சமீபத்தில் வெளியான ‘மச்சாண்ட மாலஹா’ திரைப்படத்தில் பிரதானமாக விளங்கும் பெண் பாத்திரங்கள் இழிவாகச் சித்தரிக்கப்பட்டிருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ஆணாதிக்கப் பார்வையோடு அந்த படம் உருவாக்கப்பட்டதாக எதிர்ப்பு கிளம்பியது.
கிட்டத்தட்ட அதே போன்றதொரு பார்வை பரவக் காரணமாகியிருக்கிறது ‘அபயந்தர குட்டவாளி’.
சேதுநாத் பத்மகுமார் எழுத்தாக்கம் செய்து இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆசிஃப் அலி, துளசி, ஸ்ரேயா ருக்மிணி, ஜகதீஷ், ஹரிஸ்ரீ அசோகன், ஆனந்த் மன்மதன், அஸீஸ் நெடுமங்காடு, சித்தார்த் பரதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சரி, ‘அபயந்தர குட்டவாளி’ தரும் திரையனுபவம் எத்தகையது?
‘அ.கு.’ கதை என்ன?
தாய் (நீரஜா ராஜேந்திரன்), தந்தை (பாலச்சந்திரன் சுள்ளிக்காடு) உடன் அமைதியான வாழ்வை வாழ்ந்து வருகிறார் சகாதேவன் (ஆசிஃப் அலி).
கூட்டுறவு வங்கியில் தற்காலிகப் பணியாளராக வேலை செய்து வருகிறார். அவருக்கு நயனா (துளசி) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகிறது.
திருமணம் முடிந்த நாள் முதலே சகாதேவன் உடன் நெருக்கமாக இருக்கும் தருணங்களைத் தவிர்க்கிறார் நயனா. அவரை எந்தவிதத்திலும் துன்புறுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் சகாதேவன்.
கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேலான நிலையில், தனது தோழியுடன் சேர்ந்து நெதர்லாந்தில் மேற்படிப்பு படிக்க இருப்பதாகக் கூறுகிறார் நயனா.
‘இதை நீ கல்யாணத்துக்கு முன்னாலயே சொல்லலையே’ என்று கூறும் சகாதேவன், ‘என்கிட்ட அவ்ளோ பணம் இல்ல’ என்கிறார். உடனே, ‘என் நகைய அடகு வைக்கலாம்’ என்கிறார் நயனா. அதற்கு ‘முடியாது’ என்று சகாதேவன் சொல்கிறார்.
உடனே, அங்கிருக்கும் கண்ணாடியில் தலையை முட்டுகிறார் நயனா. அதற்கடுத்த நாள், மருத்துவமனையில் இருந்து திரும்புகிறார். தன்னைக் காண வந்த தந்தையுடன் பிறந்த வீடு செல்கிறார்.
அதற்கடுத்த நாட்களில், நயனாவைத் தாக்கியதாகச் சகாதேவன் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகிறது. அதையடுத்து, அவரை விசாரணைக்காக வரவழைக்கின்றனர் போலீசார்.
காவல் நிலையத்தில் நயனாவுக்கும் தனக்கும் திருமணமானது முதல் தற்போது வரை என்ன நடந்தது என்று விவரிக்கிறார் சகாதேவன்.

அதனைத் தொடர்ந்து, நயனாவின் நகைகளை அவரது குடும்பத்தினரிடம் போலீசார் முன்னிலையில் ஒப்படைக்கிறார்.
அதன்பிறகும், குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாகச் சகாதேவன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார் நயனா. அவர் மீது 498 ஏ சட்டப்பிரிவு (பழைய தண்டனை சட்டம்) பாய்ந்திருக்கிறது.
அந்த குற்றச்சாட்டில் இருந்து சகாதேவன் விடுவிக்கப்பட்டாரா? இந்த வழக்கைப் பொறுத்தவரை தான் ஒரு அப்பாவி என்பதை அவரால் நிரூபிக்க முடிந்ததா என்று சொல்கிறது ‘அபயந்தர குட்டவாளி’யின் மீதி.
குடும்ப வன்முறை தொடர்பான சட்டங்கள் பற்றிய விளக்கங்கள், அவை சரியாகக் கையாளப்படாமல் போனால் என்னவாகும் என்ற விழிப்புணர்வைத் தருகிறது இப்படம்.
ஆணாதிக்கப் பார்வையா?
ரேகாசித்ரம், சர்கீத் படங்களைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் ஆசிஃப் அலியின் நடிப்பில் வெளியாகும் மூன்றாவது படமிது.
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகைமையில் இருக்க வேண்டும் என்ற அவரது மெனக்கெடலுக்கு இப்படத்தில் பலன் கிடைத்திருக்கிறது. அதற்கேற்ற நடிப்பை அவர் தந்திருக்கிறார்.
நாயகியாக வரும் துளசிக்கு இதில் பெரிதாக ‘ஸ்கோப்’ தரப்படவில்லை. வழக்கறிஞராக வரும் ஸ்ரேயா ருக்மிணிக்கும் அதிக வசனங்கள் இல்லை.
ஆனால், அவர் சட்டென்று நம் மனதில் சிம்மாசனமிட்டு உட்கார்ந்து கொள்கிறார். நம்மூர் இயக்குனர்கள் இவர் பக்கம் கவனம் திருப்பலாம்.
தொண்ணூறுகளில் அஜித், விஜய், பிரசாந்தோடு விவேக், வையாபுரி, ஸ்ரீமன் போன்றவர்கள் திரிவார்களே, அதே போன்று இதில் நாயகனுடன் அஸீஸ் நெடுமங்காடு, ஆனந்த் மன்மதன் இருவரும் வந்து போயிருக்கின்றனர்.
