தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவரான சித்து குமார், சசி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், சித்தார்த் ஆகியோரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த சித்து குமார் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராக உருவெடுத்து பல முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
மேலும், “அடி போலி…” என்ற தனியிசை வீடியோ பாடலை இசையமைத்து இயக்கிய சித்து குமார் அப்பாடல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்ததோடு, தமிழ் சினிமாவின் பிஸியான இசையமைப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.
மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ’கண்ணை நம்பாதே’, சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘நூறுகோடி வானவில்’, விவேக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 13, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம், போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிக்கும் படம், அறிமுக இயக்குநர் ஹரி இயக்கத்தில் ரியோ ராஜ் நடிக்கும் படம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வரும் சித்து குமார் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் விரைவில் இடம் பிடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இசையமைப்பாளர் சித்து குமாருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ஊட்டியை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி ராஜி என்பவரை சித்து குமார் மணக்கிறார். ராஜி அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் மனிதவளம் மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றுகிறார்.
பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட சித்து குமார் – ராஜி திருமணம் வரும் செப்டமர் 9 ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது.