Take a fresh look at your lifestyle.

ஏ.ஆர்.எம். – டொவினோ தாமஸின் 50வது படம்!

99

பகத் பாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி, உன்னி முகுந்தன் என்று மலையாளத் திரையுலகின் இளம் நாயகர்கள் தெலுங்கு, தமிழ், இந்தி என்று வெவ்வேறு திசைகளில் தமது எல்லைகளை விரிவுபடுத்தி வரும் நிலையில், ‘இது போதும்’ என்று மலையாளப் படங்களில் மட்டுமே தனது  கவனத்தைச் செலுத்தி வருகிறார் டொவினோ தாமஸ்.

ஆக்‌ஷன், ரொமான்ஸ், டிராமா, த்ரில்லர் என்று வெவ்வேறு வகைமை படங்களில் நடித்து பிருத்விராஜ், குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா உள்ளிட்ட முந்தைய தலைமுறை நடிகர்களுக்கே ‘சவால்’ அளித்து வருகிறார் டொவினோ தாமஸ்.

அதனாலோ என்னவோ, இதோ 50ஆவது படத்தைத் தொட்டுவிட்டார்.

டொவினோவின் இந்த மைல்கல் சாதனையை நிகழ்த்தி வைத்திருக்கிறது ‘அஜயண்டே ரண்டாம் மோஷணம்’.

ஜிதின் லால் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். வரும் 12ஆம் தேதியன்று இப்படம் தியேட்டர்களில் வெளியாகிறது.

சுருக்கமாக ‘ஏ.ஆர்.எம்.’ என்றழைக்கப்படும் இப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என்று ஆறு மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியாகிறது.

டொவினோவின் தேடல்!

2012இல் வெளியான ‘பிரபுவிண்ட மக்கள்’ படத்தில் அறிமுகமானார் டொவினோ தாமஸ். தொடக்கத்தில் நாயகனின் நண்பன், குணசித்திர வேடம், வில்லன் என்று பயணித்தார்.

கூதரா, ஏபிசிடி, என்னு நிண்ட மொய்தீன், சார்லி, குப்பி என்று இது தொடர்ந்தது. துணை நடிகராக இருந்தபோது கிடைத்த நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்ட திறமே, அவரை நாயகன் ஆக்கியது.

ஒரு மெக்சிகன் அபரதா, கோதா, தரங்கம், மாயநதி என்று 2017ஆம் ஆண்டு டொவினோ நடிப்பில் வெளியான படங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறுவிதமான அனுபவங்களை ரசிகர்களுக்குத் தந்தது.

பிறகு தமிழிலும் மலையாளத்திலும் தயாரான ‘அபியும் அனுவும்’ படத்தில் நாயகனாக நடித்தார் டொவினோ தாமஸ்.

அதன் தொடர்ச்சியாக,  ’மாரி 2’வில் கங்காதர் பீஜா என்ற பெயரில் வில்லனாகத் தோன்றினார்.

அந்த காலகட்டத்தில் அவர் நடித்த ‘ஒரு குப்ரசிதா பையன்’, ‘எண்ட உம்மாண்ட பேரு’, ‘தீவண்டி’ போன்ற படங்கள், சக நாயகர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டின.

என்னதான் நாயகனாகத் தனது உயரத்தை அதிகரித்தாலும், மூத்த கலைஞர்களின் படங்களில் இடம்பெறும் வாய்ப்புகளை மறுக்காதது டொவினோவின் புத்திசாலித்தனம்.

அதன் காரணமாக மோகன்லாலின் ‘லூசிஃபர்’, ஆசிஃப் அலியின் ‘உயரே’ மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த பாதி பேர் ஒன்றிணைந்தது என்று சொல்லுமளவுக்கு இருந்த ‘வைரஸ்’ போன்ற படங்களில் அவரது இருப்பு ‘ஆவ்சம்’ ரகமாக இருக்கும்.

எவ்வளவுக்கெவ்வளவு ‘யதார்த்தமான’ பாத்திரங்களைத் திரையில் வெளிப்படுத்தினாரோ, அதற்கிணையாக ‘ஹீரோயிசம்’ காட்டும் படங்களிலும் டொவினோ நடித்திருக்கிறார். அவரது ரசிகர்களே வெறுக்குமளவுக்கு இருக்கிற ‘கல்கி’ அதற்கொரு உதாரணம்.

அதேநேரத்தில் ‘பாரன்ஸிக்’, ‘மின்னல் முரளி’ போன்ற படங்கள் அவரை நாடு முழுமைக்கும் தெரிய வைத்தன. காரணம், கொரோனா காலகட்டத்தில் வெளியான அப்படங்கள் ஓடிடி தளங்களில் பிற மொழிகளிலும் வெளியாகின.

அதிலும், ‘மின்னல் முரளி’ படம் வழக்கத்திற்கு மாறான ‘சூப்பர்ஹீரோ’ படம் என்ற அந்தஸ்தை டொவினோக்கு பெற்றுத் தந்தது.

