Take a fresh look at your lifestyle.

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா

169

பிரசாத் லேபில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ். ஏ.சந்திரசேகர் ,இயக்குநர் மிஸ்கின், இயக்குனர் பேரரசு நடிகர்கள் விமல், மற்றும் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. செயலாளர் ஆபிரகாம் வரவேற்புரை வழங்கினார்.. பின்னர் இயக்குநர் பேரரசு பேசுகையில்,
திருப்பாச்சி, சிவகாசி துவங்கி பல நினைவுகளை பகிர்ந்து கொண்டவர் . மிஸ்கின் குறித்து பேசுகையில் உங்கள் படம் எடுக்கும் முறை வேறு எங்களுடைய முறை வேறு ‘நீங்கள் எதார்த்தம் நாங்கள் பதார்த்தம்’ என எதுகை மோனையோடு பேசியவர் சிவகாசி வெளியான தீபாவளியன்று எப்படிப்பட்ட மகிழ்ச்சியை அனுபவித்தாரோ அதே மகிழ்ச்சியை இப்போது இந்த நிகழ்வில் கலந்துகொண்டதில் அனுபவிக்கிறேன் என பகிர்ந்து கொண்டார்.

பேரரசை தொடர்ந்து இயக்குநர் மிஸ்கின் பேசுகையில்,
சினிமாக்காரர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் இருக்கும் உறவு கணவன் மனைவி உறவு போல், அவ்வப்போது அடித்துக் கொள்வோம் அவ்வப்போது சேர்ந்து கொள்வோம். ஆனால் இருவரும் சேர்ந்து வாழ்வது மட்டும் தான் ஒரே வழி. தினம் தினம் சண்டையிட்டு இருக்கிறோம் தினம்தினம் கட்டி அணைத்து இருக்கிறோம் ஆனால் நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை.
இயக்குனர் பேரரசு பேசுகையில் எங்களைப்போல் படம் எடுக்க முடியாது என்று கூறினார். நான் சொல்கிறேன் உங்களைப் போல் இந்த ஸ்பாட் வசனம் என்னால் எழுதவே முடியாது. எதார்த்தம் பதார்த்தம் இந்த எதுகை மோனை இதெல்லாம் எனக்கு வரவே வராது. என்றவர் விஷால் பிரச்சனை குறித்து மேலும் சில வார்த்தைகள் பேசினார். எனக்கும் விஷாலுக்கும் இடையே நடந்த சண்டை அதை முடித்துக்கொள்வோம். அவர் உழைப்பாளி நல்லவர் நன்றாக இருந்து விட்டுப் போகட்டும். ஏதோ ஒரு கோபத்தில் நான் திட்டியதும் அவர் திட்டியதுமாக அந்த பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைத்து விடுவோம். அவரை விட்டு நான் வந்துவிட்டேன் என்பதே விஷாலுக்கு கோபம் , அவ்வளவு அன்பு செலுத்தியும் எனக்கு இப்படி செய்துவிட்டாரே என்று நான் திட்ட என இப்படித்தான் இந்த சண்டை வளர்ந்துகொண்டே இருக்கிறது. இனி சண்டை வேண்டாம் பத்திரிக்கையாளர்களே நீங்களும் நல்ல விஷயங்களை எழுதுங்கள் தவறா அப்போதே சுட்டிக் காண்பித்து தட்டிக்கொடுங்கள். இத்தனை வருடங்களில் என் ஒவ்வொரு படத்திற்கும் மிகச்சரியான விமர்சனங்களை உங்களிடமிருந்து நான் பெற்றிருக்கிறேன். அந்த வகையில் உங்களின் விழாவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு படம் வெற்றி அடைந்தால் தொடர்ந்து பல படங்கள் மாபெரும் வெற்றி அடையும் நாற்பத்தி ஐந்து வருடங்களாக சினிமாவுக்கு மட்டுமே உழைத்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் 500 கோடி வசூல் பெற எனது வாழ்த்துக்கள். என மனதார சொன்ன மிஸ்கின் சென்ற வருடம் தான் ஒன்றரை லட்சம் இந்த சங்கத்திற்கு நிதி கொடுப்பேன் என்று கூறியிருந்தார். அதன்படி இந்த வருடம் தீபாவளி நிகழ்வையும் சேர்த்து மேலும் 50 ஆயிரத்துடன் 2 லட்சம் கொடுக்கிறேன்.
என்று பேசி முடித்தார் மிஸ்கின் சொன்னபடியே தனது நண்பரை அழைத்து மேடையிலேயே வாக்குறுதியை நிறைவேற்றினார்.
தொடர்ந்து பேசிய விமல் இனி நான் சிறப்பாக செயல்பட இந்த மேடை உதவும்..இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தமைக்கு நன்றி என்றார்.. நடிகர் பாலா பேசும் போது, தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் தீபாவளி பரிசு கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துக் கொண்டார். மேலும் அண்ணாத்த திரைப்படம் என் அண்ணனின் இயக்கத்தில் நிச்சயம் இந்த வருடம் வெற்றியடையும் மேலும் பல வருடமாக நான் பிறந்த தமிழ் மண்ணில் தீபாவளி பொங்கல் போன்ற விழாக்களில் நான் நடித்த திரைப்படம் வெளியாக அதோடு இணைந்து கொண்டாடி மகிழ வேண்டும் என நினைத்தேன் இந்த வருடம் அது சாத்தியப் பட்டிருக்கிறது அண்ணாத்த படத்தில் எனக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது எனக் கூறி அமர்ந்தார் நடிகர் பாலா.
நிகழ்ச்சியின் நிறைவாக பேசிய தயாரிப்பாளர் இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.ஏ.சந்திரசேகர்,

மிஸ்கின் பேசுகையில் கணவன் மனைவி உறவு போல் சினிமாக்காரர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் உண்டான உறவை கூறினார். எனக்கு பத்திரிகையாளர்கள் நண்பர்கள். நண்பர்கள் மாலை நேரத்தில் இணைந்தால் எப்படி பேசிக் கொள்வார்களோ அப்படித்தான். விடிந்து எழுந்தால் நீ என்ன பேசினாய், நான் என்ன பேசினேன் என்று தெரியாது. அந்த அளவிற்கு சண்டையிட்டுக் கொள்வோம் அதே சமயம் கட்டி அணைத்துக் கொள்வோம். அப்படிப்பட்டவர்களின் விழாவில் என்னை அழைத்து சிறப்பு செய்ய தலைவி கவிதா கேட்டுக்கொண்டபோது எல்லோரும் உதவி இருக்கிறார்கள் நான் ஏதும் செய்யவில்லையே என்றேன், அதற்கு கவிதா நீங்கள் விழாவிற்கு வந்திருந்து சிறப்பு செய்தாலே போதுமானது என்று சொன்னாலும் என்னால் முடிந்த ஒரு சிறு உதவியை இந்த மேடையில் கொடுக்க விரும்புகிறேன். என்றவர் மேடையிலேயே ரூ.50,000 தொகையை தலைவி கவிதா மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கி சிறப்பு செய்தார்.
தொடர்ந்து பேசிய சந்திரசேகர் தனது பாதையில் பத்திரிக்கையாளர்கள் பங்கு எந்த அளவிற்கு முக்கியமானது என பல நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதேபோல் ஒரு படைப்பாளி நினைத்தால் களிமண்ணையும் அழகான பானையாக்க முடியும் எனில் விமல் நீ மிஷ்கினை பிடித்துக் கொள் உன்னை மிகப் பெரிய நடிகனாக மாற்ற மிஸ்கின் போன்ற படைப்பாளியால் முடியும் என்றார். உண்மையான உழைப்பு இருந்தால் அழகு ஒரு பொருட்டே இல்லை. என் மகனுக்கு நான் வெறும் ஒரு ஒத்தையடிப் பாதை தான் போட்டுக் கொடுத்தேன் இன்று எட்டு வழிச்சாலை அளவிற்கு என் மகன் உயர்ந்திருக்கிறார் என்றால் அவரின் உண்மையான உழைப்புதான். அப்படித்தான் திரு. ரஜினிகாந்த் உண்மையான உழைப்புதான் அவர்களை இந்த உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. சினிமாவைப் பொருத்தவரை உண்மையாக உழைத்தால் ஒருநாள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயரத்தில் கொண்டு போய் சேர்க்கும் என மேடையில் இருந்த பாலா மற்றும் விமல் இருவரையும் வாழ்த்தி தான் இயக்குநராக இருந்த காலத்தில் பேரரசு மற்றும் மிஸ்கின் இருவருடனான நினைவுகளை நினைவு கொண்டவர் இப்படிப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துக் கொண்டார்.

சங்க தலைவி கவிதா அவர்கள் பேசும்போது
சங்கத்திற்காக ஏடிஎம் கார்டையே கொடுத்து வேண்டியதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்ன உயர்ந்த உள்ளம் படைத்த பிரபலங்கள் ,
நேரடியாக தேவையான பொருட்களுக்கு அந்தந்த கடைகளுக்கு Google pay செய்த பிரபலங்கள் மற்றும் பலவிதமாக ஸ்பான்சர் செய்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் கடமைப்பட்டிருக்கிறது. நோட் போட்டு நாம் வசூலிக்கவில்லை. நட்பு ரீதியில் என்ன தேவையோ அதை செய்தார்கள். அதில் குறிப்பிட்ட சில பெயர்களை மேடையில் சொல்லி இன்னும் பல உதவிகள் செய்ய இருக்கும் அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சங்கத்தின் தலைவி கவிதா சொல்லிய மிக முக்கியமான ஒரு விஷயம் பத்திரிக்கையாளர்களுக்கு பல முக்கிய பிரபலங்களிடம் அன்புடன் சில உதவிகளை கேட்டேன் பல நல்ல உள்ளங்கள் என்னவேண்டும் என்று தாராள மனசுடன் முன்வந்தார்கள் ஒவ்வொன்றாக எரும்பு சேகரிப்பது போல் சேகரித்து தனித்தனியாக பிரித்து வைத்து ஒட்டு மொத்தமாக அதை நம் சங்க பத்திரிக்கையாளர்களுக்கு வழங்குவதில் ஒட்டுமொத்த சங்கமும் பெருமைப்படுகிறது என்று சந்தோஷமாக பேசினார்..

உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பாக உறுப்பினர்களுக்கு சங்க வைப்புத் தொகையில் இருந்தும், சிறப்பு விருந்தினர் வழங்கியதொகையில் இருந்தும் ஒரு பகுதி வழங்கப்பட்டது. மேலும் வேட்டி சட்டை,புடவை, உயர் தர மைசூர்பா ,முந்திரி, ஏலம், சர்க்கரை, எண்ணெய், நெய், குளோப்ஜாமுன் ரெடி மிக்ஸ்,பட்டாசு போன்றவை தீபாவளி பரிசாக வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் விழாவில் எதார்த்தமாக பேசியது நம் மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தது..

விழாவை சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறி நாட்டுப்பண்ணுடன் விழா முடிந்தது..