“அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்”!

திரை தெறிப்பு : 106

***

ஆனந்தம், உற்சாகம், பரவசம் என்று பல வார்த்தைகளில் சொன்னாலும் , அதன் அர்த்தத்தை ‘ஜாலி’ என்ற ஒரு சொல்லில் அடக்கி விட முடியும்.

அப்படி உணர்வு ததும்பும் ‘ஜாலி’யான திரைப்படப் பாடல்களில் இதுவும் ஒன்று.

1962-ம் ஆண்டு வெளிவந்த ‘நிச்சய தாம்பூலம்’ படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

பேச்சு மொழியில் அமைந்திருக்கும் இந்தப் பாடலைக் கேளுங்கள்,

“ஆண்டவன் படைச்சான். என் கிட்ட கொடுத்தான்.
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்.
என்னை அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்…”

திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கௌபாய் ஸ்டைலில் ஒரு தொப்பி அணிந்த படி, நண்பர்களோடு ஜாலியாக காரில் போகும் போது இந்தப் பாடலைப் பாடுகிற மாதிரி காட்சி அமைந்திருக்கும்.

மிகவும் துள்ளலான இசை வடிவில் உருவான இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி எனும் இசை இரட்டையர்.

“உலகம் எந்தன் கைகளிலே.
உருளும் பணமும் பைகளிலே.
சோதிச்சுப் பாத்தா நானே ராஜா.
வாலிபப் பருவம் கிடைப்பது லேசா.
உல்லாசம் சல்லாபம் எல்லாமும் இங்கேடா குண்டு…”

தத்துவார்த்த ரீதியில் ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்ற அறிஞர்கள் நீண்ட பிரசங்கமாகச் சொன்னதைத் தான் மிகச் சிக்கனமாக இந்தப் பாடலில் சொல்லி இருக்கிறார் கவியரசர்.

“நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன்.
ஆஹா – நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால் அவன் மூடன்.
போடா வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன்.
அவன் இவனே – இவன் அவனே.
அட இன்றும் இல்லை. நாளை இல்லை.
இரவில்லை. பகலில்லை.
இளமையும் முதுமையும் முடிவும் இல்லை.”

காரில் உல்லாசமாக ஒரு டூர் போகிற உற்சாகத்தோடு சிவாஜியும் அவரது குழுவினரும் இந்தப் பாடலைப் பாடும்போது இடையிடையே ‘கோரஸாக’ குரல்களும் இடம்பெற்றிருக்கும்.

வழக்கமாகப் படங்களில் வில்லத்தனமாகச் சிரித்தும், முறைத்தும் அனுபவப் பட்ட எம்.என். நம்பியார் இந்தப் பாடல் காட்சியில் காரை ஓட்டியபடி அவரும் பாடுவதாகக் காட்சி அமைந்திருப்பதைப் பார்க்க- நமக்கும் ஜாலியாக இருக்கும்.

“பணங்களைச் சேர்த்துப் பதுக்கி வைத்தால் அது மடமை.
ஆஹா…
பகவான் படைத்த பணமெல்லாம் பொது உடமை.
கையில் கிடைப்பதை வீசி ரசிப்பது தான் என் கடமை.
அந்தப் பெருமை எந்தன் உரிமை.
நல்ல வெள்ளித் துட்டு அள்ளிக் கிட்டு துள்ளித் துள்ளி
ஆட விட்டு சிரிப்பதும், மகிழ்வதும் தனி மகிமை… ”

இதே ‘நிச்சய தாம்பூலம்’ படத்தில், நடிகர் திலகம் + டி.எம்.எஸ். கூட்டணியில் முழுக்க சோகமயமாக “படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே” என்கின்ற பிரபலமான பாடல் இடம் பெற்றாலும், மேலே குறிப்பிட்ட பாடலை டி.எம்.எஸ் பாடி இருக்கும் விதமும், அதற்கு குஷியாக நடிகர் திலகம் உடலில் காட்டியிருக்கும் நவரசங்களும் ஒரு காட்சி மொழி அற்புதம் என்றே சொல்ல வேண்டும்.

– மணா

Comments (0)
Add Comment