ஒவ்வொரு தலைமுறைக்கும் ஏற்றவாறு திரைப்படங்கள் வருவதுண்டு. அதற்கேற்றவாறு இயக்குநர்கள், நாயகர்கள், நாயகிகள் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று பலரும் கொண்டாடப்படுவதுண்டு.
குறிப்பாக, அந்த மாற்றத்தைச் சாத்தியப்படுத்தியவர்களே ‘ட்ரெண்ட்செட்டர்’களாக கொண்டாடப்படுவர்.
அந்த வகையில், 2000ஆவது ஆண்டுக்குப் பிறகு தனியலையைத் திரையுலகில் தோற்றுவித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன்.
கௌதம் என்ற பெயரில் ‘மின்னலே’வைத் தந்தபோதே, ‘யார் இவர்’ என்று ரசிகர்கள் தேடத் தொடங்கினர். ‘வசீகரா’ எனும் ஒற்றைப் பாடல் ‘இவர் திரையில் காதலை வேறுமாதிரியாகக் காட்டுகிறாரே’ என்று எண்ண வைத்தது.
இரண்டாவது படத்தில் யாரை இயக்கப் போகிறார் என்று ரசிகர் கூட்டம் எதிர்நோக்கியது. அஜித், விக்ரம், விஜய் என்று பலரது பெயர்களுக்கு மத்தியில் சூர்யா உடன் இணைந்தார்.
‘காக்க.. காக்க..’ என்ற டைட்டில் வடிவமைப்பும் ட்ரெய்லரும் இளம் தலைமுறையினரைச் சுண்டியிழுத்தது.
‘வாய்ஸ் ஓவர்’ உடன் பிணைந்திருந்த கதை சொல்லல் ‘ஆஹா’ என்று ரசிகர்களைச் சொல்ல வைத்தது.
மின்னலே, அதன் இந்தி ரீமேக், காக்க காக்க, அதன் தெலுங்கு ரீமேக் என நான்கு படங்களை இயக்கிய அனுபவத்தைப் பெற்றிருந்த கௌதமுக்கு நடிகர் கமலைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது.
அந்த காலகட்டத்தில் ‘தசாவதாரம்’ கதையைக் கையில் வைத்துக்கொண்டு, ஒரு ஸ்டைலிஷான இயக்குநரைத் தேடி வந்தார் கமல்ஹாசன்.
அப்போது அவரைச் சந்தித்துப் பேசிய கௌதம், தன்னால் அவர் சொல்கிற கதையை இயக்க முடியாது என்று உணர்ந்திருக்கிறார். கமலுக்கும் அவருக்குமான அடுத்தடுத்த சந்திப்புகள் அது முழுமையாகத் தெரிய வந்திருக்கிறது.
அதன்பின்னரே இன்னொரு கதையில் அவரை நாயகனாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் கௌதம். அதுதான் ‘வேட்டையாடு விளையாடு’.
முதலில் ‘ரோஜா கம்பைன்ஸ்’ தயாரிப்பில் இப்படம் வளர்ந்திருக்கிறது. அந்த நிறுவனத்திற்கு ஏற்கனவே கமல் கால்ஷீட் தந்திருக்கிறார்.
படிப்படியாகப் படம் வளர வளர, அந்த நிறுவனம் பொருளாதார ரீதியாகப் பின்னடைவைச் சந்திக்கிற நிலை உருவாகியுள்ளது. பிறகு, அப்படம் பலரது பார்வைக்குச் சென்றிருக்கிறது.
தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அதனைக் கையிலெடுத்ததும் மீண்டும் அப்படம் உயிர் பெற்றிருக்கிறது.
வித்தியாசமான ‘கதை சொல்லல்’!
கொலை, அது தொடர்பான விசாரணையை மையப்படுத்தித் தமிழில் சில படங்கள் வந்திருக்கின்றன.
ஆனால், அவை யாவும் முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாக அமையவில்லை. அதனால், அவற்றுக்கான பட்ஜெட் குறைவாகவே அமைந்தது; அது திரையிலும் தெரிந்தது.
‘வேட்டையாடு விளையாடு’ மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருந்தது அதன் உள்ளடக்கத்தில் தெரிந்தது. பெரிய செட்கள் இல்லாதபோதும் அதிகமான காட்சிகள், வெளிநாட்டு லொகேஷன் என்று படம் வேறுவிதமான திரையனுபவத்தைத் தந்தது.
