Take a fresh look at your lifestyle.

‘வெந்து தணிந்தது காடு’ திரைபட விமர்சனம்!

210

திருச்செந்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சி எனும் கிராமத்தில் தாய், தங்கையுடன் வசித்து வருகிறார் சிம்பு. அந்த வறட்சியான கிராமத்தில் வாழும் சிம்பு, பிழைப்புக்காக மும்பைக்கு செல்கிறார். அங்கு தமிழர் நடத்தும் உணவகம் ஒன்றில் வேலைக்கு சேருகிறார். சிம்புவை போல் பிழைப்புக்காக வந்த தமிழக இளைஞர்கள் பலர் அந்த உணவகத்தில் வேலை செய்கிறார்கள். அந்த இடத்தில் உணவகத்தையும் தாண்டிய ஒரு தொழில் நடக்கிறது.  அங்கு வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் கூலிப்படையினராகவே இருக்கிறார்கள். இவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட எண்ணத்தில் இருக்கும் சிம்பு, எதிர்பாராத விதமாக தான் தங்கியிருந்த அறையில் சண்டை நடந்தபோது துப்பாக்கியை எடுத்து எதிரிகளைச் சுட்டு வீழ்த்துகிறார . சொந்த ஊரில் பிழைக்க வழியின்றி குடும்ப கஷ்டங்களை போக்குவதற்காக பிழைப்புத்தேடி மும்பை வந்து, அடிதடி கும்பலிடம் சிக்கிய சிம்புவின் வாழ்க்கை என்னவானது? என்பதுதான் மீதிக்கதை…..

இதுவரை சிம்புவை யாரும் கண்டிராத கிராமத்து இளைஞனாக உடல்மொழியை மாற்றி தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சிம்பு. ஒரு கிராமத்து இளைஞன் நகர்ப்புறத்தில் வசித்தாலும் காதலியைச் சந்தித்து தனது மனதில் உள்ளதை வெளிப்படையாக அதாவது தனது உண்மையான வயதைக் குறிப்பிட்டு பேசுவதும், சட்டையை வைத்து முகத்தை துடைத்தும் ஒரு கிராமத்து இளைஞனாகவே வாழ்ந்திருக்கிறார். மீசைகூட இல்லாமல் அச்சுஅசலான் தென்மாவட்ட இளைஞராக வருவது முதல் படிப்படியாவ வளர்ந்து ஒரு பெரும் ஆளுமையாக உருவெடுப்பது வரைஒவ்வொரு காட்சியிலும ஆச்சரியப்படுத்துகிறார் சிம்பு.

கதாநாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி, தமிழ் சினிமாவுக்கு நல்ல வரவு. அவரது கதாபாத்திர வடிவமைப்பும் சிறப்பாக இருக்கிறது.  தன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து சிறப்பு செய்து இருக்கிறார்.

ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ், வில்லன்களாக நடித்திருக்கும் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்து  படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், கதைக்கு ஏற்றபடி இருக்கிறது. பாடல்கள் அனைத்திலும் பழைய பாடல்களின் பாதிப்பு இருக்கிறது.

சித்தார்தாவின் ஒளிப்பதிவு மும்பையின் இருண்ட  உலகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. சண்டைக்காட்சிகள் இயல்பாக இருப்பதற்காக கேமராவை கையில் வைத்து எடுத்திருப்பது வியக்க வைக்கிறது.

ஜெயமோகனின் கதைக்கு திரைக்கதை வசனத்தை கெளதம் மேனனும் சேர்ந்து எழுதியிருக்கிறார். இயக்குநர் கெளதம் மேனனின் பாணி தனியாக தெரிந்தாலும், ஜெயமோகனின் எதார்த்தமும் இணைந்திருப்பது வித்தியாசமாக இருக்கிறது.

ஒரு வாழ்க்கைப் பயணம் நீரோடைபோல் ஓடும் இந்தப்படத்துக்கு சிம்புவின் நடிப்பும் துடிப்பும் இருப்பதால் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை அனைவரும் பார்க்கலாம்.