அந்த படத்தில் வில்லனாக நடித்த குரு சோமசுந்தரத்திற்கு அவரைவிடப் பெரிதாகப் பெயர் பெற்றுத் தந்தது.

அதனை ஏற்றுக்கொள்ளும் திறமும் தெளிவும் டொவினோவிடம் இருப்பது தான் ஆச்சர்யமான விஷயம்.

அடுத்த கட்டத்திற்கு..!

2022ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான ‘தள்ளுமலா’ ஒரு ட்ரெண்ட்செட்டர் ஆக அமைந்ததோடு வசூலிலும் சாதனை நிகழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக, இடுக்கி வெள்ள பாதிப்பினை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ‘2018’ திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இதோ இப்போது ‘ஏஆர்எம்’ அடுத்த மைல்கல்லை நோக்கி நகரத் துடிக்கிறது.

இத்தனைக்கும், குறைந்த பட்ஜெட்டில் வெளியான ‘அன்வேஷிப்பின் கண்டதும்’ பல்வேறு தரப்புகளில் பாராட்டுகளைக் குவித்ததும் இந்த ஆண்டுதான் நிகழ்ந்தது.

அதுவே, ‘ஒவ்வொரு படத்திற்கும் பட்ஜெட் எகிற வேண்டும்’ என்ற எதிர்பார்ப்பு இன்றி, ‘ஸ்கிரிப்டுக்கு ஏற்ற பொருட்செலவு செய்தால் போதும்’ என்கிற அவரது புரிதலைக் காட்டும்.

கேரளாவில் 1900, 1950, 2000களில் வாழ்ந்த குஞ்சிக்கேலு, மணியன், அஜயன் என்ற மூன்று மனிதர்களை அடுத்தடுத்து காட்டவிருக்கிறது ‘ஏ ஆர் எம்’ திரைக்கதை.

விஎஃப்எக்ஸ், டிஐ பணிகள் எந்தளவுக்கு மிரட்டலாக இருக்கும் என்று தெரியாவிட்டாலும், அவை ஓரளவு திருப்தி தரும் என்கிற உத்தரவாதத்தை நம்மால் உணர முடியும்.

காரணம், இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான். இன்னும் படத்தொகுப்பாளர் ஷமீர் முகம்மது உட்படப் பல திறமையான கலைஞர்கள் இதில் அங்கம் வகிக்கின்றனர்.

கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, பசில் ஜோசப், ஜகதீஷ், கபீர் துகான் சிங், பிரமோத் ஷெட்டி, சஞ்சு சிவம், ரோகிணி, ஹரீஷ் உத்தமன், இளங்கோ குமரவேல், பாபு ஆண்டனி, அஜு வர்கீஸ், பாலசரவணன் என்று பல மொழிக்கலைஞர்கள் இதில் நடித்துள்ளனர்.

2டியில் படம்பிடிக்கப்பட்டு, பிறகு 3டி நுட்பத்திற்கு இப்படம் மாற்றப்பட்டிருப்பதாகச் சொல்கின்றனர் படக்குழுவினர். அவை ‘பொம்மைப்படம்’ என்ற உணர்வை ஏற்படுத்தாமல் இருந்தாலே, இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றுவிடும்.

எதிர்பார்ப்பு இருக்கிறதா?

மலையாள ரசிகர்களிடம் எதிர்பார்ப்பினை விதைத்திருக்கும் அளவுக்கு, பிற மொழிகளில் இப்படம் தாக்கம் ஏற்படுத்தவில்லை.

அதேநேரத்தில், சமீபத்தில் ‘ஹனுமான்’ படமும் இப்படித்தான் ‘சைலண்டாக’ வந்து ரசிகர்களை அசத்தியது என்பதையும் நாம் நினைவில் பதித்துக்கொள்ள வேண்டும்.

சுஜித் நம்பியார் எழுத்தாக்கம் செய்துள்ள இப்படத்தை ஜிதின் லால் இயக்கியிருக்கிறார். இதன் ட்ரெய்லர் ஓரளவுக்கு நம்மை திருப்திப்படுத்துகிறது.

‘அது மட்டுமே போதுமா’ என்று கேள்வி எழுப்பாத அளவுக்கு ‘ஏ ஆர் எம்’ திருப்தியைத் தர வேண்டும்.

ஓணம் விருந்தாக திரைக்கு வரும் இப்படம், பிற மொழிகளிலும் வெற்றியடைந்தால் ஒரு ‘பான் இந்தியா’ நட்சத்திரமாக டொவினோ தாமஸ் உருவெடுப்பார்.

அந்த வகையில், கன்னட நடிகர் யஷ் போன்றே இவரும் சிந்திக்கிறார்.

‘மாத்தி யோசி’ டைப்பில் டொவினோ சிந்திப்பது எந்தளவுக்கு அவருக்கு வெற்றியைத் தரும்? என்பது ‘ஏஆர்எம்’ பெறும் வரவேற்புக்குப் பிறகு தெள்ளத்தெளிவாக நமக்குத் தெரியவரும்! 

–  உதய் பாடகலிங்கம்