பாலிவுட்டில் புரட்சிக்கான ஒரு புதிய நெருப்பைப் பற்ற வைத்துள்ளார் நடிகை தீபிகா படுகோன்.
மற்ற துறைகளில் இருப்பதைப் போன்று திரைத் துறையிலும் 8 மணி நேரம் மட்டுமே வேலை இருக்கவேண்டும் என்ற அவரது கோரிக்கை, ஒரு விவாதத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
இந்தியாவில் இருக்கும் பொதுமக்களில் பலருக்கு ரிலாக்ஸ் தரும் விஷயம் சினிமா.
சினிமா பார்ப்பது, சினிமாப் பாடல்களைக் கேட்பது, சினிமா நட்சத்திரங்கள் பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் படிப்பது என பலரும் தங்களை ரிலாக்ஸ் செய்துகொள்ள சினிமாவைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் பாவம்… சினிமாக்காரர்களுக்குதான் ரிலாக்ஸ் செய்ய நேரமே இருப்பதில்லை.
ஒரு சினிமாவின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டால், அது ரிலீஸாகும் நாள்வரை கால நேரம் பார்க்காமல் வேலை பார்க்க வேண்டிய நிலையில் சினிமாக்காரர்கள் உள்ளனர்.
இதில் பலரும் படப்பிடிப்பு ஷெட்யூல் உள்ள நாட்களில் குறைந்தது 12 மணிநேரமாவது வேலை பார்க்கும் சூழல் உள்ளது.
தமிழ்த் திரையுலகைவிட பாலிவுட் இன்னும் மோசம். அங்கு நேரங்காலமெல்லாம் பார்க்காமல் பல மணிநேரம் உழைக்க வேண்டிய நிலையில் நட்சத்திரங்கள் முதல் சினிமா தொழிலாளர்கள் வரை பலரும் உள்ளனர்.

இந்த நிலையில்தான் சினிமாத் துறையிலும் 8 மணிநேர வேலை முறையைக் கொண்டுவர வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார் பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன்.
மூத்த ஹீரோக்கள் மட்டும் தங்கள் சவுகரியத்துக்கு ஏற்றார்போல் குறைந்த நேரம் வேலை செய்ய, மற்றவர்கள் அதிக நேரம் பணி செய்ய வேண்டிய அழுத்தத்துக்கு உள்ளாவதாக அவர் கூறியிருக்கிறார்.
ஆண்களுக்கு சாதகமாக திரைத்துறை இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் தீபிகா படுகோன். இதனால் சமீபத்தில் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் இழந்திருக்கிறார்.
சந்தீப் ரெட்டி வாங்காவின் ‘ஸ்பிரிட்’ மற்றும் நாக் அஷ்வினின் ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்களில் தினந்தோறும் நீண்டநேர கால்ஷீட்களை வழங்க அவர் மறுத்ததால், அப்படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆனால், அதன் பிறகும், புதிய படங்களில் 8 மணிநேரத்துக்கு மேல் தினமும் கால்ஷீட் கொடுக்க முடியாது என்பதில் அவர் திட்டவட்டமாக இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தினந்தோறும் ஒருவரை கூடுதல் நேரம் வேலை செய்ய வைப்பதைவிட, அவருக்கு போதிய ஓய்வு கொடுத்து குறைந்த நேரம் வேலை செய்ய வைத்தால் அதிக உழைப்பை அவரிடம் இருந்து பெற முடியும்” என்று தயாரிப்பாளர்களிடம் திட்டவட்டமாக சொல்லிவருகிறார் தீபிகா படுகோன்.
தீபிகாவின் இந்தக் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலால் பலரும் வேலைக்கு வந்து சேரவே நீண்ட நேரம் ஆகிறது.
அத்துடன் 12 மணிநேரம் வரை வேலையும் செய்யச் சொன்னால் எப்படி செய்வது என்ற குரல்கள் பாலிவுட்டில் ஒலிக்க தொடங்கியுள்ளன.
சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் இந்தக் கோரிக்கையை ஆதரித்துள்ளனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹிமானி சிவ்புரி இதுபற்றி கூறும்போது, “முன்பு, எட்டு மணி நேர ஷிஃப்ட் இருந்தது. ஆனால், அப்போதும் நாங்கள் கூடுதலாக வேலை செய்வோம்.

உண்மையில், அமிதாப் பச்சன் போன்ற நடிகர்கள் ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று ஷிஃப்டுகள் வரை வேலை செய்வார்கள், எட்டு மணிநேரம் என்ற கருத்தே இங்கே இருக்கவில்லை.
இன்றும் கூட, நிலைமை பெரிய அளவில் மாறவில்லை. குறிப்பாக தொலைக்காட்சியில், படப்பிடிப்புகள் முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகின்றன.
இருப்பினும், நான் எட்டு மணிநேரம் மட்டுமே வேலை செய்வதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன்” என்கிறார். இதனாலேயே அவரும் பல வாய்ப்புகளை இழந்துள்ளார்.
8 மணிநேர வேலை என்ற தீபிகா படுகோனின் கோரிக்கை, பாலிவுட் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரையுலகுகளிலும் புதிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளன.
நடிகர், நடிகைகள் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், தயாரிப்பாளர்கள் இதை எதிர்க்கிறார்கள்.
திரைப்படத் தயாரிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து, குறித்த நேரத்திற்கு வெளியேறும் வேலை அல்ல என்று பலர் வாதிடுகின்றனர்.
கணிக்க முடியாத படப்பிடிப்பு அட்டவணைகள், வெளிப்புற இடங்கள் மற்றும் வானிலை சார்ந்த காரணங்களால், கடுமையான நேர வரம்புகள் திட்டங்களைத் தாமதப்படுத்தலாம் மற்றும் செலவுகளை அதிகரிக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மொத்தத்தில் சினிமா உலகில் தீபிகாவின் கருத்து ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
– பி.எம். சுதிர்