சில திரைப்படங்களின் பாடல்கள் நம் காதில் விழுந்திருக்கும். அவற்றை ரசித்திருப்போம். ஆனால், திரும்பத் திரும்பக் கேட்டு இன்பமுறுகிற தருணங்களைத் தவற விட்டிருப்போம்.
அந்தத் திரைப்படத்தின் வெற்றியோ, அதில் நடித்த கலைஞர்களோ, அதன் உள்ளடக்கமோ அல்லது வேறு ஏதோ ஒரு அம்சம் நம் மனதுக்கு அருகாமையில் நில்லாமல் போயிருக்கும்.
அப்படித் தவறவிட்ட பாடல்களைச் சில காலம் கழித்து தொடர்ச்சியாகக் கேட்க நேர்கையில் மனம் வருத்தத்தில் அழும். இது எனது தனிப்பட்ட எண்ணம்.
அப்படி எண்ண வைத்த ஒரு திரைப்படம் ‘பார்வை ஒன்றே போதுமே’. அதில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட் ரகம். அந்த ஒரு காரணத்தாலேயே, அப்படம் வெளியான காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் கவனம் கிடைத்தது.
அப்படத்திற்கு இசையமைத்தவர் பரணி. இவர் இசையமைப்பாளராக அறிமுகமான படம் ‘பெரியண்ணா’. ஆக்ஷன் ட்ராமா வகைமையில் அமைந்த அந்தப் படத்திலும் பாடல்கள் அனைத்தும் ‘ஹிட்’ அடித்தன.
பிறகு சார்லி சாப்ளின், சுந்தரா டிராவல்ஸ், ஸ்டைல், முத்தம், சிந்தாமல் சிதறாமல் உட்படச் சில திரைப்படங்களுக்கு இசையமைத்தார். இதுபோக லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன் உட்படத் திரையில் வெளியாகாத நான்கு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
இளையராஜாவின் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தோன்றுகிற பரணி, தனது இசையிலும் அவரது படைப்பாக்கத்தின் பாதிப்பைக் கொண்டிருந்தவர். அதனால், இவரது பாடல்கள் அனைத்திலும் எளிமையும் இனிமையும் நிறைந்திருப்பதைக் காண முடியும்.
‘பா.ஒ.போ’ வெற்றி!
‘பார்வை ஒன்றே போதுமே’ என்ற டைட்டிலே இது ஒரு காதல் படம் என்பதை உணர்த்திவிடும்.
அதற்கேற்ப இதில் குணால், மோனல் மற்றும் கரண் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருந்தனர். முரளி கிருஷ்ணா இதனை இயக்கினார்.
‘துளித் துளியாய் கொட்டும் மழைத் துளியாய்’, ‘திரும்பத் திரும்பப் பார்த்து பார்த்து’, ‘ஏ அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா’, ‘திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்துவிடு’ என்று நான்கு மெல்லிசைப் பாடல்களை இதில் தந்திருந்தார் பரணி.
இப்பாடல் வரிகளில் எப்படி அடுக்குத்தொடர் இடம்பெற்றனவோ, அதே போலத் திரும்பத் திரும்பக் கேட்கும் வகையில் இவை அமைந்தன. மேற்சொன்னவற்றில் முதல் மூன்றையும் எழுதியவர் கவிஞர் பா.விஜய்.
‘திருடிய இதயத்தை’ உள்ளிட்ட மீதமுள்ள நான்கு பாடல்களை எழுதியவர் பரணி.
துள்ளல் ரகத்தில் அமைந்த ‘நீ பார்த்துட்டு போனாலும்’ பாடல் புகழ்பெற்ற பல பாடல்களின் ‘தாளகதியை’ நினைவூட்டியது.
ஆண் பாவம் படத்தில் வரும் ‘காதல் கசக்குதய்யா’ பாடலைப் போலவே, இதில் ‘காதல் பண்ணாதீங்க’ என்ற பாடல் இடம்பெற்றிருக்கும்.
இது போக ‘தும்தக்கு தும்தக்கு’ எனும் கொண்டாட்டத்திற்கான சிறு பாடலும் இப்படத்தில் உண்டு.
‘பார்வை ஒன்றே போதுமே’ படம் குறிப்பிடத்தக்க அளவில் கவனிப்பைப் பெற்றதில், வெற்றியை ஈட்டியதில் பரணியின் இசைக்குப் பெரும்பங்கு உண்டு. என்றும் இனிக்கும் பாடல்களைக் கொண்டிருந்தது இப்படம்.
இதன் காரணமாக குணால், மோனல் நடிப்பில், பரணி இசையில், ‘பேசாத கண்ணும் பேசுமே’ எனும் படத்தைத் தந்தார் இயக்குநர் முரளி கிருஷ்ணா.
பிறகு குணாலை நாயகனாகக் கொண்டு ‘திருடிய இதயத்தை’ படத்தைத் தந்தார்.
அவ்விரு படங்களிலும் இதே போன்று பாடல்களைத் தந்தார் பரணி. அவை குறிப்பிடத்தக்க அளவில் கவனிப்பைப் பெற்றாலும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
வெற்றிகள் பலவிதம்!
‘பார்வை ஒன்றே போதுமே’ படம் வெளியான காலகட்டத்தில் ஒரு வெற்றிப்படைப்பாகவே அமைந்தது.
யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட இப்படம் இரு வேறு சேனல்களில் சுமார் 16 லட்சம் முறை பார்க்கப்பட்டிருக்கிறது.
போலவே, இப்படத்தின் அனைத்து பாடல்களும் அடங்கிய தொகுப்பு சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை ரசிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு திரைப்படம் காலம் கடந்தும் ரசிக்கப்படும் என்பதற்கான சாட்சியாக விளங்குகிறது ‘பார்வை ஒன்றே போதுமே’.
இது போன்ற வெற்றிகளைச் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் திரும்பவும் பெறாமல் போவது, வேறு சில காரணிகள் காரணமாகத் திரையுலகை விட்டு விலகுவது அல்லது அகல்வது உண்மையில் வருத்தம் தரும் விஷயம்.
அந்த வகையில் பல ரசிகர்களிடத்தில் நினைவலைகளை எழச் செய்கிறது இப்படம்.
– மாபா.