ரவிவர்மனின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் படத்தொகுப்பு, ராஜீவனின் கலை வடிவமைப்பு என்று தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு சிறப்பானதாக அமைந்தது.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி வித்தியாசமாக ரசிகர்களின் கண்களுக்குத் தென்பட்டனர்.
அனைத்துக்கும் மேலாக, ஒரு முன்னணி நட்சத்திரம் ஆங்கிலப் பட நாயகன் போன்று ‘க்ரைம் இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’ கதையில் நடித்தது புதுமையாகத் தெரிந்தது.
தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரத்திற்கு அருகேயுள்ள ஒரு பகுதியில் தொடங்குகிற கதை மெல்லச் சென்னை நோக்கி நகர்ந்து, பிறகு அமெரிக்கா, கோவா என்று பல இடங்களுக்குப் பயணித்தது.
இவை போதாதென்று ‘இவங்க தான் கமலுக்கு வில்லன்களா’ என்று கேட்கும் வகையிலேயே படத்தில் மறைந்த டேனியல் பாலாஜி மற்றும் சலீம் பெய்க்கின் தோற்றம் இருந்தது. ஆனால், முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களால் இருவரது இருப்பையும் சீரணிக்க முடியவில்லை.
கமல்ஹாசனின் குரலில் ‘சின்னப்பசங்க’ என்று அவர்களால் சொல்லவே முடியவில்லை. அந்த அளவுக்கு இருவரது நடிப்பும் மிரட்டலாக இருந்தது.
இதுபோக கமல் – ஜோதிகா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள், கமல் – கமலினி இடம்பெற்ற ‘பார்த்த முதல் நாளே’ பாடல், அதிரடி சண்டைக் காட்சிகள் என்று ‘இப்படித்தான் இந்தப் படம் இருக்கும்’ என்று ரசிகர்கள் மனதில் இருந்த திரைப்படத்தில் இருந்து வெகுவாக விலகி நின்றது ‘வேட்டையாடு விளையாடு’. அதனாலேயே அப்படம் வெற்றி பெற்றது.
‘இந்தப் படம் வருமா வராதா’ என்ற கேள்வியோடு வந்தாலும், அதன் உள்ளடக்கம் மிகச்சிறப்பாக இருந்ததால் ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதேநேரத்தில் அதில் இருந்த வன்முறை சில ரசிகர்களை அலற வைத்ததும் உண்மை.
‘த்ரில்லர்’ படங்களில் யார் குற்றவாளி எனத் தெரிவதற்குள் பாதிப்படம் முடிவடைந்துவிடும். அதன்பிறகு, அவர்களை நாயகன் தேடுவதில் மீதிப்படம் அமைந்திருக்கும். ‘வேட்டையாடு விளையாடு’வும் அப்படித்தான்.
ஆனால், திரைக்கதையில் அவற்றைச் சொன்னவிதம் அதுவரை தமிழ் சினிமா பார்க்காததாக இருந்ததே அப்படத்தின் வெற்றிக்குக் காரணம்.
அதன்பிறகு கௌதம், கமல்ஹாசன் கூட்டணி அமையவில்லை. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை அமைத்து வருவதாகவும், அதனைக் கமலிடம் சொல்லப் போவதாகவும் சில மாதங்களுக்கு முன்னர் சொல்லியிருந்தார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். அது கைகூடியதா எனத் தெரியவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, இப்படம் ‘ரீரிலீஸ்’ ஆனது. அப்போதும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சிறப்பான ஸ்கிரிப்ட், அதனைச் சரியாகத் திரையில் காண்பிக்கிற தொழில்நுட்ப வித்தைகள், அதுவரை பார்த்து வந்த சினிமாக்களில் இருந்து வேறுபட்டு நிற்கிற காட்சியாக்கம் என்று ஒவ்வொரு விஷயமும் சிறப்பாக அமைந்தால் மட்டுமே அது நிகழும். ‘எவர்க்ரீன் கிளாசிக்’ ஆக அப்படம் மாறும்.
அப்படியொரு படமாகத் திகழ்கிற ‘வேட்டையாடு விளையாடு’ வெளியாகி 19 ஆண்டுகள் ஆகின்றன.
– மாபா