சித்தார்த் பரதன், ஹரிஸ்ரீ அசோகன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சோகத்தை வரவழைக்கும் நோக்கில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, நீரஜாவின் காட்சிகளும் இயல்பாகத் திரையில் தெரிகின்றன.
இந்தக் கதையின் மிகப்பெரிய பலவீனம் ‘வில்லத்தனம்’ செய்பவர்கள் இவர்கள் தான் என்று சுட்டிக்காட்டாமல் நழுவியிருப்பது.
கதைப்படி பெண் வீட்டார் தான் இதில் வில்லன்களாக காட்டப்பட வேண்டும். ஆனால், நாயகியின் செயல்பாடுகள் அவரது பெற்றோருக்குத் தெரிகிறதா, இல்லையா எனத் திரைக்கதையில் விளக்கப்படவில்லை.
நாயகியின் தோழியாவது அப்படிக் காட்டப்பட்டிருக்க வேண்டும். அவருக்கான இடம் கிளைமேக்ஸில் கொஞ்சமாகத் தரப்பட்டிருக்கிறது.
நாயகியின் இன்னொரு தோழியாக ஒருவர் வந்து போகிறார். அவருக்கான இடமும் படத்தில் விளக்கப்படவில்லை.
வழக்கறிஞராக வரும் ஜகதீஷும் கூட இதில் வில்லனாகக் காட்டப்படவில்லை.
சரி, நாயகனைப் பாதிப்புக்கு உள்ளாக்கிய காரணமோ, அதன் பின்னணியோ திரைக்கதையில் விளக்கப்பட்டிருக்க வேண்டுமே? அதுவும் இப்படத்தில் இல்லை.
அப்புறம் வேறென்ன இருக்கிறது? பெண்களைக் காக்க உருவாக்கப்பட்ட சில சட்டப்பிரிவுகள் அப்பாவியான ஆண்களை நசிவடையச் செய்வதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கான விளக்கம் நிறையவே இப்படத்தில் உள்ளது.
இந்தக் கதையில் நாயகனை நாயகிக்குப் பிடிக்கவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும். மம்முட்டி, ஜோதிகா நடித்த ‘காதல் தி கோர்’ படத்துடன் இந்தக் கதையை ஒப்பிட்டிருந்தார் நடிகர் ஜகதீஷ்.

அதே போன்ற விஷயம் இதிலும் உண்டு. ஆனால், அதனைத் தெளிவுறத் திரையில் காட்டவில்லை இயக்குனர்.
அந்த ஒரு விஷயத்தை மட்டும் சரியானவாறு அணுகியிருந்தால், இப்படம் தொட்டிருக்கும் உயரம் வேறாக இருந்திருக்கும்.
அப்படிப்பட்ட சித்தரிப்பு சில சர்ச்சைகளுக்கு வழி வகுக்கும் என்று நினைத்து இயக்குனர் தவிர்த்திருக்கக் கூடும். அவ்வாறிருந்தால், ‘ஐயோ பாவம்’ என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒளிப்பதிவாளர் அஜய் டேவிட் கச்சப்பள்ளி, படத்தொகுப்பாளர் சோபின் கே சோமன், கலை இயக்குநர் சாபு ராம், பின்னணி இசை தந்த ராகுல்ராஜ் என்று பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு, வழக்கமான கதையை வித்தியாசமான பார்வையில் முன்வைக்கிற அனுபவத்தை உருவாக்கியிருக்கிறது.
பிஜிபால், ராகுல்ராஜ், முத்து, கிறிஸ்டி ஜாய் ஆகியோரின் இசையில் பாடல்கள் ஆங்காங்கே வந்து, நம்மை ஈர்க்க முயற்சித்திருக்கின்றன.
இயக்குனர் சேதுநாத் பத்மகுமார், சில அப்பாவி ஆண்கள் திருமண பந்தத்தில் முறிவைச் சந்தித்து அலைக்கழிக்கப்படுவதைக் காட்ட முனைந்திருக்கிறார். அதற்கேற்ற வகையில் முக்கியப் பாத்திரங்களைச் செதுக்கியிருக்கிறார்.
அதேநேரத்தில், எதிர்தரப்பு வாதங்களுக்குப் பின்னிருக்கும் மனிதர்களை, அவர்களது சிந்தனைகளை, செயல்பாடுகளைத் திரையில் காட்ட முயற்சிக்கவில்லை அல்லது படமாக்கப்பட்ட பின்னர் அக்காட்சிகள் ஏதோ ஒரு காரணத்தால் தூக்கிக் கடாசப்பட்டிருக்கின்றன என்றே நினைக்க வேண்டியிருக்கிறது.
அதனால், மொத்தப்படமும் ஆணாதிக்கப் பார்வையோடு உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறது இப்படம்.
அதனை மட்டும் கவனமாகக் கையாண்டு சரிப்படுத்தி இருந்தால், எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் அளவுக்கான நேர்மையை இப்படம் கைக்கொண்டிருக்கும்.
தற்போது ‘சேஃப் கேம் ஆடுகிறேன் பேர்வழி’ என்று சில கேள்விகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறது.
ஓடிடி வெளியீட்டின்போது அந்தக் கேள்விகள் விவாதத்திற்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த நேரத்தில், பொதுவெளியில் மிகப்பெரிய விவாதங்கள் எழவில்லை என்றால் அது நிகழக்கூடும்..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்