சர்வதேச திரைப்பட விழா: விருது வென்ற படைப்புகள்!

‘இந்தோ சினி அப்ரிசியேஷன் அறக்கட்டளை’ சார்பில் 21-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெற்றது.

கடந்த 14 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடந்த விழாவில் 57 நாடுகளின் 126 படங்கள் திரையிடப்பட்டன.

போட்டி பிரிவில் அநீதி, அயோத்தி, மாமன்னன், போர் தொழில், ராவணகோட்டம், செம்பி, விடுதலை உள்ளிட்ட 12 தமிழ் படங்கள் பங்கேற்றன.

நிறைவு விழாவும், விருது வழங்கும் நிகழ்ச்சியும் ராயப்பேட்டை சத்யம் தியேட்டரில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

சிறந்த தமிழ்ப் படமாக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில், ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் வெளியான ‘அயோத்தி’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.

படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்தி மற்றும் தயாரிப்பாளருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாவது சிறந்த தமிழ்த் திரைப்படமாக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், கே.வெள்ளதுரை தயாரிப்பில் வெளியான ‘உடன்பால்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.

இதன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா 50,000 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

விடுதலை படத்தின் முதல் பாகத்துக்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது அளிக்கப்பட்டது.

‘மாமன்னன்’ படத்தில் நடித்த ‘வைகைப்புயல்’ வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது.

‘அயோத்தி’ படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானிக்கு சிறந்த நடிகை விருது அளிக்கப்பட்டது.

விழாவில் வடிவேலு உருக்ககமாகப் பேசி பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்தார். “இந்த விருது எனக்கு கிடைக்க காரணம், மாமன்னன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ்தான்.

சமூகத்தில் நடைபெறும் தவறுகளை தன்னுடைய படங்கள் மூலம், சரிசெய்ய நினைக்கும் சிந்தனையாளர் அவர்.

இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்புகளையும் விருதுகளையும் நான் எதிர்பார்க்கவில்லை.

மாமன்னன் படத்துக்கு பிறகு எனக்கு சொல்லப்பட்ட பல கதைகள் சோகக் கதைகளாகவே இருந்தன.

அவற்றை வேண்டாம் எனச் சொல்லி விட்டேன். இன்னும் பல ஆண்டுகள் நகைச்சுவை வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை” என்று குறிப்பிட்டார் வடிவேலு.

இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, தமிழகத்தில்தான் சமுதாயக் கருத்துக்களை கதைக்களமாகக் கொண்டு வரும் படங்களுக்கு வரவேற்பும், பொருளாதார வெற்றிகளும் கிடைக்கின்றன.

என்னுடைய படங்களில் தவறுகள் இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல் மக்கள் ரசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பெருமிதம் அடைந்தார்.

-பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment