போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் கோடம்பாக்கம் அதிர்ந்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்திய சில நடிகர், நடிகைகள் போலீஸ் வளையத்தில் சிக்கியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து பாடகியும் நடிகையுமான சுசித்ரா கூறியதாவது:
“ஸ்ரீகாந்த்துக்கு இப்போது திடீர் ரசிகர்கள் முளைத்திருக்கிறார்கள். அவர் இத்தனை வருடங்களாக திரைத்துறையில் வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தபோது இவர்கள் எங்கே போயிருந்தார்கள்?
குழந்தையைக் கவனிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த் அழுகிறார். ஆனால், கொகைன் அடிக்கும்போது மகன் நினைப்பு வரவில்லையா?
தமிழ்த் திரையுலகில் பலர் இந்த போதைப் பொருளை பயன்படுத்துகிறார்கள்.
திரைத்துறையைப் பொறுத்தவரை போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் எவரும் ரத்தப் பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.
மும்பை போன்ற இடங்களில் இருந்து கவுரவ வேடங்கள், ஐட்டம் பாடல்களுக்கு நடிக்க வரும் நடிகர்கள் போதைப் பொருள் கலாச்சாரத்தை தமிழ் சினிமாவுக்குள் புகுத்திவிட்டனர்.
மும்பையில் காலையிலேயே பல் விளக்குவது போல இதைப் பயன்படுத்துவோம் என்று சொல்லி, அவர்கள் இங்கேயும் போதைக் கலாச்சாரத்தை நுழைத்து விட்டார்கள்.
நான் ஊடகத்துறையில் பணியாற்றியபோது இதுகுறித்து செய்திகள் வரும். ஆனால் இதையெல்லாம் வெளியிட முடியாத சூழல் இருக்கும்.
இப்போதெல்லாம் யூடியூப், சமூக வலைதளங்கள் இருப்பதால் ஸ்ரீகாந்த் செய்திகள் வேகமாகப் பரவுகின்றன.
திரைத்துறையில் இருக்கும் அனைவரையும் இதுபோல் நாம் குற்றஞ்சாட்டிவிட முடியுமா என்று கேட்டால் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தான் கூற முடியும்.
எனக்கும் கொக்கைன் பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் வந்தது. ஆனால் நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்.
சென்னையில் உள்ள அனைத்து மதுபான விடுதிகள், பப்களில் இது சாதாரணமாக நடக்கிறது. சென்னையில் இருக்கும் மதுபான விடுதிகளில் கழிவறைக்குச் சென்று பலரும் போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.
அந்தக் கால நடிகைகள் குடிப்பழக்கத்தில் இருந்த தங்களது கணவர்களை மீட்டெடுத்ததைப் பார்த்திருப்போம்.
ஆனால், இந்தக் காலத்தில் நடிகர்களுக்கு மனைவிகளே ஊற்றிக் கொடுப்பதும் பார்ட்டிகளில் கலந்து கொள்வதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. அவர்களின் பெயர்களை எல்லாம் என்னால் சொல்ல முடியாது” என்று சுசித்ரா பகீர் கிளப்பியுள்ளார்.
– பாப்பாங்குளம் பாரதி.