’ என்பார்கள்.
பள்ளிக் காலத்தில் ஒரு காதல் தோல்வி, கல்லூரிக் காலத்தில் ஒரு காதல் தோல்வி என்று இரண்டு காதல் தோல்விகளைச் சந்தித்த பின்னும் காதலிக்காமல் கல்யாணம் செய்து கொள்வது என்ன நியாயம் என்று எண்ணும் ஒரு பையன்( கிஷன் தாஸ்),
ஒரு நிலையில் வீட்டில் சண்டை வந்து அப்பா (பாண்டியன்) மேல் அவன் ரொம்பக் கோபப்பட, அவனைக் கண்டிக்கும் அம்மா (துளசி), ‘ நீ அப்பா சொல்ற வேலைக்குப் போ’ என்று சொல்ல,
அம்மா சொன்னதற்காக வேலைக்குப் போனால், அது ஒரு மேட்ரிமோனியல் நிறுவனம்! காதலிக்காமல் கல்யாணம் செய்வதே தவறு என்று நினைத்தவனுக்கு அப்படி ஒரு வேலை.
அங்கே அனுபவம் மிக்க சீனியர் அதிகாரியாக இருக்கும் இளம்பெண் மீது (சிவாத்மிகா) அவனுக்கு ஈர்ப்பு வருகிறது. அவள் அவனை துச்சமாக எண்ணுகிறாள். சீனியர் என்ற முறையில் கடுமையாக நடந்து கொள்கிறாள்.
தவிர அங்கே மனங்களின் இணைப்பைப் பற்றிக் கவலைப்படாமல்…. வேலை, தோற்றம், வசதி இவைகளை வைத்தே கல்யாண ஜோடி முடிவு செய்வதோடு,
சில சமயம் ஏகப்பட்ட தகிடு தத்தங்கள் செய்து தங்களிடம் வரும் ஒவ்வொருவரின் தலையிலும் யாரையாவது எப்படியாவது கட்டி விடும் தீவிரமும் கண்டு கொந்தளிக்கிறான் அவன்.
மகளை அடிமையாக வளர்க்கும் ஒரு பணக்காரர் தன் மகளின் காதலுக்கு எதிராக, ஒரே வாரத்தில் தகுதியான மாப்பிள்ளை பார்க்கும் வாய்ப்பை இந்த மேட்ரிமோனியலுக்குக் கொடுக்க, பெண்ணின் காதல் பற்றித் தெரிந்தும் அவள் அதை ஒரு கஸ்டமர் சர்வீசாக மட்டும் பார்க்க,
மாறாக ஹீரோ அந்தப் பெண்ணை காதலனுடன் சேர்த்து வைக்க முயல, சீனியர் என்ற அதிகாரத்தில் அவள் அவனைத் திட்ட, அவனும் பொங்கி எழுகிறான்.
ஒரு விபத்தால் ஆண்மை இழந்த ஐம்பத்தைந்து வயது நபர் ஒருவர் (வி.டி.வி.கணேஷ்) அங்கே மணமகள் தேடி ரொம்பக் காலமாக வந்துகொண்டிருக்க, அவருக்கு ஏற்ற மணமகள் பார்க்கும் விசயத்தில் அவளது சீனியாரிட்டியும் திறமையும் எடுபடவில்லை.
அதைக் கையில் எடுக்கும் அவன், “முடிஞ்சா உன் திறமையை எல்லாம் காட்டி இவருக்கு ஒரு மேட்ச் பண்ணிக் கொடு, தொழில் திறமை இல்லாம மனிதாபிமானத்தோடு எந்தப் பொய்யும் சொல்லாம நானும் அவருக்கு ஏற்ற மணமகளைத் தேடுகிறேன் என்று சவால் விட.
ஜெயித்தது யார்? அதன் பின்னர் அவனுக்கும் அவளுக்கும் இடையில் என்ன நடந்தது? அதில் யாருக்காவது பலன் இருந்ததா? காதலையே வெறுக்கும் அவள் காதலித்தாளா?
காதல் கல்யாணம்தான் லட்சியம் என்று வாழும் அவனுக்குக் காதல் கனிந்ததா? என்ன நடந்தது? விளைவு என்ன? என்பதே இந்த ஆரோமலே.
முதல் காதல் சில்லி நகைச்சுவையில் முடிய, அடுத்த காதல் கிரிக்கெட் மூலமான விபத்தில் அடி வாங்கிவிட , அதுவரை காட்சிகளே காமெடியாக இருப்பது பிளஸ்.
கதை சீரியஸ் ஆகும்போது நாயகனின் நண்பனாக வருபவர் அடிக்கும் காமெடி பஞ்ச்கள் சிரிக்க வைக்கின்றன.
காதலித்துதான் கல்யாணம் பண்ண வேண்டும் என்று என்னும் நபருக்கு மேட்ரிமோனியல் வேலை என்பதும் நல்ல திருப்பம்தான்.
அங்கேயும் அவன் காதல் முகம் காட்ட, அவ்வளவு இறுக்கமான, கடுமையான கதாநாயகியும் அதற்கான காரணமும் அவர்களுக்கு பின்னர் நிகழும் சம்பவங்களும் அடிப்படையில் சுவையானவை.
55 வயது ஆகி கல்யாணத்துக்கு ஏங்கும் நிலையிலும் “உன் அம்மாவை வெளியே எங்காவது தங்க வைக்கலாம்” என்று சொல்லும் பெண்ணைப் புறக்கணிக்கும் மகன் கேரக்டர்,
சென்ற தலைமுறைகள் பெற்றோர் மேல் பாசமாக இருந்ததைச் சொல்வதோடு இன்றைய தலைமுறைக்கு சொல்லும் படிப்பினையாகவும் இருக்கிறது.
காதல் என்பது நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும். ஒருவர் வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால் அவரின் முன் வரலாற்றை ஆராய முற்படாதே. அவரிடமே கேட்காதே. அது அவர்களுக்கு அவமானமாக மாறும்.
அது உன் மேல் வெறுப்பாக ஆகும். சொல்ல வேண்டும் என்றால் சமயம் வரும்போது அவர்களே சொல்வார்கள்.
இல்லாவிட்டால் உனக்கும் அது தேவை இல்லை என்ற படத்தின் அடிப்படை நோக்கம் அபாரமானது.
திரைக்கதையில் இயக்குநர் சாரங் தியாகுவோடு, நாயகன் கிஷன் தாஸ், பிபின் தாஸ், கௌஷிக் சம்பத், ஆஷா மீரா ஐயப்பன் ஆகியோர் பங்கேடுத்திருப்பத்தின் சிறப்பு இது. மேட்ரிமோனியல் அலுவலகம் சம்மந்தப்பட்ட காட்சிகள் அபாரம்.
இயக்குநர் சாரங் தியாகுவின் படமாக்கல், கவுதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு இரண்டும் மிகச் சிறப்பு.
ஆனால், ஒரு நிலையில் இந்தப் படம் 1980 முதல் 2015 வரை மென்று துப்பப்பட்ட டிப்பிக்கல், டெம்ப்ளேட் காதல் படங்களின் பாணியில் சிக்கிக் கொண்டது.
சின்ன விசயத்தில் காதலர் சண்டை வருவதையும், பின்னர் அவர்கள் பிரிந்து விடுவார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி,
அதில் இருந்து ஒரு மாற்றம் அப்பால் ஒரு ஏற்றம் என்பதை எல்லாம் வசந்த மாளிகை காலத்தில் இருந்தே பாத்தாச்சே.
படம் முழுக்க இருக்கும் ஒரு காஸ்மாபாலிட்டன் தன்மை வெகுஜன ரசிகர்களுக்கு அன்னியமாகப் போலாம்.
இந்தப் படம் மக்கள் வரவேற்பைப் பெறாவிட்டால் அதற்கு இதுவே காரணமாக இருக்கும். மற்றபடி இந்தப் படம் சிறப்பானது.
ஆராமலே…. வேண்டிய அளவுக்குச் சிறப்பாகச் சொல்லாமலே!
– சு. செந்தில் குமரன்